Published : 24 Oct 2015 10:18 AM
Last Updated : 24 Oct 2015 10:18 AM
பார்த்து பார்த்து வீட்டைக் கட்டும் நம் வீட்டை அழகுபடுத்துவது முக்கியம். அதில் முக்கியமானது வீட்டுக்கு அறைக்கலன்கள் வாங்குவது ஆகும். அறைக்கலன்கள் என்றதும் வேகமாகச் சென்று வாங்விடக் கூடாது. அது நம் வீட்டின் அளவுக்குச் சரியாக இருக்குமா, வீட்டின் வண்ணத்துக்கு ஏற்ப இருக்குமா என்று பார்த்து வாங்க வேண்டும்.
கட்டில், மேஜை, சோஃபா போன்ற வெறும் பொருள்களல்ல அறைக்கலன்கள். அவற்றை உணர்வுபூர்வமாகத் தேர்வுசெய்ய வேண்டும். அப்படித் தேர்வுசெய்தால்தான் அவை எல்லாம் சேர்ந்த நமது வீட்டை வாழுமிடமாக மாற்றும். முன்பைவிட அறைக்கலன்கள் வாங்குவதில் இப்போது அதிக நாட்டம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் வீட்டுக்குச் செலவழிப்பதைப் போல அறைக்கலன்களுக்கும் செலவிடும் கலாச்சாரம் இப்போது உள்ளது.
இப்படிக் கணக்கு வழக்கில்லாமல் அறைக்கலன்களை வாங்கிப் போடுவதை விட்டுவிட்டு தேவையான அளவு வாங்கினால் பயனாகவும் இருக்கும் வீட்டுக்கும் அழகு சேர்க்கும். அதுபோல நாம் வாங்கும் பொருள்கள் தரமாகவும் இருக்க வேண்டுமென்பதிலும் கவனம் வேண்டும்.
சோபா வாங்குகிறோம் என்றால் மேலோட்டமாகப் பார்த்து வாங்கக் கூடாது. அதன் வண்ணப்பூச்சு எப்படி இருக்கிறது என்பதைச் சுற்றும் முற்றும் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். மரச் சக்கைகள் ஏதும் நீட்டிக்கொண்டிருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆணிகள் ஏதும் சரிசெய்யாமல் இருக்கிறதா எனவும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல சோபாக்களுக்கு மெத்தை வாங்கும்போது, அது வீட்டு வண்ணத்திற்குப் பொருத்தமானதாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அது சரியாகத் தைக்கப்பட்டிருக்கிறதா எனவும் பார்த்துக்கொள்ள வேண்டும். பீரோ போன்ற இரும்பு சாமான்களில் எந்தவிதமான பிசிறும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அறைக்கலன்கள் வாங்குவதைவிட அதைப் பொருத்தமான இடத்தில் வைக்க வேண்டும். அதுதான் முக்கியமானது. வீட்டை அடைத்துக் கொண்டிருப்பது போலத் தெரியக் கூடாது. அறைக்கலன்கள் மேஜைகளாக, ஷோபாக்களாகப் பயன்பட வேண்டும். அதேசமயம் வீட்டின் உள் அலங்காரத்தையும் அவை கூட்டுவதாக இருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT