Published : 07 May 2016 12:42 PM
Last Updated : 07 May 2016 12:42 PM

இல்லத்தை இப்படியும் வடிவமைக்கலாம்

வீடு கட்ட வேண்டும் என்றவுடனேயே, ‘இன்டிரீயர் டிசைனர்’ தேடுவதைத்தான் முதல் வேலையாகப் பெரும்பாலானோர் நினைப்போம். ஆனால், ராஜீமணிக்குத் தன்னுடைய வீட்டைத் தானே வடிவமைக்க வேண்டும் என்ற ஆசை. அவருடைய ஆசைக்கு வீட்டில் உள்ளவர்களும் உறுதுணையாக இருக்கவே, ஐம்பது ஆண்டு கால பாரம்பரியமான வீட்டை இடித்துவிட்டு, அவரே முழு வீட்டையும் தன் ரசனைக்கேற்ற மாதிரி வடிவமைத்திருக்கிறார். தற்போது ராஜீ மணிக்கு எழுபது வயது. அவர் வடிவமைத்த வீட்டுக்கு இருபத்தைந்து வயது. சென்னை நுங்கம்பாக்கம்வாசிகளுக்கு ‘கணேஷ் க்ருபா’வைத் தெரியாமல் இருக்காது. அதுதான் ராஜீ மணி அவர் வீட்டுக்கு வைத்திருக்கும் பெயர்.

நுங்கம்பாக்கத்தில் பலதடவை இந்த வீட்டைக் கடந்துபோயிருக்கிறேன். ஒவ்வொரு தடவை கடந்து போகும்போதும் எவ்வளவு அழகாக மரங்களின் நிழலோடு பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் வடிவமைத்திருக்கிறார்கள், நிச்சயம் இந்த வீட்டுக்கு ஒரு கதை இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன். ஆனால், அந்த வீட்டின் கதையைக் கேட்கும் வாய்ப்பு நேரடியாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. வாயிலில் பலவிதமான பிள்ளையார் சிலைகளும், டெரகோட்டா சிலைகளும், பிரம்மாண்டமான கல், மரத் தூண்களும், கதவுகளும் வசீகரிக்கின்றன.

“இந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கதை இருக்கிறது. அது எல்லாவற்றையும் கேட்க உங்களுக்கு இன்று ஒருநாள் போதாது” என்று சொல்லித்தான் வீட்டுக்குள் அழைத்துப்போனார் ராஜீ மணி. வீட்டுக்குள் நுழையும்போதுதான், வீட்டுக்கு ஒரு பெரிய பித்தளை மணியையே ‘காலிங் பெல்’லாக வைத்திருப்பதைக் கவனித்தேன். “இங்கே இருக்கும் சின்னச் சின்னப் பொருளைக்கூட வீட்டின் ஒட்டுமொத்த அலங்காரத்தோடு ஒத்துப்போகும்படிதான் வடிவமைத்திருக்கிறேன்” என்று நான் மணியை வித்தியாசமாகப் பார்த்ததைக் கவனித்து விளக்கமளித்தார் ராஜீ.

பாரம்பரியத்தின் பெருமை

காரைக்குடி கேரளக் கட்டிடப் பாணியைப் பிரதிபலிக்கும் வெளிப்புறத் தோற்றத்துடன் இந்த வீடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பாரம்பரியமான கட்டிடக் கலைகளையும், கலைப்பொருட்களையும் நினைவுபடுத்தும் பொருட்கள் வீட்டின் எந்தப் பக்கம் திரும்பினாலும் இருக்கின்றன. “எங்களுடைய பழைய வீட்டில் ஐம்பது தேக்குக் கதவுகளும், ஐம்பது ஜன்னல்களும், நிறைய பித்தளை, வெண்கலப் பாத்திரங்களும் இருந்தன. அவற்றையெல்லாம் அப்படியே சீரமைத்து எங்களுடைய புதுவீட்டுக்குப் பயன்படுத்திக்கொண்டோம். எந்தவொரு மரத்தையும் வீணாக்கவில்லை. கதவின் நடுப்பாகம் உடைந்துபோயிருந்ததால், அதன் இரண்டு ஓரப் பகுதிகளையும் வெட்டி, பூஜையறையின் ஒரு பகுதிக்குப் பயன்படுத்தியிருக்கிறோம். இப்படி எல்லாப் பொருட்களையும் சீரமைத்து ஏதோவொரு வகையில் எங்கள் புது வீட்டுக்கு உபயோகிக்கும்படி மாற்றிக்கொண்டேன். அதுதான் எங்கள் வீட்டின் பாரம்பரிய அழகின் ரகசியம்”என்று சொல்கிறார் ராஜீ. அவர் சொல்வதை அவரது சமையலறை கேபினெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. ஏனென்றால், அந்த கேபினெட்டுகள் அவருடைய பழைய வீட்டின் மைசூர் தேக்கு ஜன்னல்.

ஊஞ்சல்கள் ராஜ்ஜியம்

வீட்டின் எந்தப் பக்கம் திரும்பினாலும் மர ஊஞ்சல்கள் மரத்தின் எழிலைப் பறைசாற்றியபடி தொங்குகின்றன. வீட்டில் வெளிச்சமும், காற்றுவசதியும் இருக்கும் இடங்களில் எல்லாம் எப்படியோ ஒருவிதத்தில் ஊஞ்சலைப் பொருத்தியிருக்கிறார் இவர். சமீபத்தில் புதிதாக வடிவமைத்திருக்கும் படுக்கையறையிலும் உதய்பூர் ஓவியத்துடன் ஓர் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறது. “எங்கள் வீட்டில் கிட்டத்தட்ட ஏழு ஊஞ்சல்கள் இருக்கின்றன. எங்களுடைய பழைய மனைக்கட்டை, தொட்டில்கள் போன்றவற்றைத் தூக்கிப்போடாமல் அவற்றையே ஊஞ்சலாக மாற்றியிருக்கிறேன். எதை எப்படி இணைத்துப் பயன்படுத்தலாம் என்றுதான் பெரும்பாலும் யோசித்துக்கொண்டிருப்பேன். அதன் விளைவுதான் இந்த ஊஞ்சல்கள்” என்கிறார் ராஜீ.

வெளிச்சத்தின் ரகசியம்

இந்த வீட்டின் இன்னொரு அழகு, எந்தப் பக்கம் திரும்பினாலும் வெளிச்சத்துக்கும் காற்றுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. அதற்குக் காரணம் வீட்டின் பிரெஞ்சுக் கதவுகள். வெளிச்ச விரும்பிகளுக்கு இவை, பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று சொல்லும் இவர், “வீட்டின் சுவர்ப் பகுதியைக் குறைத்து பெரிய பிரெஞ்சுக் கதவுகளைப் பொருத்தினால், வெளிச்சத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய தேவையிருக்காது. எங்கள் வீட்டில் சாத்தியமான இடங்களில் எல்லாம் ஜன்னல்களையும், கதவுகளையும் பொருத்தியிருக்கிறேன். அவற்றையும் பழைய மாடியின் ஜல்லி கூஜாக்களை வைத்து வடிவமைத்திருக்றேன்” என்கிறார். அத்துடன், இவருடைய வீட்டின் பிரம்மாண்டமான மரக்கதவுகளுக்கும் தனிக் கதைகள் இருக்கின்றன. சிபி ராமசாமி வீட்டின் கதவு ஒன்றும் இவர் வீட்டில் இருக்கிறது.

எல்லையற்ற கலை ரசனை

வித்யோதயா பள்ளி ஆசிரியையாக இருந்த ராஜீ மணிக்குக் கலைப்பொருட்களைச் சேகரிப்பதில் எப்போதுமே ஆர்வம் அதிகம். இவருடைய கணவர் எல்ஐசியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். “வீட்டைக் கட்டிமுடித்த பிறகு, அதை வடிவமைப்பதற்காகவே வேலையை விட்டுவிட்டேன். என் கணவர் பணிநிமித்தமாகப் பயணம் செல்லும்போதும் சரி, சாதாரணமாகச் சுற்றுலா சென்றாலும் சரி, அங்கேயெல்லாம் எனக்குப் பிடித்த கலைப்பொருட்களை வாங்கிக்கொள்வேன். பயணங்களில் நான் பார்க்கும் கட்டிட வடிவமைப்புகளையும் தொகுத்துக்கொள்வேன். அவற்றை எங்கள் வீட்டின் கட்டிடக் கலையில் பயன்படுத்திக்கொள்வேன். வீட்டில் நூற்றுக்கணக்கில் இருக்கும் பிள்ளையார் சிலைகளும், விதவிதமான மணிகளும், விளக்குகளும் அப்படி வாங்கியவைதான். என்னுடைய இந்தக் கலை ரசனையை என் கணவரும், குழந்தைகளும் புரிந்துகொண்டு ஊக்கமளித்ததால்தான் இந்த அளவுக்கு வீட்டை அலங்கரிக்க முடிந்தது” என்று சொல்கிறார் ராஜீ.

ஜெய்ப்பூர் அரண்மனையின் தாக்கத்தில் இவர் வீட்டின் தூண்களை வடிவமைத்திருக்கிறார். தஞ்சாவூர் ஓவியங்கள், ராஜஸ்தான் ஓவியங்களின் அம்சங்களையும் வீட்டின் கண்ணாடி ஓவியங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அத்துடன், கழிவறையிலும் ஜெய்ப்பூர் ஓவியங்களை நினைவுபடுத்தும் டைல்ஸைப் பதித்துள்ளார்.

இந்த வீட்டின் தரைத் தளத்துக்குப் பெரும்பாலான அறைகளில் ‘ஆத்தங்குடி டைல்ஸை’யும், சுவர்களுக்குக் காவிநிற டைல்ஸையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். “மார்க்கெட்டில் இப்போது குறைவான விலையில் கிடைப்பது நம்முடைய பாரம்பரியமான ஆத்துங்குடி டைல்ஸ்தான். அத்துடன், கடையில் இது சுற்றுச்சுவருக்கு மட்டும் பயன்படுத்தும் டைல்ஸ் என்று சொன்னால், உடனே அதை அதற்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்துவிடாதீர்கள். உங்களுக்குப் பிடித்த இடத்தில் வீட்டில் அதைப் பயன்படுத்தலாம். அப்படித்தான் என் வீட்டில் பயன்படுத்தியிருக்கிறேன்” என்று தன்னுடைய வீட்டின் தனித்துவத்தைப் பட்டியலிடுகிறார் ராஜீ.

எதையும் பழைய பொருட்கள் என்று தூக்கிப் போடாமல் நூறு ஆண்டுகள் பழமையான பித்தளைக் குடங்களைக்கூட வீட்டு அலங்காரத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறார். சமையலறையில் இருக்கும் மட்பாண்டங்கள், எல்லா அறைகளிலும் இருக்கும் பொருட்கள் இந்தியக் கலைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் பார்த்த உணர்வைத் தருகின்றன. வீட்டை விட்டு வெளியே வரும்போது, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்த ஒருவித மனத்திருப்தியைத் தருகிறது ராஜீ மணியின் வீடு.

படங்கள்: க.ஸ்ரீபரத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x