Published : 11 Aug 2024 07:04 AM
Last Updated : 11 Aug 2024 07:04 AM

ஒலிம்பிக் கற்றுத் தந்த பாடங்கள்!

பிரம்மாண்டமாகத் தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு விழாவை எட்டியுள்ளன. கடந்த அரை மாத காலத்தில் களத்திலும் களத்துக்கு வெளியேயும் மகிழ்ச்சி, சோகம், ஏமாற்றம், கொண்டாட்டம், ஆச்சரியம் எனப் பல உணர்வுகளின் வெளிப்பாடு இருந்தது. விளையாட்டு என்பது வெற்றியைப் பற்றியது மட்டுமல்ல, அதையும் தாண்டி மதிப்புமிக்க பண்புகளைக் கற்றுத்தரக்கூடியது என்பது பல தருணங்களில் உண்மையானது.

நம்பினால் நாளை உண்டு

ஒலிம்பிக் போட்டிகளில் பல விளையாட்டுகள் இருந்தாலும் ஆண்கள் 100 மீ. ஓட்டம் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி. பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீ. ஓட்டத்தின் இறுதிச்சுற்றில் போட்டியிட்ட அனைவரும் மின்னல் வேகத்தில் ஓடி, 10 நொடிக்குள் போட்டியை முடித்தனர். 9.79 நொடிகளில் எல்லையைக் கடந்து அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கப் பதக்கம் வென்றார். இவருக்கும் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜமைக்காவின் கிஷேன் தாம்சனுக்கும் 0.005 நொடிகள்தான் வித்தியாசம்!

27 வயதான நோவால் லைல்ஸ், போட்டியில் வென்றிருந்தாலும் தடகள நாயகன் உசேன் போல்ட்டின் உலக சாதனையை (9.58 நொடிகள்) முறியடிக்க முடியவில்லை. இருந்தாலும் ஒலிம்பிக் 100 மீ. ஓட்டத்தில் வெற்றிபெற்றதன் மூலம் ‘உலகின் வேகமான மனிதர்’ ஆனார் நோவா லைல்ஸ். போட்டி முடிந்த பிறகு ‘எக்ஸ்’ தளத்தில், “எனக்கு ஆஸ்துமா, ஒவ்வாமை, மன அழுத்தம், டிஸ்லெக்ஸியா எனும் கற்றல் குறைபாடு போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், நான் என்ன சாதிக்க நினைக்கிறேன் என்பதை இவை தீர்மானிப்பதில்லை. என்னால் முடியும்போது உங்களால் முடியாதா?” எனப் பதிவு செய்திருந்தார். இதுதான் இலக்கு என நிர்ணயித்து ஓடுபவருக்கு வாழ்க்கையில் சிக்கல்கள் வரலாம். பல நேரம் மனச்சோர்வு, உடல் ஆரோக்கியமின்மை போன்ற காரணங்களால் ‘நம்மால் முடியாது’ என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கும். அப்போது எழும் அவநம்பிக்கையால் நமது உழைப்பு தடைபட்டுப் போக வழிவகுக்காமல், நம்பிக்கையோடு போராடினால் நாளை நம் வசமாகும்.

நேர்மறை எண்ணங்கள்

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த லாரென் ஹென்றி, ஹன்னா ஸ்காட், லோலா ஆண்டர்சன், ஜார்ஜி பிரேஷா ஆகியோர் அடங்கிய பெண்கள் அணி படகுப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது. ஒலிம்பிக் படகுப்போட்டியில் நான்கு பேர் கொண்ட பெண்கள் பிரிவில் பிரிட்டனுக்குத் தங்கம் கிடைப்பது இதுவே முதல் முறை. வெற்றி பெற்ற அணியைச் சேர்ந்த லோலா ஆண்டர்சன், 2012 லண்டன் ஒலிம்பிக் நிகழ்வைப் பார்த்த பின்பு, தன்னுடைய 13 வயதில் டைரியில் இப்படி எழுதியிருக்கிறார்: “என் வாழ்க்கையில் மிகப் பெரிய கனவு என ஒன்று இருந்தால் அது ஒலிம்பிக்கில் படகுப்போட்டியில் பங்கெடுத்து பிரிட்டனுக்குத் தங்கம் வென்றுத்தர வேண்டும்”.

சில நாள்களுக்குப் பிறகு இந்தக் கனவை எண்ணிச் சிரித்துக்கொண்ட லோலா, டைரியின் பக்கத்தைக் கிழித்துப் போட்டுள்ளார். ஆனால், லோலாவின் தந்தை டான் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. குப்பையில் கிடந்த அந்தக் காகிதத்தை எடுத்து லோலாவின் கைகளில் தந்து, கனவை நனவாக்கப் பாடுபடச் சொல்லியிருக்கிறார். தந்தை கொடுத்த உத்வேகத்தால் இலக்கில் கவனம் செலுத்திய லோலாவின் கைகளில் இன்று தங்கப் பதக்கம். நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள், எப்படி இருக்க விரும்புகிறீர்கள், என்ன சாதிக்க நினைக்கிறீர்கள் என்பதை எழுத்தில் பதிவு செய்யும்போது மனதிலும் அது ஆழமாகப் பதிந்துவிடும். எப்போதெல்லாம் எதிர்மறை எண்ணங்கள் எழுகிறதோ, அப்போதெல்லாம் அவற்றைக் களைய நேர்மறை எண்ணங்களைப் படித்து எண்ண ஓட்டத்தை மாற்ற முயலலாம்.

கடைசி வரை போராடு

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பொறுத்தவரை, பாட்மிண்டன் விளையாட்டில் பதக்க எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற பி.வி சிந்து, சாத்விக் - சிராக் இணை மீது அனைவரது கவனமும் இருந்தது. இந்தியாவின் பதக்க நம்பிக்கையாகக் கருதப்படாதபோதும், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி வரை முன்னேறி கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார் 22 வயதேயான இளம் வீரர் லக் ஷயா சென். ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னிலை வீரரான டென்மார்க்கின் விக்டர் அக்செல்சென்னுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வெளிப் படுத்திய தன்னம்பிக்கையும், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மலேசியாவின் லீ சி ஜியாவுக்கு எதிரான போட்டியில் பளிச்சிட்ட போராட்ட குணமும் லக் ஷயாவின் அடையாளமாகின.

வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைக்கும் பட்சத்தில், உங்கள் மீது நம்பிக்கை கொண்டு உற்சாகப்படுத்த யாருமில்லாதபோது துவண்டுபோகக் கூடாது. யார் என்ன நினைத்தாலும், நீங்கள் நிர்ணயித்த இலக்கை நோக்கி முன்னேறுவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். சவாலான போட்டித் தேர்வு அல்லது கடினமான நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், புற உலகில் நிலவும் கவனச் சிதறல்களுக்குச் செவிசாய்க்காமல் படிப்பில் முழு கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்.

முயற்சி வெற்றி தரும்

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆடவர் 50 மீ. ஏர் ரைபிள் (3 பொசிஷன்) பிரிவில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார் ஸ்வப்னில் குசாலே. ஒலிம்பிக்கில் இப்பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் இவர். மகாராஷ்டிர மாநிலம் கோலாபூர் மாவட்டத்திலுள்ள கம்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்த ஸ்வப்னில், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் 2012 முதல் பங்கேற்றுவரும் இவர், 2016, 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்ச்சி பெற முடியாமல் போனது. ரயில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றிக்கொண்டே முயற்சியைக் கைவிடாத ஸ்வப்னில், தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்திவிட்டார்.

முதல் முயற்சியிலேயே அனைவருக்கும் வெற்றி கைகூடுவது இல்லை. முடியாது என எண்ணி உங்களது இலக்குகளைச் சுருக்கிட வேண்டாம். தோல்வியின் ஒவ்வொரு படியிலும் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு, தவறுகளைச் சரி செய்து, முன்னேறிச் செல்ல வேண்டுமென்கிற முனைப்போடு இயங்கினால் காலம் தாமதப்படுத்தினாலும் ஒரு நாள் கண்டிப்பாக இலக்கை அடைய முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x