Published : 31 Oct 2015 12:40 PM
Last Updated : 31 Oct 2015 12:40 PM
வீடு கட்ட வேண்டும் என்பதைப் பலரும் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் வாங்கும் வருமானத்தில் வீடு கட்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. வீட்டுக் கடனை நம்பித்தான் வீடு கட்ட முடியும் என்ற நிலை நடுத்தரவர்க்கத்தினருக்கு இருக்கிறது. வீட்டுக் கடன் வாங்கினாலும் வங்கிகள் 80 சதவீதம் மட்டும்தான் அளிக்கின்றன. மீதி 20 சதவீதத்தை சேமிப்பில் இருந்தோ கடன் வாங்கியோதான் சமாளிக்க வேண்டும். இவ்வளவு சிரமப்பட்டு கட்ட நினைக்கும் வீட்டை மிகச் சிக்கனமாகக் கட்டினால்தானே நல்லது?
வீட்டுக் கட்டுமானச் செலவைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன. அந்த வழிமுறைகளின்படி வீடு கட்டினால் சுற்றுச்சூழலுக்கும் நல்லது; செலவும் மிச்சமாகும். கட்டுமானப் பொருள்களைப் பொறுத்த அளவில், ஸ்டெப்ளைஸ்டு கம்ப்ரஸ்டு எர்த் ப்ளாக்ஸ், ப்ளை ஆஷ் ஜிப்சம் ஸ்டெப்ளைஸ்டு மட் ப்ளாக்ஸ், ப்ளை ஆஷ்-லைம் ஜிப்சம் தயாரிப்புகள், க்ளே ரெட் மட் பர்ன்ட் செங்கல், கான்கிரீட் ப்ளாக் போன்றவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கூறப்படுகிறது.
அஸ்திவாரத்தை எழுப்ப ஆகும் செலவு வீட்டின் மொத்தக் கட்டுமானச் செலவில் 10 முதல் 15 சதவீதம்வரை பிடித்துக்கொள்கிறது. ஆகவே செம்மண் போன்ற சாதாரண மண் கொண்ட நிலத்திற்கு இரண்டு அடிகள் ஆழ அஸ்திவாரம் போதுமெனவும் ஆர்ச் பவுண்டேஷன் முறையைக் கையாள வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது. கரிசல் மண் போன்ற மென்மையான மண் கொண்ட நிலத்தில் அண்டர் ரீம் ஃபைல் பவுண்டேஷனைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கிறது. இதன் மூலம் அஸ்திவாரம் அமைக்கும் செலவில் 20-25 சதவீதத்தை மிச்சப் படுத்த முடியும் என்றும் கூறுகிறது.
ஆர்ச் பவுண்டேசன் என்பது பழங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட முறை. இம்முறையில் அஸ்திவாரத்தின் ஆழத்தைப் பெருமளவில் குறைத்துவிடலாம். என்றாலும் அஸ்திவாரத்தின் அடிப்பகுதியைத் தாங்கு சுவரெழுப்பிப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் கட்டிடத்தின் அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு அஸ்திவாரம் உறுதியுடன் விளங்க இது அவசியம்.
நில மட்டத்திற்கு மேல் ஒரு அடி உயரத்திற்கு 1:6 என்னும் விகிதத்திலான சிமெண்ட் கலவையால் ஆன அடிப்பீடத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக அடிப்பீடம் அமைக்கப் பயன்படும் நான்குக்கு ஆறு அங்குலம் என்னும் அளவிலான ஸ்லாபுகளைத் தவிர்த்துவிடலாம். அதற்குப் பதில் செங்கற்களைப் பயன்படுத்தலாம். இந்த முறையைப் பயன்படுத்தினால் அஸ்திவாரச் செலவை 35-50 சதவீதம் குறைக்கலாம்.
சுவர்களைப் பொறுத்தவரை எலிப்பொறித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சுவர்களுக்கு உறுதி கூடும். கிராதி செங்கற்களையும் சுவர்களுக்குப் பயன்படுத்தலாம். வெப்ப மயமான இடங்களில் வழக்கமான செங்கற் களால் சுவர்களை எழுப்புவதைவிட கிராதிச் செங்கற்களைப் பயன்படுத்தும்போது செலவும் குறையும் வீட்டுக்குத் தேவையான வெளிச்சமும், காற்றும் கிடைக்கும்.
கூரைகளைப் பொறுத்தவரை, வழக்கமாக ஆர்சிசி ஸ்லாப்பைப் பயன்படுத்துவதற்குப் பதில் ஃபெர்ரோ சிமெண்ட் சேனல், ஜாக் ஆர்ச், ஃபில்லர் ஸ்லாப் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம். ஏனெனில் ஆர்சிசி ஸ்லாப்களில் அதிகமான அளவுக்கு கான்கிரீட் வீணாகிறது மேலும் இந்த ஸ்லாப்கள் காரணமாகக் கட்டிடத்தின் சுமையும் கூடுகிறது. எனவே எடை குறைவான பொருள்களைக் கொண்டு கட்டிடத்தின் கூரையை அமைப்பதன் மூலம் செலவையும் குறைக்கலாம்.
கட்டிடத்தின் சுவர்கள் வழியே அஸ்திவாரத்திற்குக் கடத்தப்படும் எடையும் குறையும். ஃபில்லர் ஸ்லாப்களைப் பயன்படுத்திக் கூரையை அமைக்கும்போது 15-25 சதவீதம் செலவை மிச்சப்படுத்தலாம். ஆனால் தகுந்த வடிவமைப்புப் பொறியாளரின் பரிந்துரையின் பேரிலேயே கட்டுமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவவறு உள்ளூர்த் தொழில்நுட்பங்களின் உதவியுடன் வீடு கட்டும்போது வீட்டின் கட்டுமானச் செலவு பெருமளவில் குறைவதுடன் பசுமையான சூழல் கொண்ட கட்டிடத்தையும் உருவாக்க முடியும். வழக்கமான வீடுகளையே அதிகச் செலவில் கட்டுவதை விடுத்து செலவு குறையும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த மாற்றுச் சிந்தனை அவசியம். அத்துடன் சிறிது துணிச்சலும் இருந்தால் விலை குறைவான ஆனால் உறுதியான சூழலுக்கு உகந்த வீட்டை எளிதில் கட்டி முடிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT