Published : 21 May 2016 03:37 PM
Last Updated : 21 May 2016 03:37 PM
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மீர் நகரத்துக்கு அருகில் கட்டப்பட்ட ஒரு கோயில் உலகக் கட்டுமானத் துறையை வியக்கவைத்திருக்கிறது. இது இந்துக் கடவுளான சிவனுக்கான கோயில்.
அந்தப் பகுதி மக்களுக்காக இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆர்க்கி டெய்லி என்னும் கட்டுமானத் துறை சார்ந்த இதழ் இந்தக் கட்டிடத்தைத் தன் இதழில் கவனப்படுத்தியுள்ளது.
பொதுவாக கோயில் கட்டிடக் கலைக்குப் பிரசித்திபெற்ற நாடு. வட இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான கோயில்கள் பல உள்ளன.
சமீப காலத்தில் கட்டப்படும் கோயில்களில் பழங்காலக் கோயில்களில் உள்ள கலை நேர்த்தி இருப்பதில்லை. வீடுகளை, கட்டிடங்களைப் போல் கோயிலையும் வெறும் கான்கிரீட் கூடமாக உருவாக்கிவிட முடியாது. கோயில் என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்லாது, அது ஆன்மாவுடன் நெருக்கம் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.
அதனால் வழக்கமான கட்டிடக் கலையில் இருந்து விலகிக் கட்ட வேண்டும் என இந்தக் கோயிலை வடிவமைத்த ஸ்பேஸ் மேட்டர் நிறுவனத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
இதற்காக முதலில் ராஜஸ்தான், டெல்லி, ஜாகேஸ்வர் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு நேரில் சென்று அங்குள்ள கட்டிடக் கலையை ஆய்வுசெய்துள்ளனர். மேலும் மரபான கோயில் கலைகள் குறித்த புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுத்துள்ளனர்.
கோயில்களை உருவாக்கும் திறன் மிக்கக் கட்டுநர்களைச் சந்தித்து ஆலோசனைகள் கேட்டுள்ளனர். அதனடிப்படையில் கோயிலை உருவாக்கத் தொடங்கினர். முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையில் கட்டவும் தீர்மானிக்கப்பட்டது.
ராஜஸ்தானுக்கெனத் தனி நிறம் இருக்கிறது; செம்மஞ்சள் நிறம். அந்த நிறத்தைக் கோயில் பிரதிபலிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஜெய்சால்மீர் பகுதியிலேயே கிடைக்கும் கற்களைக் கொண்டே இந்தக் கோயில் கட்டப்பட்டது.
ஊரில் பெயரோடு சேர்த்து, ஜெய்சால்மீர் மஞ்சள் கல் என அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் கடவுளான சிவன், சக்தியின் பாதி. ஆக இந்த இரு சக்திகளையும் காண்பிக்க வேண்டும் என்பதற்கான யோசனைகள் ஆலோசனை செய்யப்பட்டன.
கல்லையும் ஒளியையும் கொண்டு காண்பிக்க ஆலோசிக்கப்பட்டு முழுக்க ஜெய்சால்மீர் மஞ்சள் கற்கள், உள்ளே சூரிய ஒளி வருவதற்கான இடைவெளியுடன் கட்டப்பட்டது. இந்த இரு சக்தியின் வெளிப்பாடு கோயில் கட்டுமானத்தில் பிரதிபலிக்கும்படி வடிவமைக்கப்பட்டது.
அதனால் பகல் வேளைகளில் இயற்கையான வெளிச்சத்தில் ஒளி வீசும் வண்ணம் கட்டப்பட்டது.
இந்தக் கட்டுமானத்தில் நவீனக் கட்டுமானக் கலைஞர்கள் பணிபுரிந்திருக்கிறார். ஆனால் முன்னுதாரணமாக மரபான கட்டுமானக் கலையைக் கொள்ளப்பட்டது.
இதன் மூலம் இந்தக் கட்டிடம் பழமையின் அழகும் புதுமையின் நுட்பமும் கலந்த கட்டிடமாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT