Published : 19 Mar 2016 11:15 AM
Last Updated : 19 Mar 2016 11:15 AM
சென்ற ஆண்டின் சிறந்த கட்டிடங்களுள் ஒன்று இது; ருவாண்டாவில் கிராமப் பகுதியில் மருத்துவமனைப் பணியாளருக்காக அமெரிக்க வடிவமைப்பாளர் சரோன் டேவிஸ் உருவாக்கிய குடியிருப்புக் கட்டிடம்.
ருவாண்டாவில் ருவின்குவேசூ என்னும் மலைக் கிராமத்தில் கிராமப்புறத்தாருக்கான ருவின்குவேசூ மருத்துவமனை அமைந்துள்ளது. 110 படுக்கைகள் கொண்டது இந்த மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வெகு தூரத்தில் இருந்து வரவேண்டியுள்ளது. அவர்கள் தங்குவதற்கான வசதி வாய்ப்புகள் அருகில் இல்லை. இதனால் தேவையற்ற கால விரையமும் பணமும் செலவாகிறது. இதைத் தடுக்கும் பொருட்டு மருத்துவமனைக்கு அருகிலேயே இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளாது. இரு தொகுதிகளாகக் கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்பில் ஊழியர்கள் பங்கீட்டு முறையில் வசிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. “கிராமத்துக்குள் ஒரு கிராமத்தை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் டேவிஸ்.
இந்தக் குடியிருப்பின் சிறப்பு என்னவென்றால் முழுக்க முழுக்க உள்ளூர்க் கட்டுமானப் பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. கைகளால் உருவாக்கப்பட்ட மரபான செங்கற்களையும் யூகலிப்படஸ் மரங்களையும் கட்டுமானப் பொருள்களாகக் கொண்டு இந்தக் கட்டிடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு தொடங்கி முடிக்கப்பட்ட இந்தக் கட்டிடம் இயற்கைக் கட்டிடத்துக்கான சிறந்த முன்னுதாரணக் கட்டிடமாகத் திகழ்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT