Published : 26 Nov 2016 09:42 AM
Last Updated : 26 Nov 2016 09:42 AM

பிளாஸ்டிக் கழிவுகளில் கட்டிடம்

முன்பெல்லாம் கடைக்குச் செல்லும்போது பொருள்கள் வாங்குவதற்கான பையுடன்தான் செல்வோம். திடப் பொருள்கள் வாங்க துணி, வயர் பைகளைப் பயன்படுத்தினோம். திரவப் பொருள்கள் வாங்க தகர டின், வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரம், வெண்கலப் பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தினோம். பிளாஸ்டிக் என்னும் பொருள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துவிட்டது அந்தப் பொருள். இந்தப் பொருளில் உள்ள தீங்கு, இது மக்காத தன்மை கொண்டது.

இன்றைக்கு உலகம் முழுவதும் உருவாகும் பிளாஸ்டிக் குப்பை பல லட்சம் டன்கள். இந்தக் குப்பைகளையெல்லாம் எப்படி மறுசுழற்சி செய்வது என்பதைக் குறித்துப் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளை மறு உபயோகப்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை நம்மால் ஓரளவு மேலாண்மை செய்ய முடியும். எந்த வகையில் மறு உபயோகப்படுத்தலாம் என்றால், அலங்காரப் பொருள்களாகப் பயன்படுத்தலாம். வீட்டுத் தோட்டத்துக்கான தொட்டியாகப் பாவிக்கலாம். இவை இல்லாது பெரும் அளவுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களை மறு உபயோகப்படுத்தச் சிறந்த வழிமுறை கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்துவது ஆகும்.

இது இப்போது மேலை நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் பரவலாகி வருகிறது. பெப்சி, ஃபாண்டா, பாட்டில்களைச் செங்கலுக்கு மாற்றாகப் பயன்படுத்திச் சிறிய அளவிலான வீடுகள் அங்கு கட்டப்படுகின்றன. இந்த நுட்பம் இப்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் சில இந்த முறையில் சிறிய அளவிலான வீடுகளைக் கட்டியுள்ளன. உதாரணமாக, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் இந்த முறையைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் முதலில் ஒரே அளவுள்ள பாட்டில்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை முதலில் மண்ணால் நிரப்பி அதைத் திடப்படுத்துகிறார்கள். அப்படி பாட்டில்களைத் தேர்ந்தெடுக்கும்போது அவை ஒரே நிறமாக இருந்தால் அழகாக இருக்கும். அலங்கார வளைவுத் தூண் அமைக்கப் பல்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தலாம். பாட்டில்களின் வாய்ப் பகுதி உள்ளே இருப்பதுபோல அடுக்கி மரபான முறைப்படி சிமெண்ட்டை பாட்டில்களுக்கு இடையில் பூசிக் கட்டிடம் கட்டப்படுகின்றன. இம்மாதிரி கட்டிடங்கள் அலுவலகங்கள், அகதிகள், வீடற்றோருக்கான குடில்கள் ஏற்படுத்தவும், பாடசாலைகள் அமைக்கவும் ஏதுவானதாக இருக்கும்.

நைஜீரியாவில் சுற்றுலாவாசிகளைக் கவர்வதற்காக இம்மாதிரியான பிளாஸ்டிக் பாட்டில்களில் வீடுகள் கட்டப்படுகின்றன. நவீன வசதிகளும் வீடுகளும் இதில் அடக்கம். வரவேற்பறை, கழிவறை, சமையலறை, படுக்கையறை ஆகியவை அடங்கிய பாட்டில் வீடு நைஜீரியாவில் யெல்வா கிராமத்தில் பிரபலம். 78 ஆயிரம் பாட்டில்களைக் கொண்டு இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

பாட்டில்களை வைத்துக் கட்டுவதால் அறைக்குள் நல்ல வெளிச்சம் வரும். அதனால் மின்சக்தி அதிகம் செலவாகாது. இவை அல்லாது கூரையில் பாட்டில்களைப் பதிக்கும்போது அதன் உடல் பகுதியில் செடிகள், புற்களை வளர்க்கலாம். இதனால் வீட்டுக்குள் குளிர்ச்சியாக இருக்கும். பாட்டில்கள் கொண்டு அலங்கார வளைவுகள் அமைக்கலாம். பூந்தொட்டிகள் செய்யலாம். வீட்டுக்கான அழகு சாதனப் பொருள்களும் செய்யலாம்.

- ஆர்.கே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x