Published : 25 Jan 2020 12:48 PM
Last Updated : 25 Jan 2020 12:48 PM

வீடு பழுது நீக்க முயன்றவரின் கதை

ஜி.எஸ்.எஸ்.

என் நண்பர் ஒருவரின் அனுபவம் இது: பத்து வருடங்களுக்கு முன்னால் வீடு கட்டினேன். பெரிதாக எந்தத் தொந்தரவும் இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் என் பக்கத்து வீட்டுக்காரர் தனது வீட்டை இடித்து அதைப் பெரிதாகக் கட்டினார். அதற்காக அவ்வப்போது எங்கள் சாலையில் லாரிகள் வருவதும், போவதுமாக இருந்தன. ஒரு நாள் என் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தபோது ஒருவர் வந்தார்.

பக்கத்து வீட்டுக் கட்டுமான மேற்பார்வையாளர் அவர், “உங்கள் வீட்டில் ஏதாவது பிரச்சினைகள் உண்டா?’’ என்று கேட்டார். என் வீட்டுச் சுவரின் ஒரு பகுதியில் லேசான தண்ணீர்க் கசிவு இருந்தது. இதைக் கூறியபோது ‘’நான் உள்ளே வந்து பார்க்கலாமா?’’ என்றார். அழைத்துச் சென்று காண்பித்தேன்.

பார்த்துவிட்டு என் வீட்டின் நிலைமையை ஏற்றுக் கொள்ளாதவர்போல் இருபுறமுமாகத் தன் தலையை அசைத்தார். ‘’இந்த லைனில் மிகுந்த அனுபவம் உள்ளவன் என்கிற விதத்தில் சொல்கிறேன். இந்தக் கசிவுகளை எல்லாம் உடனடியாகச் சரிசெய்யாவிட்டால் மின்விபத்து ஏற்படும்.

இப்படித்தான் எனக்குத் தெரிந்த வீட்டில் மின் விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் மருத்துவமனையில் மூன்று மாதங்கள் இருக்கும்படி ஆனது. தவிர ஒரு புயலோ, வெள்ளமோ வந்தால் உங்கள் வீடு தாக்குப்பிடிக்க வேண்டுமே’’ என்று கூறிவிட்டு ‘’சரிசெய்யறதுன்னா சொல்லுங்க குறைந்த தொகையில் சரி செஞ்சுடலாம்’’ என்றார்.

என் மனத்தில் பயம் ஏற்பட்டது. மனைவியிடம் கேட்டபோது “சில்லறை வேலைகளுக்கெல்லாம் நமக்கு ஆள் கிடைப்பது கஷ்டம். ஆள் கிடைக்கும்போதே இதையெல்லாம் சரி செய்துகொள்வது நல்லது’’ என்றாள்.

அடுத்த நாள் அந்த மேஸ்திரி என் வீட்டை தாண்டிச் சென்றபோது அடுத்த தூண்டிலை வீசினார். “சிமெண்ட் பற்றியெல்லாம் கவலை இல்லை சார். இப்போது நான் வேலை செய்யும் வீட்டிலேயே அதிகப்படி சிமெண்ட் இருக்கிறது. அதை நான் பயன்படுத்திக் கொண்டால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்’’ என்றார். சபலம் ஏற்பட்டு ஒத்துக்கொண்டேன்.

இப்படி விவரித்த நண்பருக்கு அதைத் தொடர்ந்து நிறைய எதிர்பாராத சங்கடங்கள் ஏற்பட்டன. சுவர்க் கசிவை நீக்கும் வேலைக்காக வந்தவர்கள் வீட்டிலுள்ள வேறு ஏதேதோ சிறு குறைகளையெல்லாம் சுட்டிக்காட்டி சரிசெய்ய வேண்டும் என்றார்கள். ஏதோ புதிய ரசாயனங்களை எல்லாம் சிமெண்டில் கலந்து போட்டால் மேலும் நல்லது என்றார்.

உடனடித் தேவை எதுவுமே இல்லாத பல பழுதையும் நீக்க வேண்டும் என்றார். முதலில் அவர் குறிப்பிட்ட தொகைக்கும், கடைசியில் அவர் கேட்ட தொகைக்கும் வித்தியாசம் 12,000 ரூபாய்! சிமெண்டுக்கும் முழுமையான பணத்தைப் பெற்றுக் கொண்டார். ‘’சிமெண்ட் தயாரா இருக்குன்னுதான் சொன்னேன். இலவசமா எப்படி சார் கிடைக்கும்?’’ என்றாராம்.

வீட்டின் எல்லாப் பழுதுகளும் சீரமைத்து முடித்த அடுத்த இரண்டு நாட்களிலேயே அடுத்த வீட்டின் கட்டுமானமும் முடிந்துவிட்டது. அதற்குப் பிறகு அந்த மேற்பார்வையாளரைக் காணவில்லை.

இப்படியெல்லாம் நேர்வதைத் தடுக்க சில ஆலோசனைகள்:

முன்பின் தெரியாத கட்டுமானக் கலைஞர்களை அப்படியே நம்பிவிடாதீர்கள். ஏற்கெனவே அவர்கள் எங்கு பணி புரிந்திருக்கிறாரோ அங்கு சென்று அவர்களின் வேலைத் திறன் பற்றியும், நாணயத்தைப் பற்றியும் விசாரியுங்கள்.

சாமான் வாங்கும்போது ஒத்துக்கொண்ட தொகையில் பெரும் பகுதியை முன்பணமாகக் கேட்பார்கள். கட்டுமானப் பொருள்களை வாங்க வேண்டும் என்பார்கள். அதை அப்படியே நம்பிவிட வேண்டாம். ஏனென்றால், இந்தத் துறையில் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு விற்பவரிடம் ஒரு சலுகையைக் கொடுத்திருக்க வாய்ப்பு அதிகம். சாமான்களைக் கொடுத்துவிட்டுப் பிறகு பணத்தைப் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடு இருக்கும். மிக அதிகமான தொகையை முன்பணமாகப் பெற்றுக்கொண்டவருக்கு அடுத்த வேலைக்கான வாய்ப்பு கிடைத்தால் அதில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கிவிட வாய்ப்பு உண்டு.

இன்னமும் குறைவான தொகைதான் பாக்கி என்கிற நிலையில் அவர் நமக்கான வேலையைச் சரியாக முடிக்காமல் போகலாம் அல்லது நமது வேலையை வெகு நாட்களுக்கு இழுத்தடிக்கலாம். சொல்லப்போனால் ஒப்புக்கொண்ட தொகையில் 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை வைத்துக்கொண்டு, வேலையை முடித்த பிறகுதான் தர வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

“இன்னும் ஒரு வாரம் கழிச்சுன்னா கூலி ஆளுங்க எல்லாம் சம்பளத்தை உயர்த்திடுவாங்க. அப்போது இந்தத் தொகைக்குக்கூட உங்களுக்குப் பண்ணித்தர முடியாது’’ என்பது போன்ற தூண்டில்களில் சிக்க வேண்டாம். முக்கியமாக “முன்னே வேலை செய்த இடத்திலேயே சிமெண்ட், ஜல்லி எல்லாம் மீந்து பேச்சு. அதையெல்லாம் பயன்படுத்தி கம்மி விலையிலே முடிக்கிறேன்’’ என்றால் ஒத்துக்கொள்ள வேண்டாம். வேறொருவரை ஏமாற்றுபவர் உங்களையும் ஏமாற்ற வாய்ப்பு அதிகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x