Published : 21 May 2022 06:05 PM
Last Updated : 21 May 2022 06:05 PM

கட்டிட வேலையைக் கவனிக்கவும்

வீடு பலருக்கும் லட்சியக் கனவு. ஆனால் வீடு கட்டும் விஷயத்தில் கட்டுநரையே பெரிதும் நம்புவர். அவரிடம் பணியை ஒப்படைத்தாகிவிட்டது. இனி எல்லாம் அவரே பார்த்துக்கொள்வார் என விட்டுவிடுவர். ஆனால், கட்டுமானப் பணியின்போது நம் தலையீடும் கண்காணிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும். இது நம் வீட்டின் தரத்தை அதிகரிக்க நிச்சயம் உதவும்.

வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், வர்ணம் என ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.

பலரும் தரமான கட்டுமானப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் கட்டுமானக் கலவையில் கலக்கப்படும் தண்ணீரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு கலந்துள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெல்ல அரிமானத்துக்கு உள்ளாகும். அதனால் குடிநீரில் வீடு கட்ட வேண்டுமா என நினைக்க வேண்டாம். அதிகம் உப்பு கலக்காத தண்ணீராக இருப்பது அவசியம். முடிந்தால் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரைப் பரிசோதனை செய்து பார்த்து அது கட்டுமானத்துக்கு உகந்ததா எனப் பார்த்துக் கொள்வதும் முக்கியம்.

கட்டுநர்கள் கட்டுமானப் பொருள் வாங்க ஒவ்வொரு வர்த்தக நிறுவனத்தைத் தேர்வு செய்து வைத்திருப்பார்கள். எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி தரம் முக்கியம். எனவே வாங்கும் பொருட்களைச் சோதித்துப் பார்க்கத் தவற வேண்டாம். ஒரு கட்டிடம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் சிமெண்டால்தான் அதை உறுதி செய்ய முடியும். சிமெண்ட் தரமானதா என்பதை அதன் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிடலாம். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட் என்கிறார்கள் கட்டுநர்கள்.

நல்ல சிமெண்டை இப்படியும் சோதிக்கலாம். சிமெண்ட் மூட்டைக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்கும். அப்படி இருந்தால் அது நல்ல சிமெண்ட். இதேபோலத் தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்டைப் போடும்போது ஒருவேளை அது மிதந்தால் தரமற்றது என்று அர்த்தம்.

சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். சிமெண்ட் மூட்டையை வாங்கும்போது ரேண்டமாக மூட்டைகளின் அளவீடுகளைச் சரிபார்க்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை இருந்தால் அனுமதிக்கலாம். அதற்கு மேல் வேறுபாடு இருந்தால், விசாரிப்பும் கண்காணிப்பும் அதிகம் தேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x