Published : 10 Dec 2016 09:30 AM
Last Updated : 10 Dec 2016 09:30 AM
உலகின் மிக முக்கியமான ரியல் எஸ்டேட் மையம் துபாய். தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளும் துபாய் ரியல் எஸ்டேட்டில் முதலீடுசெய்யப் போட்டிபோடுகின்றன. ஆனால் துபாய் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இந்திய முதலீட்டாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள். சமீபத்தில் வெளியாகியுள்ள துபாய் நிலத் துறையின் அறிக்கை (Dubai Land Department Report) அதை நிரூபிக்கிறது.
பொதுவாக துபாய் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகள் வெறும் பாலைவனமாக இருந்து கண்களைக் கவரும் நவீன நகரங்களாக மாற அங்கிருந்த எண்ணெய் வளம்தாம் காரணம். ஆனால் அது சாத்தியப்பட்டதற்குக் காரணம் இந்தியர்களின் உழைப்புதான். உலகின் மிக உயரமான கோபுரங்களை துபாய் உருவாக்கியதன் பின்னணியில் இந்தியத் தொழிலாளர்களின் பங்கும் உள்ளது. அதே இந்தியர்கள் துபாய் ரியல் எஸ்டேட் முதலீட்டிலும் இப்போது முதன்மை வகிக்கிறார்கள்.
இந்திய முதலீட்டாளர்கள் 2016 முதல் அரையாண்டில் சுமார் 13,600 கோடி இந்தியப் பணத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளனர் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்திய ரியல் எஸ்டேட் தொய்வடைந்த நிலையில் துபாயில் அதிகமாக முதலீடு செய்துவருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. 2011-ம் ஆண்டிலிருந்து இந்தியர்கள் துபாயில் முதலீடு செய்வது அதிகரித்தவண்ணம் இருந்துள்ளது. அது கடந்த ஆண்டு மிக அதிகமாக 10 சதவீதம் கூடுதலானது. சென்ற ஆண்டு மட்டும் 37 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளார்கள்.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரிட்டிஷார் துபாயில் அதிகம் முதலீடு செய்துள்ளனர். கடந்த ஆண்டும் இங்கிலாந்துதான் இரண்டாம் பெரிய முதலீடு செய்த நாடாக இருந்தது. இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் 7,344 கோடி ரூபாயை பிரிட்டிஷார் முதலீடு செய்துள்ளனர்.
துபாய் நிலத் துறையின் அறிக்கையின்படி இவர்கள் 26,000 நிலப் பரிமாற்றங்களின் மூலம் 10,2000 கோடி ரூபாய்க்கு முதலீடு நடந்துள்ளது.
துபாயைப் பொறுத்தவரை வாடகையில் அதிக வருமானம் தரக்கூடியது என உலக ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கருதுகிறார்கள். லண்டன், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நகரங்களைக் காட்டிலும் துபாயில் இரு மடங்கு லாபம் வாடகையின் மூலம் கிடைக்கிறது. மேலும் அங்குள்ள வரி இல்லாச் சூழல் முதலீட்டாளர்களுக்கு மிகுந்த லாபம் தரக்கூடியதாகவும் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT