Published : 19 Dec 2015 10:58 AM
Last Updated : 19 Dec 2015 10:58 AM
சினிமாவில், கதாநாயகன் சென்னைக்கு வந்துவிட்டார் என்பதைப் பார்வையர்களுக்கு அறிவிக்க சென்னை செண்ட்ரல், எழும்பூர், எல்.ஐ.சி. போன்ற கட்டிடங்களைக் காட்டுவார்கள். இல்லையெனில் இப்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தைக் காட்டுவார்கள்.
இதுபோல சென்னையின் சில கட்டிடங்கள், கட்டுமானங்கள் சினிமா மூலமாக வெகு பிரபலம். ஆனால் சினிமாவில் காட்டப்படும் சில இடங்கள் சென்னைவாசிகளுக்கே புதிதுதான். ‘இதுபோன்ற ஒரு இடம் நம் நகரத்தின் எங்கே ஒளிந்துகொண்டுள்ளது’, சென்னை வாசிகளே எண்ணத் தோன்றும் அளவுக்கு சில பிரத்யேக இடங்களை சினிமாவில் மட்டுமே காண முடியும். உதாரணமாக அடையாறில் உள்ள உடைந்த பாலம். அஜித்குமார், சிம்ரன் நடித்த ‘வாலி’ படத்தில் இருவரும் அமர்ந்து பேசும் காட்சி இங்குதான் படமாக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் பல படங்களிலும் இந்த உடைந்த பாலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மாதிரியான சில கட்டிடங்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும்:
உடைந்த பாலம்
அடையாற்றில் 1967-ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம். இந்தப் பாலம் மீனவர் பகுதியான னிவாசபுரத்தும் அடையாற்றின் முகத்துவாரத்துக்கும் இடையில் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் 1977-ம் ஆண்டு ஆற்று வெள்ளத்தால் சேதமடைந்தது. அதனால் பாதி உடைபட்ட நிலையில் உள்ளது. சரிசெய்யப்படாத நிலையிலேயே கைவிடப்பட்ட இந்தப் பாலம் ‘உடைந்த பாலம்’ (Broken bridge) என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தில் எம்.ஜி.ஆரில் இருந்து சூர்யா வரை பலரும் நடித்திருக்கிறார்.
கார்ல் ஸ்மித் நினைவகம்
சென்னையின் முக்கியமான அடையாளாங்களில் ஒன்று பெசன்ட் நகர் கடற்கரை. இந்தக் கடற்கரையில் கோயிலின் நுழைவு வாயில்போல உள்ள கட்டிடத்தைப் பல சினிமாவில் பார்த்திருப்போம். இந்தக் கட்டிடம் டச்சு மாலுமி ஸ்மித் நினைவாகக் கட்டப்பட்டது. சென்னை இங்கிலாந்து அரசாட்சியின் கீழ் இருந்த காலகட்டத்தில் பெசண்ட் நகர் கடற்கரையில் 1930-ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று விளையாடிக்கொண்டிருந்த ஒரு ஆங்கிலச் சிறுமி கடல் அலைகளுக்குள் சிக்கிக் கொண்டுவிட்டாள்.
இதைக் கண்ட டச்சு மலூமி அந்தச் சிறுமியைப் போராடிக் காப்பாற்றியிருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த மாலுமி கடல் அலைகளுக்குள் சிக்கி இறந்துபோய்விட்டார். அவரது வீரத்தைப் போற்றும் வகையில் சென்னை ஆளுநர் அவருக்கு நினைவகம் எழுப்ப உத்தரவிட்டார். அதுதான் இந்தக் கட்டிடம். சுதந்திரம் அடைந்த பிறகு கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்தக் கட்டிடத்தை இப்போதுதான் 2014-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி புதுப்பித்துள்ளது.
நேப்பியர் பாலம்
இந்தப் பாலத்தைப் பார்த்தாலேயே, “இதை எங்கேயோ பார்த்திருக்கிறோமே” என நினைவுக்கு வரும். அந்தளவுக்குப் பல சினிமாவில் இந்தப் பாலம் காட்டப்பட்டுள்ளது. அன்றைய காலத்து நடிகர்கள் முதல் இன்றைய காலத்து இளம் நடிகர்கள் வரை இந்தப் பாலத்தில் பாட்டுப்பாடி ஆட்டம் போடாதவர்கள் குறைவு. கூவம் ஆற்றின் மேல் கட்டப்பட்ட இந்தப் பாலம் ஜார்ஜ் கோட்டையையும் மெரினா கடற்கரையையும் இணைக்கிறது. சென்னையின் மிகப் பழைமையான பாலங்களில் ஒன்றான இது 1872-ம் ஆண்டு ப்ரான்சிஸ் நேப்பியரால் கட்டப்பட்டது.
ரவுண்டானா சுரங்கப் பாதை
சமீபத்தில் எடுக்கப்பட்ட பல படங்களில் நாயகன், நாயகி சந்தித்துக்கொள்ளும் இடமாக இந்த சுரங்கப் பாதை இருந்துவருகிறது. அண்ணா சாலையையும், வாலாஜா சாலையையும் இணைக்கும் இந்தச் சுரங்கப் பாதை, 1967-ம் ஆண்டு பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்டது. பிசாசு படத்தின் பாடல் காட்சி இங்குதான் படமாக்கப்பட்டது.
ராஜாஜி மண்படம்
பல படங்களில் நீதி மன்றக் கட்டிடமாக இந்தக் கட்டிடம் காட்டப்பட்டிருக்கும். ‘மெளன ராகம்’ படத்தில் கார்த்திக் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாவது இந்தக் கட்டிடத்தின் படிக்கட்டுகளில்தான். ‘தளபதி’யிலும் ஆட்சியர் அலுவலமாகக் காட்டப்பட்டிருக்கும். இந்தக் கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், நான்காம் ஆங்கிலோ-மைசூர் போர் வெற்றியின் நினைவாகக் கட்டப்பட்டது. ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் இது, விருந்து மண்படம் (Banqueting Hall) என்ற பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தது. 1800-ல் தொடங்கிய இதன் கட்டிடப் பணி 1802-ல் முடிவடைந்துள்ளது. ஜான் கோல்டிங்கம் என்னும் பிரிட்டிஷ் பொறியாளர் இதன் வடிவமைப்பாளர்.
தொகுப்பு: ஜெய்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT