Published : 21 Nov 2015 11:18 AM
Last Updated : 21 Nov 2015 11:18 AM

கட்டுமானப் பொருள்களில் கவனம்

கட்டிடங்களைச் சேதாரப்படுத்துவதில் நெருப்பு பிரதானப் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு கட்டுமானப் பொருளுக்கும் ஒவ்வொரு விதமான பண்புகள் இருக்கின்றன. சில கட்டுமானப் பொருள்கள் எளிதில் தீப்பிடிப்பதில்லை. சில எளிதில் தீப்பிடித்துவிடுகின்றன. எந்தக் கட்டுமானப் பொருள் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது, எந்தக் கட்டுமானப் பொருள் தீப்பிடிக்கும் தன்மை அற்றது என்பதைத் தெரிந்துகொள்வது கட்டிடம் குறித்தான நமது புரிதலை ஆழப்படுத்தும்.

ஒரு கட்டிடம் தீப்பிடிக்காமல் இருக்க வேண்டுமானால் அடிப்படையில் அந்தக் கட்டிடத்தைத் தீப்பிடிக்கும் தன்மையற்ற கட்டுமானப் பொருட்களால் உருவாக்க வேண்டும். கட்டிடத்தின் உருவாக்கத்தின்போதே நெருப்புக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நெருப்பு குறித்த எச்சரிக்கை மணியை ஒலிக்கும் கருவிகளையும் ஒருவேளை நெருப்பு பற்றினால் அதை அணைக்கத் தேவையான சாதனங்களையும் கட்டிடத்தில் போதுமான அளவில் அமைக்க வேண்டும்.

தீப்பிடிக்கும் தன்மையற்ற கட்டுமானப் பொருள்கள் என்ன வகையான பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் எனப் பார்த்தால், முதலில் அவை அதிக வெப்பத்தால் சிதைவுறாமல் இருக்க வேண்டும். அவை வெப்பத்தின் காரணமாகப் பெரிய அளவில் விரிவடையாமல் இருக்க வேண்டும். ஏனெனில் அதிகமாக விரிவடையும் தன்மை கொண்டிருந்தால் அதன் காரணமாகக் கட்டிடத்தில் அநாவசிய அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அவை எளிதில் தீப்பற்றும் தன்மையற்றதாக இருக்க வேண்டும். அதே போல் ஒருவேளை நெருப்பு பற்றினாலும் கட்டுமானப் பொருள்கள் தங்கள் உறுதியை இழக்காதவையாக அமைதல் நல்லது.

செங்கல்லைப் பொறுத்தவரை அது 1200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரையான வெப்பத்தைத் தாங்கக்கூடியது. தரமான கட்டுமானத்தை மேற்கொண்டால் செங்கல் கட்டிடத்தின் தீப்பற்றாத் தன்மை சிறப்பாகவே இருக்கும். அதே போல் கல் கட்டிடமும் தீயை எதிர்த்து நிற்கும் தன்மை கொண்டது. கிரானைட் கற்கள் வெப்பத்தால் எளிதில் சிதைவடைந்துவிடும்.

மரம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட கட்டிடங்கள் விரைவில் தீயால் பாதிக்கப்படும் தன்மை கொண்டவை. மரத்தைப் பயன்படுத்திப் பெரிய கட்டிடங்கள் எழுப்புவது அவ்வளவு நல்லதல்ல. அப்படி ஒருவேளை மரங்களை அதிகமாகப் பயன்படுத்தும்போது மரப்பலகைகள் மீது தீப்பிடிக்காத தன்மை கொண்ட வேதிப்பொருள்களைப் பூசுவது நல்லது. தீப்பிடிக்கும் சமயங்களில் ஸ்டீல் உத்தரங்கள் ஆபத்தானவை. ஏனெனில் ஸ்டீல் உத்தரங்கள் 1,400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரும்போது உருகிவிடும். மேலும் ஸ்டீலில் வெப்பம் எளிதில் பரவும்.

ஆகவே நமது கட்டிடங்கள் தீப்பற்றாமல் இருக்க வேண்டுமானால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கையைத் தொடக்கத்தில் இருந்தே மேற்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x