Published : 24 Dec 2016 11:51 AM
Last Updated : 24 Dec 2016 11:51 AM

வீடு, வாசல், கதவு...

மழை, வெயில், பனி போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத்தான் மனிதன் வீடுகளை உருவாக்கினான். தொடக்கக் காலத்தில் வீடுகளுக்கு வாசல்கள் இருந்தன. ஆனால், கதவுகள் இல்லை. தான் சேமித்த உடைமைப் பொருள்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் வந்தபோதுதான். கதவுக்கும் பூட்டுக்குமான தேவை எழுந்தது. கூட்டமாக இருந்த மனிதன் சாம்ராஜ்ஜியங்களை உண்டாக்கியபோது கோட்டைகள் கட்டப்பட்டு அதற்குப் பிரம்மாண்டமான வாயில்கள் உருவாக்கப்பட்டன. பாதாள அறைகள் கட்டப்பட்டு எளிதில் திறக்க முடியாத கதவுகளால் அவை மூடப்பட்டன.

சாமானியர்கள் இயற்கையிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மரப் பலகைகள், மூங்கில் சட்டங்கள் போன்றவற்றை ஒரு மறைப்பாகப் பயன்படுத்தினர். அறிவியல் வளர்ச்சியால் கதவு தயாரிப்பு எளிதான பிறகு எல்லோரும் கதவுகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இன்று கதவுகள் பலவிதமான வடிவங்களில் மரம், இரும்பு, கண்ணாடி, அலுமினியம் எனப் பலவிதமான மூலப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் பிரபலமான வகைகள்:

சட்டகக் கதவு

ஒரு மரச் சட்டகத்தை உருவாக்கி அதன் நடுவில் தகரம், மரம், சிமெண்ட் பிளேட் ஏதேனும் ஒன்றை வைத்துத் தயாரிக்கப்படும் கதவு. இது குறைந்த விலை வீடுகளுக்கு ஏற்றது.

தானியங்கிக் கதவு

இந்த வகை தொழில் நுட்ப அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. அதாவது இந்த வகைக் கதவைத் தள்ளித் திறந்தால் அது தானாக அடைத்துக்கொள்ளும். அதற்கான செயல் நுட்ப அமைப்பு அந்தக் கதவின் மேல் புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இது அலுவலகங்களுக்கும் கடைகளுக்கும் ஏற்றது.

கண்ணாடிக் கதவு

இது பயன்படுத்தப்படும் பொருளை வைத்துப் பிரிக்கப்படும் வகை. முழுக்க கண்ணாடியால் ஆன கதவுகளும் உண்டு. அல்லாது சரி பாதி அளவு கண்ணாடியும் சரி பாதி அளவு மரமும் கொண்டும் இந்த வகைக் கதவுகள் உருவாக்கப்படுகின்றன. இந்த வகைக் கதவு அலுவலகங்களுக்கும் வீட்டின் உள் அறைகளுக்கும் ஏற்றவை.

கவிகை அடுக்குக் கதவு

இந்த வகைக் கதவில் சிறிய அளவில் வெளிச்சம் வரும் அளவில் இருக்கும். அதே சமயம் உள்ளிருப்பவர்கள் வெளியே தெரியாதபடி இருக்கும். கழிவறை, குளியலறையின் ஜன்னல்கள் போல் கீழ் நோக்கு மடிப்பு கொண்டதாக இருக்கும். இவை தலைவாசல் கதவுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பலகைக் கதவு

மரச் சட்டகத்தின் நடுவே மரப் பலகை கொண்டு உருவாக்கப்படுகிறது இந்த வகைக் கதவுகள். இவை மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கதவு வகை. தலை வாசல் கதவுக்கு ஏற்றது.

அலுமினியக் கதவு

இது பயன்படுத்தப்படும் பொருளைக் கொண்டு பிரிக்கப்படும் ஒரு வகை. அலுமினியத்தைச் சட்டகமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன இந்தக் கதவுகள். மையப் பொருளாகவும் அலுமினியப் பலகை பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகைக் கதவு தொழிற்சாலைகள், அலுவலகங்கள் ஆகிவற்றுக்கு ஏற்றது.

- விபின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x