Published : 08 Feb 2020 11:37 AM
Last Updated : 08 Feb 2020 11:37 AM
ஜி.எஸ்.எஸ்.
வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்காக நாம் இடம் மாறக் கூடும். இல்லையெனில் இட நெருக்கடி காரணமாகக் கொஞ்சம் விசாலமான வாடகை வீட்டுக்கு நாம் இடம் மாறக்கூடும். வீடு மாறுகிறோம் என்பது அவ்வளவு எளிய காரியமல்ல.
பொருளை ஏற்றினோம், புதிய வீட்டில் இறக்கினோம், அங்கே ஒழுங்குபடுத்தினோம் என்று சில வார்த்தைகளில் அடங்கிவிடக் கூடியது அல்ல இந்த இடமாற்றம். ‘கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்’ என்கிறது பழமொழியில் ‘வீட்டை மாற்றிப் பார்’ என்ற புதுமொழியைக்கூடச் சேர்த்துக் கொள்ளலாம்.
சிக்கல்கள் இல்லாமல் அல்லது குறைந்தபட்ச சிக்கல்களுடன் வீடு மாற்றம் நடைபெற வேண்டுமென்றால் சில விஷயங்களில் கவனமும் முன்னேற்பாடும் தேவை. இடம் மாறுவதற்குக் குறைந்தது ஒரு மாதத்துக்கு முன்பாவது நீங்கள் உங்கள் பொருட்களைக் கட்டத் தொடங்கிவிட வேண்டும்.
ஆனால், பல பொருட்கள் புழக்கத்தில் இருக்கும்போது அவற்றைத் தொடக்கத்திலேயே பேக் செய்ய முடியாதுதான். எனவே, இன்னும் ஒரு மாதத்துக்காவது தேவைப்படாத பொருள்கள் எவையோ அவற்றை முதலில் பெரிய அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைத்து விடுங்கள். முக்கியமாகப் புதிய வீட்டின் பரண்களில் எவற்றை ஏற்றப்போகிறீர்களோ அவற்றையெல்லாம் முதலில் ஏறக் கட்டிவிடலாம்.
ஒவ்வொரு அட்டைப் பெட்டியின் மேலும் அதில் என்ன மாதிரிப் பொருள்களை வைத்திருக்கிறீர்கள் என்பதை எழுதுங்கள். புதிய இடத்தில் குடியேறிய ஒரு வாரத்துக்காவது உங்களுக்கு எதை எங்கே வைத்தோம் என்பதில் தடுமாற்றம் ஏற்படலாம். எனவே, புதிய வீட்டுக்குப் போய் ஒரு வாரத்துக்குத் தேவைப்படும் அத்தனை விஷயங்களையும் ஒரு தனிப்பெட்டியில் வைத்து எடுத்துச் செல்லுங்கள். இதில் உடைகள், ஒப்பனைப் பொருள்கள், பேனா, ஷேவிங் செட் உள்ளிட்ட அனைத்துமே அடக்கம்.
புதிய வீட்டில் ஒவ்வொரு விதமான பொருளையும் எங்கே வைக்கப் போகிறீர்கள் என்பதையும் திட்டமிடுங்கள். இரண்டுக்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட வீடு என்றால் இது மேலும் அவசியம். இப்படி எந்த அறையில் வைக்க விரும்புகிறீர்களோ அந்த அறையின் எண்ணையும் அட்டைப் பெட்டிகளின் மேல் எழுதுங்கள்.
உதாரணமாக - கூடம், அறை-1, அறை-2, அறை-3, சமையலறை என்பதுபோல. சாமான்கள் புதிய வீட்டை முதலில் அடையும்போது அங்கு இருப்பது நீங்களாக இல்லாவிட்டால்கூட அவற்றை எடுத்துச் செல்பவர்களுக்கும், உங்களுக்கு உதவ அங்கு செல்லும் நபர்களுக்கும் சாமான்களை அந்தந்த அறையில் வைப்பது சாத்தியப்படும். இதன் மூலம் அவற்றைப் பிரித்து அடுக்குவது எளிதாக இருக்கும்.
இடம் மாறுவது என்பது ஒருவிதத்தில் ஒரு பொன்னான வாய்ப்பு. வேண்டாத பொருள்களைக் கழித்துக் கட்டுவதற்க இது ஓர் அரிய சந்தர்ப்பம். ‘நன்றாக இருக்கிறதே எப்படித் தூக்கிப் போவடுவது? ’ ‘எப்போதாவது உதவும்’ என்றெல்லாம் எண்ணி குவித்து வைத்திருப்பவற்றை யாருக்காவது கொடுத்து விடுங்கள்.
தெரிந்தவர்களில் அப்படி யாரும் இல்லாவிட்டால் ஆதரவற்ற அல்லது வறிய முதியோர் இல்லங்களுக்குத் தானமளித்து விடலாமே. இடமும் மிச்சமாகும். நன்மையும் செய்தவர்கள் ஆகிறீர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் எதை ஒருமுறைகூடப் பயன்படுத்தவில்லையோ அதை வருங்காலத்திலும் பயன்படுத்தப் போவதில்லை - இதை மனத்தில் கொண்டு நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டியவற்றை - நீக்கப்பட வேண்டியவற்றைப் பிரிக்கலாம்.
அட்டைப் பெட்டிகளின் மீது எழுதுவதைவிடச் சிறந்தது லேபிள்களை அவற்றின்மீது ஒட்டி எழுதுவது. பெரிய சைஸ் லேபிள்கள் 20 அடங்கிய தாள் வெறும் ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கும்.
முழுவதும் நிரப்பப்பட்ட அட்டைப் பெட்டிகளைத் தனியாக ஓரிடத்தில் வையுங்கள். அப்படி ஓர் அறையை இதற்காக ஒதுக்க முடியாது என்றால் ஒரு பரணைக் காலிசெய்து அதில் ஏற்றுங்கள்.
எந்த அட்டைப் பெட்டியிலும் மிக அதிக சுமைகளை ஏற்றாதீரகள். பாதிவழியில் பிய்ந்துகொண்டால் பெரும் சிக்கல். ஷோகேஸில் உள்ள பொருட்கள், கண்ணாடிச் சாமான்கள் ஆகியவற்றை பேக் செய்வதில் அதிகக் கவனம் தேவை. ஒவ்வொன்றையும் தகுந்த துணியில் சுற்றி வையுங்கள். இரண்டு, மூன்று பொருள்களை ஒரே துணியில் சுற்றி வைக்க வேண்டாம். உராய்வு காரணமாக அவை உடையக் கூடும்.
பிளாஸ்டிக் தீங்கானதுதான். ஆனால், இடம் மாறும்போது தடிமனான பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தலாம். சிந்தும் தன்மை கொண்ட பொருட்களை அவற்றில் எடுத்துச் செல்வது நல்லது. ஜிப் லாக் கவர்கள் இவற்றுக்கு ஏற்றவை.
புதிய வீட்டுக்குப் போய் சில வாரங்களுக்குப் பிறகுதான் பயன்படுத்த நேரிடும் என்றவகை துணிகளை, அங்கு போன பிறகு இஸ்திரி செய்வது நல்லது. இல்லையென்றால் போக்குவரத்தின்போது அவை கசங்கிவிடும்.
மிக மதிப்புள்ள எல்லாப் பொருட்களையும் (நகைகள், வீட்டு ஆவணங்கள், டெபாசிட் சான்றிதழ்கள், கல்வி ஆவணங்கள் போன்றவை) ஒரு பெரிய சூட்கேஸில் வைத்துக்கொள்ளுங்கள்.
சொல்லப் போனால் இவற்றில் மிக முக்கியமானவற்றை வங்கி லாக்கரில் வைத்துவிட்டு புதிய வீட்டில் செட்டிலான பிறகு சிறிது காலத்துக்குப் பிறகும் அவற்றை எடுத்துக்கொள்ளலாம். முக்கிய ஆவணங்களை ஸ்கான் செய்து விடுங்கள் அல்லது செல்போனிலாவது படமெடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT