Published : 07 Nov 2015 12:27 PM
Last Updated : 07 Nov 2015 12:27 PM
ழான் நோவல், கட்டிடக் கலைக்காக உலக அளவில் கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகாரங்களைப் பெற்ற கட்டிடக் கலைஞர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர், பிரிட்ஸர், வூல்ப் ஆகிய விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளார். கட்டிடவியலைக் கலையாகக் கருதும் கட்டிடக் கலைஞர் இவர் என கார்டியன் இதழ் புகழாரம் சூட்டுகிறது.
ழான் 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி பிரான்ஸில் ஃபுமேல் என்னும் ஊரில் பிறந்தார். அவருடைய பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். அவருடைய தந்தை முதன்மை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர்கள் இருவரும் ழானுக்கு பிரெஞ்சு மொழியும், கணக்கும் படிப்பித்தனர். அதன் மகன் இந்த இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்று தங்களைப் போல சிறந்த ஆசிரியனாக வர வேண்டும் என விரும்பினர். ஆனால் ழானின் விருப்பம் வேறு ஒன்றாக இருந்தது.
அவருக்குப் படம் வரைய வேண்டும். பள்ளிக் கல்வி முடித்ததும் அவரைக் கல்வியியல் கல்லூரியில் சேர்க்க பெற்றோர் விரும்பினர். ஆனால் ஓவியக் கலையில் பிடிவாதமாக இருந்தார் ழான். அதன் பிறகு ஓவியக் கலையைக் காட்டிலும் கட்டிடக் கலை பரவாயில்லை என நினைத்து அவருடைய பெற்றோர் கட்டிடக் கலைப் படிப்பில் அவரைச் சேர்த்தனர்.
கல்லூரிப் படிப்பு முடித்த தனது 25-ம் வயதிலேயே ழான் ப்ரான்சிஸ் சிக்னுனர் என்பவருடன் இணைந்து கட்டிடத் துறையில் பணியாற்றத் தொடங்கிவிட்டார். 1987-ம் ஆண்டு நெமஸ் என்னும் இடத்தில் நெமஸஸ் என்னும் பெயரில்
ஒரு வீட்டுக் குடியிருப்புத் திட்டத்தைக் கட்டினார். இதுவே இவரது முதல் கட்டிடப் பணி. 114 வீடுகள் உள்ள பிரம்மாண்டமான குடியிருப்புத் திட்டம் இது.
இன்று அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, தென் கொரியா, ஸ்பெயின், டென்மார்க் உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் இவர் கட்டிடங்களை எழுப்பியுள்ளார். இதுவரை இவர் 200-க்கும் மேற்பட்ட கட்டிடங்களைக் கட்டியுள்ளார். ழானின் விருப்பம் கோபுரங்கள் கட்டுவதுதான் எனச் சொல்லப்படுகிறது. வானுயர் கட்டிடங்கள் பலவற்றை இவர் எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT