Published : 23 Apr 2016 12:29 PM
Last Updated : 23 Apr 2016 12:29 PM
நகரமயமாதல் முன்பு எப்போதையுடன் இன்றைய காலகட்டத்தில்தான் அதிகரித்துவருகிறது. மக்கள் பல்வேறு தேவையின் பொருட்டு மக்கள் நகரங்களை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். மேலும் இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு கிராமமாக இருந்த ஊர் இன்றைக்கு பெரிய நகரமாக இல்லாவிட்டாலும் சிறுநகரமாக மாறியிருக்கிறது. நகரங்கள், மாநகரங்களாகவும், மாநகரங்கள், பெரு நகரங்களாகவும் மாறியிருக்கின்றன.
தமிழ்நாடு அதிவேகமாக நகரமயமாகிவரும் மாநிலமாக இருக்கிறது. இங்கே சுமார் மூன்றைக் கோடிப் பேர் நகரத்தில் வசித்துவருகிறார்கள். இவ்வளவு பேருக்கும் குடியிருக்க வீடு தேவைப்படுகிறது. இந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய மாநில அரசு தடுமாறித்தான் போகிறது. தனி வீட்டுக் கனவு கண்டாலும் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அபார்ட்மெண்ட் என்னும் வாய்ப்பு தான் கிடைக்கிறது. அடுக்குமாடி உரிமையாளர் சட்டமும் குறைந்த பரப்பு கொண்ட வீட்டை வாங்கும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக் கடன் மூலம் நகரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை மட்டுமே வாங்க முடிகிறது. ஒரு சதுர அடி 3,500 ரூபாய்க்கு விற்கும் ஒரு அபார்ட்மெண்ட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் மொத்தவிலையை பின்வருமாறு பிரிக்கலாம்: நிலத்தின் விலை 50 சதவீதம், கட்டுமானச் செலவு 30 சதவீதம், பதிவுச் செலவு 5 சதவீதம், வரி 1.5 சதவீதம், பில்டருக்குக் கிடைக்கும் நிகர லாபம் 13.5 சதவீதம்.
இடத் தேவையை நிறைவேற்றும் பொருட்டு நகரம் நாளுக்கு நாள் விரிந்துகொண்டே போனாலும் நிலத்தின் தேவை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. வீடுகட்ட அனுமதிக்கான காலதாமதத்தாலும், பல்வேறு மட்டங்களிலும் பெருகிவிட்ட ஊழலாலும் நில உரிமையாளர்களின் பேராசையாலும் நிலத்தின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவு உயர்ந்துவிட்டது. கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு, கட்டடித் தொழிலாளிகளின் பற்றாக்குறை போன்றவற்றால் கட்டுமானச் செலவும் அதிர்ச்சிதரும் வகையில் உயர்ந்துள்ளது. வீட்டுப் பதிவு, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, சேவை வரி போன்றவற்றுக்கான கட்டணமும் வீட்டின் விலை உயர்வில் பங்களிக்கிறது.
அடுக்குமாடி வீடு கட்டி விற்று வரும் பில்டர்கள் பெற்றுத் தரும் வீடு தொடர்பான ஆவணங்களில் காணப்படும் தெளிவின்மை அடுக்குமாடி வீட்டை வாங்குவதில் குழப்பத்தையும் நிச்சயமின்மையையும் உருவாக்குகிறது. வீடு தொடர்பான ஆவணங்களை நாம் கூடுதல் கவனத்துடன் சட்டரீதியான ஆலோசனையைப் பெற்று பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
பில்டர், நில உரிமையாளர், நுகர்வோர், வீடு கட்ட உரிமை வழங்கும் அதிகாரிகள், வரி விதிப்பாளர்கள், பதிவுத் துறை ஆகியோரது பங்கை எந்தக் குழப்பத்திற்கும் இடம் தராமல் தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும். இது நுகர்வோருக்கு எளிதான, ஆற்றல்மிக்க, பொருளாதாரரீதியில் வசதியான, பாதுகாப்பான வீடு வாங்கும் நடைமுறையை அளிக்கும். மத்திய அரசால் 2013-ல் அமலாக்கப்பட்ட ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் கட்டுமான அதிபர்களை மட்டுமே கணக்கில்கொண்டுள்ளது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் அனைவருக்குமான ஒருங்கமைக்கப்பட்ட பாதுகாப்பைத் தரவில்லை. அடுக்குமாடி தொடர்பான விஷயங்களில் பலரது நலனைப் புறக்கணித்துவிடுகிறது.
மகாராஷ்டிரா அடுக்குமாடி உரிமையாளர் சட்டம் மேற்கண்ட அனைத்துச் சிக்கல்களையும் தீர்க்கும் வகையில் உருவானது. இந்தச் சட்டமே கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, புது டெல்லி ஆகிய மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. இதன் மூலம் வீடு வாங்கும் நடைமுறைகள் எளிமையாகவும் சுலபமாகவும் மாறியுள்ளன.
தமிழ்நாடு அடுக்குமாடி உரிமையாளர்கள் சட்டமும் இத்தகைய விஷயங்களைக் கவனத்தில் கொண்டு சட்டத்தை திருத்துமானால் அது வீடு வாங்க நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். மேலும் தமிழ்நாடு நகரமயமாதலில் முன்னிலையில் இருப்பதுபோல் எளிய வழிமுறைகளால் நகரமயமாதலை மறுவரையறை செய்வதிலும் உயர்ந்து நிற்க முடியும்.
- ஆதவன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT