Published : 14 Oct 2017 10:26 AM
Last Updated : 14 Oct 2017 10:26 AM

சொந்த வீடு நூலகம்: விடுதலைப் பத்திரம் என்பது என்ன?

நத்தம் புறம்போக்கு என்றால் என்ன?

நத்தம் புறம்போக்கு என்பது வருவாய்த் துறையினர் ஏற்படுத்தும் வகைப்படுத்துதல். இவ்வாறு வருவாய்த் துறை ஒரு நிலத்தை அல்லது இடத்தை, நத்தம் என்று வகைப்படுத்தும்போது அதைச் சிலருக்கு உரிமைப்படுத்த வழங்கப்படும் ஆவணம்தான், மனைவாரிப்பட்டா ‘நத்தம் பட்டா’. இவ்வாறான பட்டாக்கள்,

1. சொந்த வீட்டு மனை இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்படும்

2. நீண்ட நெடுங்காலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குடிசை அல்லது வீடு கட்டி அனுபவித்து வருபவருக்கு அவர் அனுபவத்தை அங்கீகரிக்கக் கொடுக்கப்படும்.

இவ்வகையான பட்டாக்கள் அரசு அலுவலர்களால் தயாரிக்கப்பட்டு அமைச்சர்களால் அல்லது அரசு உயர் அலுவலர்களான மாவட்ட ஆட்சித் தலைவர், கோட்டாட்சித் தலைவர் அல்லது வட்டாட்சியர் மூலமாகவோ அளிக்கப்படும். நத்தம் செட்டில்மெண்ட் சர்வே திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு வட்டாட்சியர், பட்டாவில் கையெழுத்திடும் அலுவலர் ஆவார்.

நத்தம் பட்டா என்பது உரிமை ஆவணம் என்பதால் அதன் அசல் அழிந்து போகாமல் காக்கப்பட வேண்டிய ஆவணம் ஆகும்.

விடுதலைப் பத்திரம் என்பது என்ன?

ஆவணம் மூலம் மட்டுமே ஒருவர் சொத்தின் உரிமையைப் பெற முடியாது. சொத்தில் கூட்டு உரிமை உள்ளவர்களில் ஒருவர் பெயருக்கு மற்ற பங்குதாரர்கள் தங்கள் உரிமையை விடுதலை செய்து அதன் மூலம் ஒருவர் முழு உரிமை பெறுவது இவ்வகை ஆவணங்களின் நோக்கமாகும். எனவே, விடுதலைப் பத்திரம் என்பது தனிப்பட்ட முறையில் ஒரு உரிமை ஆவணம் என்று கருதப்படவில்லை.

பட்டா, சிட்டா நகல் என்பது என்ன?

ஒருவர் சொத்தின் சுவாதீனத்தில் உள்ளாரா? என்பதைக் கண்டறிய சில ஆவணங்கள் உள்ளன. நிலத்தைப் பொறுத்தமட்டில் பட்டா மற்றும் சிட்டா நகல் சுவாதீனம் குறித்த ஆவணங்கள். 1970-களில் வருவாய்த் துறையினர் நிலத்தின் சொந்தக்காரர்களின் அனுபோகம் குறித்து சிவப்பு, மஞ்சள், மற்றும் பச்சை நிறங்களில் பட்டா புத்தகங்கள் கொடுத்தனர். 1980-களில் நில உடைமை மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் நிலங்களின் அனுபோகங்கள் கண்டறியப்பட்டு ஒரு பட்டா வழங்கப்பட்டது. நில உடைமை மேம்பாட்டுத் திட்டம் 01.06.1976 முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு 30.04.1987-ல் முடிவுற்றது. அவ்வகைப் பட்டாக்கள் யுடிஆர் பட்டா என அழைக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x