Published : 11 Jan 2020 02:20 PM
Last Updated : 11 Jan 2020 02:20 PM

நறுமண வீடுகள்

கனி

ஒரு வீட்டுக்குள் நுழைந்தவுடன், அதன் வாசம்தான் முதலில் நம்மை ஈர்க்கும். சில வாசம் புத்துணர்ச்சி அளிப்பதாக இருக்கும். சில வீடுகளின் வாசம் மல்லிகை, ரோஜா எனப் பூக்களை நினைவுப்படுத்தும். ஒரு வீட்டின் மனநிலையைத் தீர்மானிப்பதில் நறுமணத்துக்கு முக்கியப் பங்கிருக்கிறது.

வீட்டுக்கான நறுமணத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், ‘என் வீட்டுக்கு எந்த நறுமணம் சரியாக இருக்கும்?’ என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கும். வீட்டில் வாசம் வீசுவதற்காகப் பயன்படுத்தும் நறுமணங்கள் இப்போது பல வகையில் கிடைக்கின்றன. எந்த அறைக்கு எந்த நறுமணம் சரியாக இருக்கும், வீட்டுக்கான நறுமணத்தை எப்படித் தீர்மானிப்பது என்பதற்கான சில ஆலோசனைகள்…

காற்றோட்டம், வெளிச்சம்

நீங்கள் எப்படிப்பட்ட வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், அந்த இடத்தில் காற்றோட்டம், வெளிச்சம் இருக்க வேண்டியது அவசியம். எவ்வளவு சிறப்பான நறுமணப் பொருளாக இருந்தாலும், இயற்கையான வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லாத இடத்தில் பயன்படுத்தினால் எந்தப் பலனும் இருக்காது. அத்துடன், இந்த நறுமணப் பொருட்கள் அறையில் இருக்கும் கிருமிகளை அழிக்கவும் உதவும்.

மெழுகுவர்த்திகள்

வீட்டின் நறுமணத்துக்காக இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுபவை வாசனை மெழுகுவர்த்திகள்தாம். வாசனைப் பொருட்களில் மெழுகுவர்த்திகள்தாம் பிரபலமாக இருக்கின்றன. அவை வாசனையை அழகாக அறையில் பரவவைப்பதோடு, அறைக்கு புத்துணர்ச்சி தரும் வெளிச்சத்தையும் வழங்குவதுதான் அதற்குக் காரணம். வீட்டில் அதிகமான நேரத்தை எந்த அறையில் செலவிடுகிறோமோ, அந்த அறையில் வாசனை மெழுவர்த்திகளைப் பயன்படுத்துவது சிறந்தது.

வரவேற்பறை, சமையலறை ஆகிய இரண்டு அறைகளும் வாசனை மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துவதற்குச் சிறந்தவை. நீண்ட நேரம் அறையில் வாசம் தங்க வேண்டுமென விரும்பினால், வாசனை மெழுகுவர்த்தியைக் குறைந்தது மூன்று மணி நேரமாவது எரியவிட வேண்டும். மெழுகுவர்த்தி உருக உருக அறையில் வாசனை பரவத் தொடங்கும். இந்த வாசனை மெழுகுவர்த்திகள் அறையை அலங்கரிக்கவும் சிறந்தவை.

ஸ்ப்ரே

காற்றோட்டமான அறைகளுக்கு வாசனை ‘ஸ்ப்ரே’வைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். உணவு, செல்லப்பிராணிகளின் வாசத்தைப் போக்குவதற்குச் சிறந்தது வாசனை ‘ஸ்ப்ரே’. உடனடியாக, அறையின் வாசத்தை மாற்றுவதற்குச் சரியானது வாசனை ‘ஸ்ப்ரே’தான். வாசனைப் பொருட்களைப் பொறுத்தவரை, அறையில் முதலில் ஸ்ப்ரேவைப் பயன்படுத்திய பிறகு, வாசனை மெழுகுவர்த்திகள், எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

எண்ணெய் எரிகருவி

எண்ணெய் எரிகருவி(Oil Burner), சிறிய மெழுகுவர்த்தி பரப்புவான் (Tea light diffuser) ஆகிய இரண்டு வாசனைப் பொருட்களைப் பெரிய அறைகளில் பயன்படுத்தலாம். 10-15 நிமிடங்களில் அறையின் வாசத்தை அடியோடு மாற்றக்கூடிய இந்தச் சிறிய மெழுகுவர்த்திகள்.

இந்த வாசனை எண்ணெய் எரிகருவியும், சிறிய மெழுவர்த்தியும் வரவேற்பறையில் பயன்படுத்துவதற்கு உகந்தவை. ஆனால், இந்த எண்ணெய் எரிகருவியில் இருக்கும் எண்ணெய்யை அடிக்கடி மாற்ற வேண்டி இருக்கும். அறையின் அழகை மெருகேற்றவதற்கும் இந்தச் சிறிய மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தலாம்.

நாணல் எரிகருவி

கண்ணாடிக் குடுவையில் வைக்கப்படும் நாணல் எரிகருவி (Reed Diffuser) இயற்கை எண்ணெய்யை உறிஞ்சிய பிறகு, அதை அறையில் வாசமாகப் பரவும். சிறந்த நாணல் எரிகருவி, ஓர் அறையில் ஒரு மணி நேரம் வெளியிடும் வாசமானது இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும். காற்றோட்டம் இருக்கும் இடத்தில் இதை அமைக்கும்போது இதன் வாசம் கூடுதலாக அறையில் நீடிக்கும். இந்த நாணல் எரிகருவியைப் படுக்கையறையில் பயன்படுத்துவதற்குச் சிறந்தது.

ஊதுவர்த்திகள்

பூஜையறையில் மட்டுமல்லாமல் இப்போது வாசனை ஊதுவர்த்திகளை வீட்டில் வாசனை வீசுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். அதிக வாசனை கொண்ட ஊதுவர்த்திகளை ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர்ப்பது சிறந்தது. ஓர் அறையில் ஒரு மணி நேரம் ஊதுவர்த்தியை ஏற்றுவது நீண்ட நேரம் வாசத்தைத் தக்கவைத்துகொள்ள உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x