Published : 31 Oct 2015 11:49 AM
Last Updated : 31 Oct 2015 11:49 AM
பிரபஞ்சம் பெரிய பூ; பூ சிறிய பிரபஞ்சம் என்ற கவிக்கோவின் வரிகளைத் தினமும் உணர்த்துகின்றன என் நந்தனவனப் பூக்கள். எனக்கு மிகவும் பிடித்த இடம், பூக்கள் குலுங்கும் இந்த மாடிதான். நான் சொல்லாமலேயே என் சுக/துக்கங்களைப் புரிந்துகொள்ளும் இந்த மாடி எனக்கு ஓர் உற்ற தோழி என்றும்கூடச் சொல்லலாம். வீட்டுக்குள் வேலை மிகுதியால் திணறும் நேரத்தைவிட மாடியில் இருந்து ஆனந்தத்தில் திளைக்கும் நேரமே அதிகம். மாடிக்கு ஏறிச் சென்று நின்றால் போதும். எங்கிருந்தோ ஓடி வந்து ஆனந்தமும் உற்சாகமும் என்னை அணைத்துக்கொள்ளும்
மைனாக்களின் ஜூகல் பந்தி
“அப்படி என்னதான் இருக்கிறது மாடியில்?” என்ற என் கணவரின் கேள்வி உங்களுக்குள்ளும் எழுந்திருக்கும். காகமும் குயில்களும் மைனாக்களும் ஜூகல் பந்தி நடத்தும் கலையரங்கம் அது. ஓய்வெடுத்துக்கொண்டே ஓரக் கண்ணால் குருவியை நோட்டமிடும் பூனைகளும் செல்ல நாயும் அந்தக் கலையரங்க அவையின் உறுப்பினர்கள்.
மாடியின் மரம், செடி, பூக்களிடம் பழகப் பழக சொற்கள் அர்த்தமற்றுப் போயின. அவற்றின் அசைவு உணர்வு களாக வெளிப்படும். பறிக்க முடியாத தூரத்திலிருந்தே செண்பகத்தை “நீ வரலியா?” என்று நான் பார்த்த நேரத்தில் மெல்லிய பூங்காற்றில் அப்பூங்கிளை என் கைகளுக்குள் வரும். ஊருக்குச் செல்லும்போது ஒவ்வொருவரிடமும் சொல்லிவிட்டே செல்வேன். இல்லையென்றால் கோபித்துக்கொள்வார்கள். அது எப்படி எனக் கேடிகிறீர்களா?
செல்லக் குழந்தைகளின் குறும்புகளை அனுபவிக்க முடியும். அதை எப்படி வார்த்தைகளால் விளக்க முடியும் சொல்லுங்கள்? நான் பெற்றெடுத்த குழந்தைகள் அவர்களின் கல்விக்காக வெகுதூரம் என்னைவிட்டுத் தள்ளியிருக்கிறார்கள். நான் வளர்க்கும் இந்தக் குழந்தைகளோ என்னைத் தாயாக மாறித் தாங்குகிறார்கள். என் வாழ்வின் ப்ரியத்துக்குரியவர்களை இழந்து நான் தவித்து, அழுதபோதெல்லாம் இந்தப் பூமரங்கள் என்னை மெளனமாகத் தேற்றியிருக்கின்றன. மழைக்குப் பிறகு இந்தப் பச்சை மரங்கள் வெளுக்கும்போது என் மன இருள் விலகி ஓடும்.
அக்கம் பக்கத்தினரின் நல்லுறவு
விசேஷ நாட்களில் பூக்களின் விலையேறும். எனக்கொரு கவலையும் இல்லை. வருடத்தில் ஓரிரு மாதங்கள் தவிர எப்போதும் பூக்காடாகக் காட்சியளிக்கும் நம் வீடு. மகிழம்பூ, மனோரஞ்சிதம், நித்யமல்லி, ஜாதிப்பூ, மஞ்சள் வெள்ளி செண்பகங்கள், பவள மல்லி, பன்னீர் பூ இவை மட்டுமல்லாமல் சம்பங்கி, அரளி, நந்தியவட்டை, மந்தாரை எனப் பூக்கள் பூத்துக் குலுங்கும். பூப்பதில் இவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம் உண்டு. ஒருவர் மாற்றி ஒருவர் பூத்துத் தள்ளுவார்கள். பூக்களைப் பறித்துத் தொடுப்பது ஒருவிதமாக மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும். தவனம், நவதள வில்வம், வெற்றிலை போன்றவற்றையும் தொட்டிகளில் வளர்த்துவருகிறோம்.
நகரத்தில் இதுபோல் பூக்களின் சாம்ராஜ்ஜியம் அமைக்க அக்கம் பக்கத்தினரின் நல்லுறவும் அவசியம். நாம் இல்லாத நாட்களில் அந்தப் பச்சைக் குழந்தைகளைத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க எனக்கு ஒரு உமா மாமி கிடைத்தார். பூக்களை இருவருமே பறித்துப் பகிர்ந்துகொள்வோம். சருகுகள் அவர் வீட்டில் விழுந்தால், சண்டைக்கு வராமல், “இது இலையுதிர் காலம்” என்பார் மாமா. இவர்கள் அமைந்தது இறையருள்.
சிறியதில் அழகு
இதையெல்லாம் படித்து வியக்க வேண்டாம். கோயம்புத்தூரில் காட்டூர் பகுதியில் மூணரை செண்ட் நிலப் பரப்பில் அமைந்த எங்கள் வீட்டின் மாடியைப் பற்றித்தான் பேசுகிறேன். இந்த இடத்துக்குள்தான் நான் இந்தக் குழந்தைகளை வளர்த்துவருகிறேன். “உனக்கு என்ன கிடைத்திருக்கிறது என்பது முக்கியமல்ல; அதை எவ்வாறு அழகாக மாற்றுகிறாய் என்பதுதான் முக்கியம்” என்ற குருவின் வரிகள்தான் என்னை யோசிக்க வைத்தது.
கொளுத்தும் வெயிலில் துணிகளையும் பொருட்களையும் உலர்த்தும் இடம் மட்டும்தான் மொட்டை மாடியா? பசுமையாக, குளுமையாக ஒரு மொட்டை மாடியை உருவாக்க ஆசைப்பட்டேன். எலிப் பொந்து இடத்தை வைத்துக்கொண்டு ஏக்கர் கணக்கில் கனவு கண்டேன். நிதானமாக யோசித்து ஒவ்வொன்றாகச் செய்தேன். ஒரு வருடத்தில் குட்டிச் செடிகள் சிறு மரங்களாக ஆயின. இந்த மாடித் தோட்டத்துக்குச் சிறிய முயற்சிகள் போதாது. விக்கிரமாதித்தன்போல் ‘சற்றும் மனம் தளராத’ தீவிர முயற்சி தேவை.
மாடியில் பூ மரங்களோடு, முருங்கை மரமும், தொட்டிகளில் பிரண்டை, வெற்றிலை, முடக்கத்தான், மஞ்சள் பசலை இவையும் உண்டு. சருகுகளே உரமாவதால் இவற்றின் ருசியே தனி. உறவுக்கும் நட்புக்கும் நம் மாடியிலிருந்து பறித்துக் கொடுக்கும்போது ரொம்ப சந்தோஷமாய் இருக்கும்.
இந்த ஆனந்தத்தை நீங்களும் அனுபவிக்க ஆசைப்பட்டால், உங்களுக்குச் சில யோசனைகள்:
# செழிப்பான சற்றே உயரமான செடிகளைத் தேர்வுசெய்ய வேண்டும்
# மாடியில் தொட்டிகளில் நான்கு அடி உயரம் வரை வளர்க்க வேண்டும்
# பின், மண் தரையில் மிகக் கவனமாக இடம் மாற்றுதல் வேண்டும்
# சணலால் வெயில் படுமாறு இழுத்துக் கட்ட வேண்டும்
# காலங்களைக் கவனித்து சூரிய ஒளி படும் இடங்களைத் தேர்வுசெய்து சணலின் திசையை அமைக்க வேண்டும்
# இதை எல்லாம் செய்தால் கண்டிப்பாக ஒரு வருடத்துக்குள் மாடி முழுவதும் குட்டிச் செட்டிகள் எட்டிப் பார்க்கும்
இந்தப் பகுதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த பகுதி ஒன்று இருக்கும். மன இறுக்கமாக உள்ள வேளைகளில் உங்களை இளைப்பாற்றும் உங்கள் ஊஞ்சலைப் பற்றி எழுதலாம். நீங்கள் நிதானமாக அமர்ந்து தேநீர் அருந்தும் பால்கனியைப் பற்றி எழுதலாம். வீடு என்பது செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. வாழ்க்கை என்பதன் திரு உருவம். இதை எடுத்துரைப்பதே இந்தப் பகுதி.
உங்கள் வீட்டின் பிடித்த பகுதி பற்றிய புகைப்படத்துடன் உங்கள் புகைப்படத்தையும் சேர்த்து எங்களுக்கு அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: சொந்த வீடு, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT