Published : 07 Nov 2015 11:30 AM
Last Updated : 07 Nov 2015 11:30 AM
வீட்டை அழகுபடுத்த உதவுபவை தரை விரிப்புகள். அவை பல வகைகளில் பங்களிக்கின்றன. ஆனால் பழைய தரை விரிப்புகளைத் தூக்கி எறிந்துவிடுகிறோம். அத்தகைய தரை விரிப்புகள் வீட்டில் இருந்தால் அவற்றைத் தூக்கி எறிந்துவிடாதீர்கள். கட்டில், பீரோ, நாற்காலிகள் போன்ற அறைக்கலன்களை வீட்டுக்குள் இடம்மாற்றும்போது அவை உதவும்.
அறைக்கலன்களின் அளவுக்கு ஒரு தரை விரிப்பைப் போட்டு அதன்மீது கட்டில், பீரோ போன்றவற்றை இருத்துங்கள். இப்போது அவற்றை நகர்த்துவது எளிது, தரை விரிப்புகளின் நுனியைப் பற்றி இழுத்தாலே போதும். தேவையில்லாமல் அவற்றைத் தூக்கும் வேலை இல்லை. அதிக ஆற்றல் செலவின்றி எளிமையாக எடை கூடிய பொருள்களை வீட்டினுள்ளே நகர்த்திவிடலாம்.
தோட்ட வேலைகளைச் செய்யப் போகிறீர்களா, கொஞ்சம் இருங்கள். பழைய தரை விரிப்பை எடுத்து அதை நன்கு மடித்து எடுத்துக்கொண்டு போங்கள். இது எதற்கு என யோசிக்கிறீர்களா? தோட்ட வேலையின்போது முழங்கால் போட்டுச் செய்ய வேண்டிய வேலைகள் இருப்பின் இதை முழங்கால்களுக்கு அடியில் வைத்துக்கொண்டால், முழங்கால்களுக்கு மெத்தென்று இருக்கும். சுமையின்றிச் சுகமாக வேலை பார்க்கலாம்.
வீட்டின் கதவுகள், சன்னல்கள், திரைகள் போன்றவற்றைத் துடைக்கும்போது உங்களுக்குப் பழைய தரைவிரிப்புகள் கைகொடுக்கும். அவற்றைச் சிறு துண்டாகக் கிழித்து, நீரில் நனைத்து தூசுகளைத் துடைக்கப் பயன்படுத்தலாம். தூசியாய்ப் போக வேண்டிய பழைய தரைவிரிப்பே தூசி போக்க உதவுகிறது என்றால் நல்லதுதானே?
வீட்டின் புழக்கத்துக்குப் பயன்படும் கத்தி போன்ற கூர்மையான பொருள்களில் படிந்துள்ள, தூசு, கறைகள் போன்றவற்றைப் போக்க இந்தப் பழைய தரைவிரிப்புகளின் துண்டுகள் உதவும்.
தரைவிரிப்புகளின் சிறு துண்டுகளை வாஷிங் மெஷின் போன்றவற்றுக் கீழே நான்கு புறங்களிலும் வைத்து, அவற்றை நகர்த்தும்போது சத்தம் எழாது, தரையிலும் கோடுகள் விழாமல் அப்படியே பாதுகாக்கப்படும்.
வீட்டிலுள்ள வாஷ்பேசினில் சில கரடு முரடான பொருள்களைப் போட்டுக் கழுவ வேண்டிய தேவை ஏற்படும்போது இந்தப் பழைய தரைவிரிப்பிலிருந்து சிறு துண்டைக் கிழித்துப் போட்டுக்கொண்டீர்கள் எனில் வாஷ் பேசின் பாதிப்பில்லாமல் பொருள்களைக் கழுவி முடிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT