Published : 16 Sep 2017 11:35 AM
Last Updated : 16 Sep 2017 11:35 AM
டெ
ல்லி என்றால் செங்கோட்டை. செங்கோட்டை என்றால் சுதந்திர தினக் கொடியேற்றம். குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டிலிருந்து பிரதமரின் பேச்சு. நம் எல்லோருக்குள்ளும் படிந்திருக்கும் காட்சிகள் இவைதான் இல்லையா?
ஆனால், செங்கோட்டை என்றால் உங்களுக்கு ஷாஜகான் ஞாபகத்துக்கு வந்தால், உங்களுக்குள் இருக்கும் வரலாற்றாசிரியரை நீங்கள் வாழ்த்திக் கொள்ளலாம்!
ஆம், 1638 – 1649-க்கு இடைப்பட்ட காலத்தில் தாஜ்மகாலைக் கட்டிய அதே ஷாஜகானால்தான் செங்கோட்டையும் கட்டப்பட்டது.
பூமியில் உள்ள சொர்க்கம்
யமுனை நதிக்கரையில் சிவப்பு மணற்கற்களையும் மார்பிள்களையும் கொண்டு இந்தக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. கோட்டைக்குள் விலை மதிப்புமிக்கக் கறுப்பு மார்பிள் கற்களைப் பதித்து, சுவர்களில் செவ்வக வடிவிலான பலகை போன்ற வடிவங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இப்படிச் செய்யும் உத்தியை, ‘பியத்ரா துரா’ என்றழைக்கின்றனர். இந்தியாவில் இது ‘பர்ச்சின்காரி’ என்று சொல்லப்படுகிறது.
கோட்டைக்குள் உள்ள அரண்மனைகள் எல்லாம் வெள்ளை மார்பிள் கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. சுண்ணாம்பால் அந்தச் சுவர்கள் பிளாஸ்டர் செய்யப்பட்டிருப்பதால், அவை ஒரு முப்பரிமாண தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. அந்தச் சுவர்களைப் பார்ப்பவர்களை மயக்கும் விதமாக ‘ஸ்டக்கோ வேலைப்பாடுகள்’ செய்யப்பட்டிருக்கின்றன.
செங்கோட்டைக்குள்ளிருக்கும் முக்கியமான அரண்மனைகளில் ஒன்று ரங் மஹால். இங்கு ‘பிஷ்டாக்’ எனும் கட்டிட அமைப்பைப் பார்க்க முடியும். இவை விளக்கு மாடமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
கோட்டை, அரண்மனையின் வாயில்களில் அரைவட்ட வடிவங்களைக் கொண்ட நுழைவுவாயில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த வகையான வடிவமைப்பை ‘தாந்தேதார் மிஹ்ராப்’ என்று அழைக்கின்றனர். ஷாஜகான்தான் இத்தகைய வடிவமைப்பைக் கண்டுபிடித்தார் என்றும், எனவே இதற்கு ‘ஷாஜகானி வளைவு’ என்ற பெயர் உண்டு என்றும் சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
நுழைவுவாயில்கள், விதான மண்டபங்கள், அரங்கங்கள், அரண்மனைகள், கடைத் தெருக்கள், தோட்டங்கள் எனப் பலவகையான கட்டிட வடிவமைப்பு அம்சங்களை எல்லாம் ஒரே இடத்தில் காண்பதற்குச் செங்கோட்டைதான் பொருத்தமான இடம். எனவேதான் அமிர் குஸ்ரோ எனும் பாரசீகக் கவிஞர், ‘பூமியில் உள்ள சொர்க்கம்’ என்றார். அவரின் கவிதை வரிகள் சில கோட்டைக்குள்ளிருக்கும் அந்தரங்கப் பகுதியான ‘திவான் இ காஸ்’ எனும் அரங்கத்தில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
தலைநகரக் கோட்டை
ஆக்ராவிலிருந்து விலகி டெல்லியைத் தனது தலைநகராக ஷாஜகான் கொண்டபோது, கட்டப்பட்டதுதான் இந்தச் செங்கோட்டை. எண் கோண வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோட்டையை, உஸ்தாத் அஹ்மத் லஹோரி என்பவர் கட்டியிருக்கிறார். அன்றைய டெல்லியின் ஆளுநராக இருந்த கைராத் கான் என்பவர் அந்தக் கட்டிடப் பணிகளை மேற்பார்வை செய்திருக்கிறார்.
செங்கோட்டைக்குள் சுமார் 16 கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் அலங்காரத்தன்மையுடன் விளங்கும் ஒரு கட்டிடம் ‘திவான் இ காஸ்’ எனும் கட்டிடம்தான். இது ஷாஜகானின் அந்தரங்கக் கட்டிடம் ஆகும். ‘ஷாஜகான் கட்டியதிலேயே மிகவும் அலங்காரத்துடன் விளங்கும் ஒரு கட்டிடம் இதுதான்’ என்கிறார் பிரபலக் கட்டிடக் கலைஞர் ஃபெர்கூசன். வெள்ளை மார்பிள் கற்களால் மண்டபம், அதே கற்களில் தூண்கள், தரையில் கார்னேலியன் உள்ளிட்ட கற்களைக் கொண்டு மொசைக் வேலைப்பாடுகள் எனப் பல அற்புதங்களை இந்தக் கட்டிடம் கொண்டிருக்கிறது. இந்த அரங்கத்தில் இருந்த மேடையில்தான் ஷாஜகானின் மயில் சிம்மாசனம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
1857-ல் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் நிகழ்ந்த ‘சிப்பாய்ப் புரட்சி’யின்போது மிக முக்கியப் பங்காற்றியது செங்கோட்டை. அங்கிருந்த பகதூர் ஷா சஃபர் எனும் கடைசி முகலாயப் பேரரசர், அன்றைய ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். நேதாஜி தோற்றுவித்த இந்திய தேசியப் படை வீரர்களை, இங்கு வைத்துத்தான் ஆங்கிலேயர்கள் விசாரணை செய்தார்கள்.
பிறகு, 1947-ம் ஆண்டு இந்தக் கோட்டையில் பறந்த ஆங்கிலேயக் கொடி கீழிறக்கப்பட்டு, இந்தியக் கொடி பறக்கவிடப்பட்டது. இந்தியர் கைகளுக்கு நாடு வந்துவிட்டது என்பதைக் காட்டவே, இங்கு முதன்முதலில் நமது தேசியக் கொடி பறந்தது. தேசியக் கொடியை ஏற்றிவைத்து, முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு உரையாற்றினார். சுதந்திர தினத்துக்குச் செங்கோட்டையில் கொடி ஏற்றும் வழக்கம் இப்படித்தான் தொடங்கியது.
இப்படிப் பல வரலாற்றுப் பெருமைகளோடு, முகலாயக் கட்டிடக் கலையின் ஓர் உதாரணமாகத் திகழும் இது, உலக பாரம்பரியப் பகுதியாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT