Published : 08 Feb 2020 11:52 AM
Last Updated : 08 Feb 2020 11:52 AM
கனி
கதவுகள் திறந்து மூடுவதற்கானவை மட்டுமல்ல. அவை இரண்டு இடங்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துபவை. வெளியே வருவதையும், உள்ளே செல்வதையும் தீர்மானிப்பவையாக உள்ளன. பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன், வடிவமைப்பு, பொருட்கள் என ஒரு சிறந்த கதவின் முக்கியமான அம்சங்கள் பல.
இன்று சந்தையில் கதவுக்கான பல விதமான பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றில் கதவுக்கான சரியான பொருளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்லாமல் நீடித்து உழைக்கக்கூடிய பொருளாகத் தேர்ந்தெடுப்பது அவசியம். கதவுக்கான சிறந்த பொருட்களைத் தேர்தெடுப்பதற்கான சில ஆலோசனைகள்…
மரம்
கதவுகளை வடிவமைப்பதற்கு அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய பொருள் மரம். வீட்டின் அலங்காரத்துக்கு ஏற்றதாக இருப்பவை மரக்கதவுகள்.
சாதகங்கள்
* மரக் கதவுகள் பல விதமான மர வகையில் தயாரிக்க முடியும். அத்துடன் இவற்றில் தனித்துவமான வடிவமைப்பை உருவாக்க முடியும்.
* நவீன வீடுகள், பாரம்பரிய வீடுகள் என இரண்டுக்குமே மரக்கதவுகள் பொருத்தமானதாக இருக்கும்.
பாதகங்கள்
* மரம் எளிதில் கரையான்களால் அரிக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
* காலப்போக்கில், மரக்கதவுகள் பிளவுபடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
* மரக்கதவுகளைப் பராமரிப்பது கடினம். அவற்றைப் பாதுகாப்பதற்கு அவ்வப்போது மெருகூட்டப்படுவது அவசியம்.
* அத்துடன், மரம் ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் நாளடைவில் கதவுகள் வீக்கமடையும்.
* மரக் கதவுகள் விலையுயர்ந்தவை.
(மரக்கதவுகளுக்கு மாற்றாக இப்போது ‘ஃப்ளஷ்’ கதவுகள் (Flush Doors) பயன்படுத்தப்படுகின்றன. இவைப் பார்ப்பதற்கு மரக் கதவுகள் போல் இருக்கும். மரக்கதவுகளுடன் ஒப்பிடும்போது இவற்றின் விலையும் குறைவு).
கண்ணாடி
வீட்டுக்கு வெளிப்படைத்தன்மைக் கொடுப்பதில் கண்ணாடிக் கதவுகளுக்கு நிகரில்லை. கண்ணாடி இழுவைக் கதவுகள் (Opaque glass sliding doors) இப்போது பிரபலமான தேர்வாக இருக்கின்றன. படுக்கையறை, குளியலறைக்கு ஏற்றவை இந்தக் கதவுகள்.
சாதகங்கள்
* கண்ணாடி வெளிப்படைத்தன்மைவாய்ந்த பொருள். அதனால், இது வீட்டுக்குத் திறந்தவெளித் தன்மையைக் கொடுக்கும்
* இயற்கை வெளிச்சத்தை வீட்டுக்குள் கொண்டுவருவதில் கண்ணாடிக்கு நிகரான பொருள் இல்லை. பால்கனியில் பயன்படுத்துவதற்குக் கண்ணாடிக்கதவுகள் ஏற்றவை.
* துருப்பிடித்துவிடும், கரையான் அரித்துவிடும் என்று கண்ணாடிக் கதவைத் தேர்ந்தெடுப்பவர்கள் பயப்படவேண்டியதில்லை.
பாதகங்கள்
* கண்ணாடிக் கதவுகளை அவ்வபோது சுத்தம்செய்யவேண்டும்.
* கண்ணாடியில் கீறல் விழாமல் பார்த்துகொள்வதற்கு மெனக்கெட வேண்டியிருக்கும்.
* தனிமை வேண்டுமென்று விரும்புபவர்கள் சாதாரணக் கண்ணாடிக் கதவுகளுக்குப் பதிலாக அரக்குச் சாயம் பூசப்பட்ட கண்ணாடிக் கதவுகளைத் (Lacquered glass doors) தேர்வுசெய்யலாம்.
அலுமினியம்
நவீனத்தை விரும்புபவர்கள், தொழில்முறை வடிவமைப்பை விரும்புபவர்கள் அலுமினியச் சட்டகத் கதவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
சாதகங்கள்
* அலுமினியக் கதவுகள் நீடித்து உழைக்கக்கூடியவை.
* அலுமினியச் சட்டகக் கதவு களில் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற வண்ணத்தைத் தேர்வுசெய்யலாம்.
* மரக்கதவுகளைப் போல விரிசல் விடுவதற்கான வாய்ப்பு இந்தக் கதவில் இல்லை.
பாதகங்கள்
* உப்புக்காற்றுப் பட்டால், அலுமினியக் கதவுகள் பாதிக்கப்படுவதற்கு சாத்தியமிருக்கிறது. அதனால், கடலுக்கு அருகில் வசிப்பவர்கள் அலுமினியக் கதவுகளைப் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.
யுபிவிசி
யுபிவிசி கதவுகளைத் தேர்வுசெய்பவர்கள் இப்போது அதிகரித்துள்ளார்கள்.
சாதகங்கள்
* யுபிவிசி கதவுகள் எடைகுறைந்தவை. ஆனால், வலிமையானவை. நீடித்து உழைக்கக்கூடியவை. அவை துருப்பிடிக்க வாய்ப்பில்லை. கடலோரப் பகுதிகளிலும் இந்தக் கதவுகளைப் பயன்படுத்தலாம்.
* உங்கள் விருப்பத்துக்கேற்ற பூட்டு அமைப்பை இதில் பொருத்திக்கொள்ளலாம்.
* இந்தக் கதவுகளைப் பராமரிப்பது எளிது. சாதாரணத் துணியை வைத்து அவ்வப்போது துடைத்துவந்தால் போதுமானது.
பாதகங்கள்
* நாளடைவில் யுபிவிசி கதவுகளின் நிறம் மஞ்சளாக மாறிவிடும். அதனால், தரமான யுபிவிசி பொருளைத் தேர்வுசெய்வது அவசியம்.
* குறிப்பிட்ட வடிவமைப்பு, நிறங்களில் மட்டுமே யுபிவிசி கதவுகள் கிடைக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT