Published : 02 Apr 2016 11:34 AM
Last Updated : 02 Apr 2016 11:34 AM
இந்தியா முழுவதும் சில ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் இறங்கு முகம் கண்டது. சென்னை போன்ற பெரு நகரங்களிலும் வீடுகளும் வீட்டு மனைகளும் விற்கப்படாமல் மிகப் பெரிய தேக்க நிலையை இந்தத் துறை சந்தித்தது. இந்நிலையில் சென்னையின் ரியல் எஸ்டேட் வளமுள்ள தென் சென்னைப் பகுதி மழை வெள்ளத்தால் மூழ்கிப் போனது ரியல் எஸ்டேட் துறைக்கு மேலும் பின்னடைவானது. இந்தப் பின்னணியில்தான் ரியல் எஸ்டேட் துறை முதலீட்டுக்கான அடுத்த நிலை நகரமான கோயம்புத்தூர் மீது முதலீட்டாளர்களின் கவனம் குவிந்தது.
சென்னையை மையப்படுத்தி ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் கொட்டப்பட்டு வந்த முதலீடுகள், தற்போது மூதலீட்டாளர்களை அடுத்தகட்ட நகரங்களை தேர்வுசெய்ய வைத்துள்ளது. இதில், கோவை, மற்ற நகரங்களைக் காட்டிலும் முன்னணியில் இருப்பதாகக் கூறுகின்றனர் கட்டுமானப் பொறியாளர்கள்.
இது போன்ற ஒரு தருணத்தில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள கட்டுமான நிறுவனங்கள், கட்டுமான பொறியாளர்கள் தயாராகி வரும் நிலையில், கோயமுத்தூர் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் ‘கான்ஃபேர்’ (CONFAIR 2016) என்னும் பெயரில் வரும் ஏப்ரல் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையில் நடைபெற உள்ள கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
“கோயமுத்தூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ‘கான்மேட்’ என்ற பெயரில் தேசிய அளவில்தான் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்தி வந்தோம். நடப்பு ஆண்டு முதல் இன்னும் விரிவுபடுத்தி சர்வதேச அளவில் நடத்த முடிவெடுத்து ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.
கோவை கொடிசியா சர்வதேச வர்த்தகக் கண்காட்சி மையத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் வர்த்தக இலக்கு கடந்த காலத்தைக் காட்டிலும் பலமடங்கு அதிகமாகும் என்பது எங்களது கணிப்பு. காரணம், கடந்த 3 ஆண்டுகளாகக் கட்டுமான வளர்ச்சி எதிர்பார்த்தபடி இல்லை. ஆனால், இந்த ஆண்டு தொடக்கம் முதல் நல்ல வளர்ச்சியைக் காண முடிகிறது. மாநகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும், புற நகரிலும் கட்டுமானம் பெருகி வருகிறது. சென்னையைச் சேர்ந்த பல ஐடி நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை இங்கு விரிவுபடுத்தி வருகின்றனர்” என கோயமுத்தூர் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் என்.குருவாயூரப்பன் கூறினார்.
புறநகர்ப் பகுதிகளில் தனி வீடு கட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதுபோன்ற சூழலில் கட்டுமானப் பொறியாளர்களையும் - முதலீட்டாளர்களையும் இணைக்கும் விதமாக இந்தக் கண்காட்சியை விரிவுபடுத்தியுள்ளார்கள். முதலீட்டாளர்களுக்கு வேண்டிய எல்லாத் தகவல்களையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் இந்தக் கண்காட்சியை ஒருங்கிணைத்துள்ளனர்.
இந்தக் கண்காட்சியில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து பல கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. மொத்தம் 350 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. தமிழகம், பாண்டிச்சேரியில் உள்ள 75 கட்டுமான பொறியாளர் சங்கங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் பங்கேற்கின்றனர்.
புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரூ உள்ளிட்ட நகரங்களுக்கு அடுத்தபடியாக கட்டுமானதுறை தொடர்பான கண்காட்சி கோவையில்தான் முதலாம் ஆண்டாக நடைபெற இருக்கிறது.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த குருவாயூரப்பன், “இரு ஆண்டுக்கு ஒருமுறை இத்தகைய கண்காட்சியை நடத்த முடிவெடுத்துள்ளோம். கட்டுமானப் பொறியாளர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் தொழில்நுட்பக் கருத்தரங்குகள் 3 நாட்களும் நடத்தப்பட உள்ளன. முதலீட்டாளர்கள், கட்டுமானம் மேற்கொள்ள உள்ள பொதுமக்கள் தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கட்டுமான நிறுவனங்கள் அமைக்க உள்ள அரங்குகள் 90 சதவீதம் பதிவாகிவிட்ட நிலையில், அரங்குகள் அமைக்க விரும்பும் முக்கியமான நிறுவனங்களுக்காக 10 சதவீதம் கையிருப்பில் உள்ளது. இதற்காக எங்களை அணுகலாம்” என்றார்.
“கட்டுமானப் பொறியாளர்களை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்லவும், முதலீட்டாளர்கள் கட்டுமானத் துறை குறித்த தகவல்கள், மூலப்பொருட்கள் குறித்த விவரங்களைத் தெரிந்து கொண்டு செயல்பட வைக்கவும் இந்த நிகழ்ச்சி பங்களிக்கும். எப்படியும் லட்சம் பேர் கூடுவார்கள். அதற்கேற்ப வர்த்தக விசாரணை மற்றும் வர்த்தக பரிமாற்றம் இருக்கும்.
இன்றைய சூழலில் பசுமை கட்டிடங்கள், சூரிய மின்சக்தியுடன் கூடிய கட்டிடங்கள் கட்டுவது பெருகி வரும் நிலையில், அதற்கான முதலீடுகள், தொழில்நுட்பம் குறித்து விளக்குகிறோம். கட்டுமானம் தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்ப்பது எப்படி போன்றவற்றை விளக்குகிறோம் என்றார் கோயமுத்தூர் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் துணைத் தலைவரும், கண்காட்சியின் தலைவருமான ஆர்.சரவணராஜா. மேலும் ‘FACECON’ என்னும் பெயரில் ஒரு கண்காட்சியும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT