Last Updated : 17 Oct, 2015 11:50 AM

 

Published : 17 Oct 2015 11:50 AM
Last Updated : 17 Oct 2015 11:50 AM

எனக்குப் பிடித்த வீடு: கதவுகள் தரும் நினைவுகள்

கதவு பற்றிய புகைப்படக் கட்டுரை ஒன்றை ‘தி இந்து’ ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். ஜெய்ப்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க வீடுகளின் கதவுகளைப் பற்றி அந்தக் கட்டுரையாசிரியர் சிலாகித்திருந்தார். அதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே எனக்கு என் அம்மா வீட்டின் கதவு நினைவுக்கு வந்தது.

நான் பிறந்தது சிவகாசியில். எனக்குச் சுமார் பன்னிரெண்டு வயது இருக்கும்போது என் தந்தை எங்கள் வீட்டைக் கட்டினார். வீட்டின் ஒவ்வொரு வளர்ச்சியையும் என் தந்தை ரசித்து ரசித்துக் கட்டுவதையும், அதைப் பற்றி அனைவரிடமும் பெருமை பொங்கப் பேசுவதையும் நான் சிறு வயதில் கண்டு வியந்திருக்கிறேன். வீட்டில் மார்பிள் தரை போட்டிருந்தோம். அதை வாங்குவதற்கு அந்தக் காலத்திலேயே என் தந்தை, தச்சர், பொறியாளர் மூவரும் ராஜஸ்தான் வரை சென்றனர். தச்சர் திரும்பி வந்தவுடன் என் தந்தைக்கு ஒரே புகழாரம்தான், தான் எத்தனையோ வீடுகளில் வேலை செய்திருந்தாலும் தன்னை யாரும் இந்த அளவுக்கு மதித்து ஊருக்கு அழைத்துப் போய் மரியாதை செய்ததில்லை என்று நெகிழ்ந்து கூறினார்.

வீட்டின் எல்லாக் கதவுகளும் வேலைப்பாடு மிக்கதாய்த் தான் இருந்தன என்றாலும் நிலைக்கதவு மிகவும் அழகிய வேலைப்பாடு கொண்டதாய் இருக்கும். தச்சர் அக்கதவுகளைச் செதுக்கிச் செதுக்கிச் செய்த நாட்கள் இன்றும் என் நினைவிலாடுகின்றன. பாலிஷ் போட்டு பளபளவென்று மின்னும். அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு வருபவர்கள் கதவு மிகவும் அழகாய் இருக்கின்றது என்று கண்டிப்பாய்ப் பாராட்டிவிட்டுச் செல்வார்கள். திருஷ்டி படுகிறது என்று என் அம்மா கதவின் மேல் ஒரு சிறிய நிலைக்கண்ணாடி ஒன்றை மாட்டி வைத்தார்கள். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூட சமீபத்தில், “கதவும் ஜன்னலும் வீட்டின் அடையாளங்கள் மட்டும் அல்ல.அவை பண்பாட்டின் சின்னங்கள்” என்று எழுதியிருந்தார்.

நாங்கள் நால்வர். எங்கள் உலகமே அந்த வராந்தாவில்தான் சுழலும். அனைவரும் ஒரே பள்ளியில் படித்ததால், மாலையில் பள்ளி விட்டு வந்தவுடன் அவரவர் வகுப்பில் என்னென்ன நடந்தது என்று வராந்தாவில் உட்கார்ந்து விவாதிப்போம். வராந்தாவின் கிரில்கள் மிகவும் வித்தியாசமானவை. என் தந்தை தெய்வ பக்தி மிக்கவர். கிருஷ்ணர் அபிமானி. எனக்குக்கூட அதனாலேயே அந்தப் பெயரையே வைத்துள்ளார். அவருடைய அந்த அபிமானம் எங்கள் வீட்டு கிரில்களில் பிரதிபலித்தது. வீடெங்கும் கிருஷ்ணர் நீக்கமற கிரில்கள் மூலம் நிறைந்திருப்பார். வாசலில் மிகப் பெரிய குத்துவிளக்குகள் இரண்டு, பக்கத்து கிரில்களில் ராதையுடன் கிருஷ்ணரும், ஊஞ்சலாடும் குழந்தைக் கிருஷ்ணரும் இருக்கும். அந்த வராந்தாவுக்கு ஜன்னல்கள் கிடையாது. கிரில்கள் மட்டுமே. அதனை ஒரு ஆர்டிஸ்ட் மூலம் வரைந்து பின் கிரில் செய்பவரிடம் கொடுத்து ஸ்பெஷலாக டிசைன் செய்ததாக என் தந்தை கூறியுள்ளார். அதைப் பற்றி அவ்வளவு பெருமை அவருக்கு. புதிதாய் வீடு கட்டுபவர்கள் கிரில் டிசைன் மிகவும் அழகாய் இருக்கிறதென்று வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு போன சம்பவங்களும் உண்டு.

இரவு லட்சக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டு வருவதைப் போல எங்கள் வீட்டுக் கிரில்களும் எண்ணற்ற இனிய நினைவுகளைக் கொண்டு வந்து சேர்க்கின்றன. கிரில்கள் எத்தனைதான் அழகாய் இருந்தாலும் அவற்றால் என் அம்மாவுக்கு ஒரு கஷ்டம் ஏற்ப்பட்டது. அவற்றைத் துடைப்பது கடினமாயிருந்தது. நுணுக்கமான வேலைப்பாடுகளை அவை கொண்டிருந்தமையால் தூசியை அகற்றுவது கடினமாயிருந்தது. அதை அகற்ற என் அம்மா ஒரு திட்டம் அறிவித்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் கிரில்கள் , கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை நாங்கள் துடைத்து சுத்தம் செய்தால் மாலையில் அனைவரையும் திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வதுதான் அந்த அறிவிப்பு. தியேட்டர் வீட்டின் அருகிலேயே இருந்தது. நாங்கள் அனைவரும் அத்தனை சுட்டி. விரைவிலேயே முடித்துவிட்டு மதியமே அழைத்துச் செல்லச் சொல்வோம்.

பொதுவாகவே சிறிய ஊர்களில் கொல்லைப் புறங்களில் தான் அதிகம் பழங்குவார்கள். என் அம்மா வீட்டிலும் அப்படித்தான். காய்கறி அரிவது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது என்று அத்தனை வேலைகளையும் அம்மா அங்குதான் செய்வார். சமயங்களில் நாங்களும் வேலை செய்வோம். சமயங்களில் அங்குள்ள ஓர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம். முருங்கை மரத்தின் காய்களைப் பறிப்பது, இருக்கும் மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளைப் பகிர்ந்து செய்வோம்.

வாழ்க்கை என்னும் நீரோடை எங்கள் நால்வரையும் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்றாலும், பண்டிகை , விடுமுறை ஆகிய நாட்களில் நாங்கள் அனைவரும் குடும்ப சகிதம் அம்மா வீட்டில் இணைந்துவிடுவோம். நாங்கள் பேசிய பேச்சுகள்,விளையாடிய விளையாட்டுகள் இப்படியாக இரவு நெடுநேரம் வரை பேசி மகிழ்வோம். வீட்டின் ஒவ்வொரு பொருளும் ஒரு சம்பவத்தை நினைவு படுத்துவதாய்த் தோன்றும். பழைய ஆல்பங்களை எடுத்துப் பார்ப்போம். ஆச்சர்யம் என்னவென்றால் எங்கள் குழந்தைகளுக்கும் எங்களுடைய அம்மா வீடு மிகவும் பிடித்துப்போனதுதான். அவர்களுக்கும் சைக்கிள் பழக, வீதிகளில் விளையாட என்று மிகவும் வசதியாக இருப்பதால் அங்கு செல்ல ஆசைப்படுகிறார்கள்.

நான் சின்ன வயதில் பார்த்தபோது என்னுடன் பேசிப் பழகி விளையாடிய என் வயதை ஒத்தவர்கள் இப்போது யாரும் அங்கில்லை. காலத்திற்கேற்ப பல மாற்றங்கள் அருகில் உள்ள வீடுகளில். என்றாலும் மிக நீண்ட பெரிய படிகளில் உட்கார்ந்து கொண்டு நாங்கள் பெண்கள் மூவரும் என் தம்பியுடன் பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருப்போம். பக்கத்து வீட்டுப் பெண்களுடன் போட்டி போட்டுக்கொண்டு வாசலை அடைத்துக் கோலங்கள் போட்டது, ஓவர் டாங்கு நிரம்பி வழியும் நீரில் குளித்தது, பால் ஐஸ், கப் ஐஸ் என்று தெருவில் போகும் ஒன்றைக் கூட விடாமல் வாங்கிச் சாப்பிட்டது, பள்ளியிலிருந்து சைக்கிள் ஓட்டிக்கொண்டு வராமல் தோழிகளுடன் பேசிக்கொண்டே உருட்டிக்கொண்டே வீடு வரை வந்தது என்று நினைவலைகள் நீண்டுகொண்டே போகும்.

இப்படியாக என் அம்மா வீட்டின் ஒவ்வொரு அடியும் எனக்குப் பிடித்த இடம்தான். பூலோகத்தில் உள்ள சொர்க்கம்தான் அது. மீண்டும் நான் சிறுமியாய் உணரப்படும் தருணங்களைத் தர வல்லது.



இந்தப் பகுதியில் நீங்களும் பங்களிக்கலாம். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த பகுதி ஒன்று இருக்கும். மன இறுக்கமாக உள்ள வேளைகளில் உங்களை இளைப்பாற்றும் உங்கள் ஊஞ்சலைப் பற்றி எழுதலாம். நீங்கள் நிதானமாக அமர்ந்து தேநீர் அருந்தும் பால்கனியைப் பற்றி எழுதலாம். வீடு என்பது செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. வாழ்க்கை என்பதன் திரு உருவம். இதை எடுத்துரைப்பதே இந்தப் பகுதி. உங்கள் வீட்டின் பிடித்த பகுதியின் புகைப்படத்துடன் உங்கள் புகைப்படத்தையும் சேர்த்து எங்களுக்கு அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி - சொந்த வீடு, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x