Published : 27 Feb 2016 12:28 PM
Last Updated : 27 Feb 2016 12:28 PM
நம்முடைய காலத்தின் மிகச் சிறந்த கட்டிடக் கலைஞர்களில் ஒருவரான ஃப்ராங் கெரி, 1929-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி டொரண்டோ நகரத்தில் பிறந்தார். புலம் பெயர்ந்த யூதக் குடும்பத்தில் பிறந்த கெரி சிறு வயதிலேயே படைப்பாற்றல் உள்ளவராக இருந்திருக்கிறார். தாயும் தந்தையும் பணிக்குச் சென்றுவிட வீட்டில் தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். தனது பேரனின் படைப்பாற்றலைக் கண்டு கொண்ட பாட்டி அவர் சிறு சிறு நகரங்களை உருவாக்க தனது கணவனின் மரக் கடையிலிருந்து உதிரி மரக் கட்டைகளை எடுத்து வந்து தந்துள்ளார். கெரி, பாட்டி தந்த மரக் கட்டைகளைக் கொண்டு தன் கற்பனையின் போக்கில் குட்டிக் குட்டி நகரங்களை உருவாக்கினார்.
- கெரி டவர்ஸ், அமெரிக்கா
தன் மகனின் இந்தப் படைப்பாற்றலைப் புரிந்துகொண்ட கெரியின் தாய் அவருக்கு உலக ஓவியங்களை அறிமுகப்படுத்தினார். அவரது தந்தையைப் பொறுத்தவரை கெரி ஒரு கனவுலகவாசி. பெரிதாக எதையும் செய்யப்போவதில்லை என்றே நினைத்தார். ஆனால் அவரது தாய்க்கு அவர் மேல் அபார நம்பிக்கை இருந்திருக்கிறது.
1947-ம் ஆண்டு அவரது குடும்பம் அமெரிக்காவில் கலிபோர்னியா நகருக்குக் குடிபெயர்ந்தது. கெரி சிறிது காலம் பாரா வண்டி ஓட்டுநராக இருந்துகொண்டே கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தார். அங்கு முதல் மாணவராகத் தேர்வானார். அதற்குப் பிறகு அமெரிக்க ராணுவம் உள்ளிட்ட பல இடங்களில் பொறியியலாளராகப் பணியாற்றினார். பிறகு அவரது குடும்பம் கேம்ப்ரிட்ஜ் நகருக்குக் குடிபெயர்ந்த பிறகு, கெரி மீண்டும் ‘நகரத் திட்டமிடுதல்’ பிரிவில் மேற்படிப்புக்காக ஹார்வார்டு நகர வடிவமைப்புப் பள்ளியில் சேர்ந்தார். அதன் பிறகு அமெரிக்காவிலும் பிரான்சிலும் பணி அனுபவம் பெற்றார். தனது 28 வயதில் இந்தத் துறையில் காலடி எடுத்து வைத்தார்.
1980களில்தான் பிரம்மாண்டமான குடியிருப்புகள், பொதுப் பயன்பாட்டுக் கட்டிடங்களைப் பெருமளவில் கட்டத் தொடங்கினார். ஒழுங்கின்மையில் சவுந்தர்யத்தைப் புகுத்துவதில் தேர்ந்தவர் கெரி. செக் குடியரசில் அவர் உருவாக்கிய நடனமாடும் கட்டிம் அதற்குச் சான்று. ஓவியங்களைப் போலக் கட்டிடங்களை உருவாக்க நினைத்தார். அவர் உருவாக்கிய கட்டிடங்கள் நிலையான தோற்றத்துக்கு அப்பால் இயக்கத்துடன் இருக்கின்றன. அதாவது நடனமாடுவதைப் போல, நொறுங்குவதைப் போலத் தோற்றம் தரும் கட்டிடங்கள் இவரது சிறப்பு. சுருக்கமாகச் சொல்ல கட்டிடங்களை ஜீவனுடன் வைத்திருக்க விரும்பினார் எனலாம். கல்லூரி படிக்கும்போது கட்டிடவியல் குறித்தப் பாடங்கள் அலுப்பூட்டியதாக பின்னால் ஒரு நேர்காணலில் சொல்லியுள்ளார். அம்மாதிரி சமயங்களில் ஓவியக் கூடங்களில் செலவழிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
கட்டிடத் துறைக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான பிரிட்ஜ்கர் விருது 1989-ல் கெரிக்கு வழங்கப்பட்டது. இவர், ஜெர்மன், ஸ்பெயின், கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல உலக நாடுகளில் கட்டிடங்களை உருவாக்கியுள்ளார்.
-ஃபிராங் கெரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT