Published : 07 Sep 2019 10:57 AM
Last Updated : 07 Sep 2019 10:57 AM
உங்களது தேவைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ற டைல்களை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். பொதுவாக டிஜிட்டல் டைல்களைப் பொறுத்தவரை அவை சுவர்களின் மீது பொருத்தப்படுபவை. டைல்களில் அழகழகான டிசைன்கள் டிஜிட்டல் பிரிண்டிங் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும். குளியலறை, சமையலறை போன்றவற்றின் சுவர்களுக்கு இந்த வகையான டைல்களைப் பதிக்கலாம்.
களிமண், மணல் வேறு சில இயற்கைப் பொருள்கள் ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்படுபவை செராமிக் டைல்கள். இவை வீட்டின் உள்புறத்துக்கும் வெளிப்புறத்துக்கும் ஏற்றவை. அதே போல் சுவரில் பதிக்கவும், தளத்தில் பதிக்கவும் ஏற்ற வகையில் இவை தயாரிக்கப்படுகின்றன. செராமிக் டைல்கள் நீடித்து உழைப்பவை. இவற்றை எளிதில் சுத்தப்படுத்தலாம்.
இவை ஈரப்பதத்தைத் தாங்கவல்லவை. இவற்றில் கறைகள் பெரிதாகப் படிவதில்லை. இப்படிப் பல அனுகூலங்கள் கொண்டவை செராமிக் டைல்கள். ளிமண்ணுடன் சிலிக்கா, குவார்ட்ஸ், ஃபெல்ட்ஸ்பர் என்ற கனிமப் பொருள்கள் கலந்து இவை தயாரிக்கப்படுபவை விர்டிஃபைடு டைல்ஸுக்கும். இவை அனைத்தையும் உலையிலிட்டு சூடுபடுத்தி எடுக்கும்போது பீங்கான் போன்ற பளபளப்பான மேற்புரத்துடன் கூடிய டைல்கள் கிடைக்கின்றன.
இந்த டைல்கள் உறுதிமிக்கவை. மேலும், இவற்றில் நீர் ஒட்டுவதில்லை. கறைகளும் படிவதில்லை. ஆகவே எளிதில் சுத்தப்படுத்திவிடலாம். ஏதேனும் கறை படிந்தால் கூட அப்படியே துடைத்து எடுத்துவிடலாம். மார்பிள்களைவிட, கிரானைட்டுகளைவிட அதிக வலுவுள்ளவை இந்த டைல்கள். வண்ணங்களும் எளிதில் போகாது. டைல்களில் பொருள்கள் உரசும்போது பெரிய அளவில் கீறல்கள் விழ வாய்ப்பில்லை. இவை தளத்துக்கு ஏற்றவை. சுவர்களிலும்கூட இத்தகைய டைல்களைப் பதிக்கலாம்.
இவை தொழிற்சாலைகளில் உருவாக்கப்படுவதால் தேவைக்கேற்ற அளவுகளில் இவை கிடைக்கும். இவற்றை எளிதில் பதித்துவிடலாம். பதித்த டைல்கள் தளத்துடன் ஒருங்கிணைய அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை. சிமெண்ட், மொஸைக், மார்பிள் போன்றவை செட்டாகக் குறைந்தபட்சம் 48 மணி நேரத்திலிருந்து அதிகபட்சம் 76 மணி நேரம் வரை தேவைப்படும். அதன் பின்னர்தான் அதை பாலீஷ் செய்ய முடியும். அந்தத் தொல்லை இவற்றில் இல்லை. உடனடியாக செட்டாகிவிடும். மேலும், இவற்றை பாலீஷ் செய்ய வேண்டியதில்லை. ஏற்கெனவே பாலீஷ் செய்த நிலையிலேயே இவை கிடைக்கும்.
சீனக் களிமண் மூலம் உருவாக்கப்படுபவை போர்செலைன் டைல்கள். இந்த டைல்களின் நீர் உறிஞ்சும் தன்மை மிக மிகக் குறைவு. எனவே, மிகக் குறைந்த வெப்பநிலையின் போது டைல்களின் மேற்பரப்பில் நீர் பரவும் பிரச்சினை இதில் ஏற்படுவதில்லை. இவை வழக்கமான செராமிக் டைல்களைவிட மிகவும் வலுக் கூடியவை. ஆகவே, அதிகமான புழக்கம் இருக்கக்கூடிய தளங்களுக்கு ஏற்ற டைல்கள் இவை.
பலம் பொருந்திய டைல்களுக்கான தேவை இருக்கக்கூடிய இடங்களில் இவற்றைப் பயன்படுத்தலாம். அதிக வலுவுள்ள இந்த டைல்கள் நீடித்து உழைக்கக்கூடியவை. அதிகமான ஜன சந்தடியால் டைல்களின் தேய்மானம் பெரிய அளவில் இருப்பதில்லை, நிறமிழப்பதில்லை. செராமிக் டைல்களின் மேலே ஒரு அடுக்காகக் கண்ணாடித் தூளைத் தூவி பளபளப்புத் தன்மையுடன் உருவாக்கப்படுபவை க்ளாஸ்டு டைல்கள்.
இவற்றைக் கட்டிடத்தின் உள் புறத்திலும் வெளிப்புறத்திலும் பயன்படுத்தலாம். பொதுவாக அலுவலகக் கட்டிடங்களில் இத்தகைய டைல்கள் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டின் பூச்சுகள் முடிந்த பின்னர் தளம் போடப்படும் சமயத்தில் டைல்களின் வேட்டையைத் தொடங்கலாம். எல்லா அறைகளுக்கும் ஒரே விதமான டைல்களை நாம் பதிப்பதில்லை. புழங்கும் அறையைப் பொறுத்து பாவ வேண்டிய டைல்கள் மாறுபடும்.
வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை, பால்கனி, ஃபோர்டிகோ என ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்றபடி தனித்தனியான டைல்களைத் தேர்ந்தெடுப்போம். வரவேற்பறைத் தளத்துக்கான டைல்கள் பார்ப்பதற்கு வசீகரமாக இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் எப்போதும் புழக்கத்திலேயே இருப்பதால் அதற்கேற்ற தரத்துடனான டைல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- முகேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT