Published : 07 Nov 2015 11:24 AM
Last Updated : 07 Nov 2015 11:24 AM
வீடு என்பது உள்ளிருந்து வாழ்வதற்காக மட்டுமல்ல. வெளியில் இருந்து பார்ப்பதற்காவும்தான். எங்கெங்கெல்லாம் சுற்றினாலும் நம் வீட்டுக்குள் நுழையும்போது உருவாகும் அந்த உணர்வு அலாதியானது. அது சொந்த வீடாக இருந்தால் அந்த உணர்ச்சியைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. வீடு கட்டுவது வெறும் கட்டிடம் எழுப்பும் செயல் அல்ல. வீடு என்பது அந்தஸ்தின், ரசனையின் வெளிப்பாடாக அமைய வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் ஆசை. யாரும் கட்ட முடியாத வீட்டைத் தான் கட்ட வேண்டும் அதைச் சொல்லிப் பெருமைப்பட வேண்டும் என்னும் ஆர்வம் இல்லாதவர்களில்லை. எனவேதான் வீட்டின் நிமித்தம் பெரும் பிரயத்தனங்களை மனிதர்கள் மேற்கொள்கிறார்கள்.
வீட்டுக் கட்டுமானத்துக்குத் தேவை உறுதி. வீடு கட்டுவதைப் பொறுத்தவரை கட்டுமானத்தில் தொழில்நுட்பங்களே ஆளுமையைச் செலுத்தும் சூழலில் வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பதை நமது ரசனையே முடிவுசெய்கிறது. ஆகவே வீட்டைக் கட்டுபவர்கள் அந்தப் பணியை ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைத்தாலும் தங்களுக்குத் திருப்தி தரும் வண்ணத்தில் வீட்டின் பூச்சு அமைய வேண்டும் என்பதில் கருத்தாய் இருப்பார்கள். இப்போதெல்லாம் பளிச்சென்ற வண்ணத்திலேயே பல வீடுகள் பளபளக்கின்றன.
கூடுமானவரையில் வீட்டுக்குள் குளுமையை உணரச் செய்யும் வகையில் வீடுகளுக்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பளிச்சென்ற வண்ணங்களை வீட்டின் புறச்சுவர்களுக்குப் பூசும்போது வெயில், மழை போன்ற இயற்கையை அவை தாங்கி நிற்கும் என்பதால் அவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
மிகவும் மென்மையான வண்ணத்தைப் பூசும்போது அது எளிதில் நிறமிழந்துவிடும் என்பதால் புறச்சுவர்களுக்கு மென்மையைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் புறச் சுவர்களுக்கு வண்ணம் பூசும்போது அந்த வண்ணத்தின் வெப்பத்தைக் கிரகித்து வெளியிடும் தன்மையைக் கருத்தில்கொண்டு புறச் சுவருக்கான வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அடர்த்தியான நிறம் அதிகமான வெப்பத்தை உள்வாங்கிவைத்துக்கொள்ளும் என்னும் சூழலில் சிறிது மென்மையான வண்ணத்தைப் பூசலாம். வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை என வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் அந்தந்த அறைகளில் நாம் புழங்கும்போது நமக்கு ஏற்படும் உணர்வைக் கணக்கிலெடுத்துக்கொண்டு நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒவ்வொரு நிறத்துக்கு ஒவ்வொரு அர்த்தம் உண்டு. ஆரஞ்சு நிறம் என்பது நன்னம்பிக்கையை ஊட்டுவதாகவும் சமூகத் தொடர்புக்கு ஏற்றதாகவும் கருதப்படுகிறது. ஆரஞ்சு வண்ணம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் துன்ப காலங்களில் தேவைப்படும் மன உறுதியைத் தரும் என்றும் சொல்கிறார்கள். எப்போதும் வீட்டில் அமைதி தவழ வேண்டும், அக்கம்பக்கத்தினருடன் உறவு மேம்பட வேண்டும் என்பதை விரும்புபவர்கள் இந்த வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
அறிவின் வெளிப்பாடாக மஞ்சள் நிறத்தைச் சொல்லலாம். இது நேர்மறையான எண்ணத்தையும், உற்சாகம் ததும்பும் மனநிலையையும், புதிதுபுதிதான எண்ணங்களையும், வசீகரமான கற்பனைகளையும் உருவாக்கும் என்கிறது வண்ணம் தொடர்பான உளவியல். மஞ்சள் என்பது மங்கலகரமானது என்னும் நம்பிக்கையையும் இதனுடன் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளலாம். அறிவும் மங்கலமும் உற்சாகமும் புத்துணர்ச்சியும் நிறைந்த சூழல் தேவைப்படுபவர்கள் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தி வீட்டுக்கு வண்ணமடிக்கலாம்.
இணக்கமான சூழலுக்குப் பச்சை வண்ணம் உகந்தது. ஏதாவது ஒரு சிக்கலான தருணத்தில் முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் இதயத்தின் வார்த்தைகளையும் மூளையின் சொற்களையும் நடுநிலையாக ஆராய இந்த நிறம் உதவும் என்று சொல்லப்படுகிறது. வளர்ச்சியைக் குறிக்கும் நிறமும் பச்சையே. அதே சமயத்தில் பச்சை வண்ணம் ஒருவிதமான பொஸஸிவ்வான எண்ணத்தையும் உருவாக்கிவிடும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற மென்மையான எச்சரிக்கையும் தருகிறார்கள் வண்ணம் தொடர்பான கல்வி கற்றவர்கள்.
நீல நிறம் நம்பிக்கைக்கும் நேர்மைக்கும் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. எந்த மோதலையும் உருவாக்காமல் அதனதன் கதியில் இயங்கச் செய்யும் வல்லமை கொண்டது நீல நிறம் என்கிறார்கள். நீல நிறம் நம்பத் தகுந்தது, பொறுப்புணர்வு அளிப்பது என்று சொல்கிறது நிறங்களுக்கான உளவியல். பாதுகாப்பு உணர்வையும் நம்பிக்கையான எண்ணத்தையும் உற்பத்தி செய்வதில் நீல நிறம் சிறப்பாகச் செயல்படுகிறது என்கிறார்கள். கடினமான காலங்களில் சரியான முடிவுகளை எடுக்க இந்த நிறம் உதவும் என்று சொல்கிறார்கள் நிபுணர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT