Published : 27 Feb 2016 12:12 PM
Last Updated : 27 Feb 2016 12:12 PM

எனக்குப் பிடித்த வீடு: அரவணைக்கும் ஊஞ்சல் தோழி

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ளது எங்கள் வீடு. எங்கள் வீட்டுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. அக்ரஹாரத்துக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட எங்கள் வீட்டின் வயது நூறைத் தாண்டிவிட்டது. ஆனாலும் இன்றும் அதே உறுதியுடனும் அழகுடனும் கம்பீரமாக இருக்கிறது. நூற்றாண்டுப் பழமை வாய்ந்த வீட்டில் வாழ்வதே மகிழ்ச்சியானதுதான். இந்த வீட்டின் ஒவ்வொரு சதுர அடியும் எனக்குப் பிடித்ததுதான். இதில் எனக்குப் பிடித்த பகுதி என்றால் நான் எதைக் குறிப்பிட்டுச் சொல்வது?

சிறு வயதிலிருந்து ஒரு தோழியைப் போல் என்னுடன் இருக்கும் எங்கள் நடு வீட்டின் ஊஞ்சலைச் சொல்லலாம். நான் சின்னஞ்சிறு குழந்தையாகத் தவழத் தொடங்கியபோது எனக்குத் துணையாக இருந்து இந்த ஊஞ்சல் தோழிதான். நான் நடக்கக் கற்றுக்கொண்டதே இந்த ஊஞ்சல் தோழியின் கை பிடித்துதான். ஆரம்பத்தில் என் அம்மா, அப்பா, பாட்டி உதவியுடன்தான் ஊஞ்சல் மீது ஏற முடிந்தது. முதன் முதலாக நானே நடந்து ஊஞ்சலின் கை பிடித்து அதன் மீது ஏறி அமர்ந்த நாளை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியை இப்போது என்னால் உணர முடிகிறது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு நம்பிக்கையூட்டும் பண்பை அளித்ததில் இந்த ஊஞ்சலுக்கு முக்கியப் பங்குண்டு.

நான் பத்தாம் வகுப்புத் தேர்வுக்கும், 12 ஆம் வகுப்புத் தேர்வுக்கும் இந்த ஊஞ்சலில் அமர்ந்துதான் படித்தேன். அந்த இரு தேர்விலும் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று, 7 தங்கப் பதக்கங்களுடன் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்ததும் இந்த ஊஞ்சலில்தான். பின் கல்லூரி படிக்கும் சமயத்தில் என்னுடைய மேடைப் பேச்சு, இலக்கிய நிகழ்வுகள், வானொலி பேச்சுக்கு நான் தயார் செய்வதும் இந்த ஊஞ்சலில்தான். அதோடு மட்டுமின்றி காலை எழுந்தவுடன் ஊஞ்சலில் அமர்ந்து மிதமான இசையைக் கேட்டு, அதற்கேற்றாற் போன்று ஆடுவது என்னைப் புதுப்பித்துக்கொள்ள உதவும்.

எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களும் இந்த ஊஞ்சலில் அமர விரும்புவார்கள். அதோடு மட்டுமில்லாமல், எனது ஊஞ்சலில் அமர்ந்து வாசலில் இருந்து வரும் மெல்லிய காற்றை அனுபவித்தபடி ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். தேனி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், குமாரி சச்சு, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், திரைப்பட இயக்குனர் திரு. T.P. கஜேந்திரன், திரு. வைகோ போன்றவர்களிடம் ஏராளமான பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றிருக்கிறேன். இத்தகைய என்னுடைய வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கும் எனது ஊஞ்சலை வாஞ்சையுடன் பார்க்கிறேன். அது என்னை அரவணைத்துக் கொள்கிறது.



சொந்த வீடு, தி இந்து
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in

எனக்குப் பிடித்த வீடு

இந்தப் பகுதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த பகுதி ஒன்று இருக்கும். மன இறுக்கமாக உள்ள வேளைகளில் உங்களை இளைப்பாற்றும் உங்கள் ஊஞ்சலைப் பற்றி எழுதலாம். நீங்கள் நிதானமாக அமர்ந்து தேநீர் அருந்தும் பால்கனியைப் பற்றி எழுதலாம். வீடு என்பது செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. வாழ்க்கை என்பதன் திரு உருவம். இதை எடுத்துரைப்பதே இந்தப் பகுதி. உங்கள் வீட்டின் பிடித்த பகுதி பற்றிய புகைப்படத்துடன் உங்கள் புகைப்படத்தையும் சேர்த்து எங்களுக்கு அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x