Published : 01 Oct 2016 12:54 PM
Last Updated : 01 Oct 2016 12:54 PM
சென்னை போன்ற மாநகரங்களில் வாழ்க்கை தேடி குடியேறுபவர்களின் தலையாய பிரச்சினை இருக்க ஒரு வீடு. வாடகையானாலும் சரி சொந்த வீடானாலும் சரி இப்படித்தான். இந்நிலையில் சென்னையில் சிறுகச் சிறுகச் சேமித்துச் சொந்தமாக ஓர் அடுக்குமாடி வீடு வாங்கிக் குடியேறுவதற்குள் வாழ்க்கை நம்மை ஒரு வழி செய்துவிடுகிறது.
அப்படி வீடு வாங்கும்போது வீடு விலை குறைவாக இருக்கிறது, அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது என சட்டென வாங்கிவிட முடிவெடுக்கக் கூடாது. எல்லா வசதிகளும் முறையாக உள்ளனவா, குழந்தைகளுக்கான பள்ளிகள், கடைகள், மருத்துவமனைகள் உள்ளனவா எனப் பார்க்க வேண்டியதும் அவசியம். இவற்றை வாங்குவோர் ஒரு முறைக்கு இரு முறை சோதித்துக்கொள்ள வேண்டும்.
ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதற்கு முன்னர் அது தொடர்பான ஆவணங்களைப் பார்ப்பதில் நாம் ஓரளவு கவனத்துடன் இருப்போம். அதைப் போலவே அதன் அமைவிடம் குறித்தும் சிறிது அக்கறை செலுத்த வேண்டும். குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறாத பகுதியாக இருக்க வேண்டும். பொதுவான அமைதி நிலவ வேண்டும்.
இவற்றை அக்கறையோடு விசாரித்து வீடு வாங்காவிட்டால் பின்னர் அனுதினமும் அல்லல் ஏற்பட்டுவிடும். குழந்தைகளுக்குத் தேவையான நல்ல பள்ளி அருகில் உள்ளதா என்பதைக் கேட்டறிய வேண்டும். அருகில் பள்ளி உள்ளபோது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதும் அழைத்து வருவதும் பெரிய சிக்கலின்றி முடிந்துவிடும்.
வாகனத்தில் செல்லும் அளவுக்கு தூரமான இடத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பைச் சிறு குழந்தைகள் கொண்டோர் தேர்வு செய்வது ஆரோக்கியமானதல்ல. தினமும் குழந்தைகள் பள்ளி சென்று வரும் வரை அநாவசியக் கவலைகளுடன் இருக்கும்படி ஆகிவிடும்.
அடுத்ததாக அன்றாட பயன்பாட்டுக்கு அவசியமான, தரமான உணவுப் பொருள்களும், உணவுகளும் கிடைக்கும்படியான வணிக வளாகங்கள் அருகில் உள்ளபடியான அடுக்குமாடிக் குடியிருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படி அமையாத அடுக்குமாடி குடியிருப்பைத் தேர்வு செய்து விட்டால் தினந்தோறும் சிறு சிறு சிக்கல் ஏற்படும்.
அவசரத்துக்குத் தேவையான பொருளை வாங்க அரை கிலோ மீட்டர் செல்ல வேண்டியதிருந்தால் வீட்டின் அமைதி குலைந்துவிடும். எனவே இது விஷயத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என ஒத்திவைத்து விட்டால் சிரமம்தான் இல்லத்தைச் சூழும்.
அதேபோல் அடுக்குமாடி குடியிருப்புகளை ஒட்டிய இடங்களில் தொழிற்சாலையோ ஒலி ஏற்படுத்தும் இடங்களோ இல்லாமல் இருப்பது முக்கியம். இதில் அசிரத்தையாக இருந்துவிட்டால் வீட்டில் குடியேறிய பின்னர் தினமும் இந்தச் சத்தம் மூளையைக் குடைய ஆரம்பித்துவிடும்.
அதே போல் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு அதை நிறுத்தி வைக்கப் போதுமான, வசதியான நிறுத்துமிடம் அவசியம். ஓரளவு விலை அதிகமான அடுக்குமாடிக் குடியிருப்பில் இதைப் போன்ற வசதிகளைப் பார்த்துப் பார்த்து செய்துவிடுகிறார்கள். ஆனால் புறநகர்ப் பகுதிகளில் ஊருக்குள்ளே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இதைக் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
இவற்றையெல்லாம் சோதித்தறிந்து வீடு வாங்கி குடியேறினாலும் சில விஷயங்களில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுக்குமாடி வீட்டில் குடியிருப்பவர்கள் அருகிலுள்ள வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்ற கவனத்துடன் இருப்பதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு.
எல்லா இடங்களையும் இப்படிச் சொல்லிவிட முடிவதில்லை. ஒருவருக்கொருவர் அனுசரனையுடன் நடந்துகொள்ளும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் மாநகரத்தில் உள்ளன. அப்படி எல்லா அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களும் ஒற்றுமை பேணும் பட்சத்தில் அடுக்குமாடி என்பது உண்மையிலேயே சமரசம் உலவும் இடமாகவே மாறும்.
நகரத்து வாழ்க்கையில் ஒவ்வொருவர் வாழ்வும் மற்றொருவரின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. தனித் தனியே பிரிந்து இருப்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையுடன் செயல்பட்டால் நமது பல சிக்கல்களுக்கு எளிதில் தீர்வு கண்டுவிடலாம். நமது அடுக்குமாடி வாழ்க்கையை ஓரளவு அமைதியாக அமைத்துக்கொள்ள நாம் சிறிது சமரசங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT