Published : 03 Aug 2019 11:47 AM
Last Updated : 03 Aug 2019 11:47 AM
சுகேஷ்
முன்பெல்லாம் வீடு என்றால் காற்றும் வெளிச்சமும் வரக்கூடிய வகையில் இருக்கும்படிதான் கட்டுவார்கள். அந்த வீட்டில் குடியிருப்பவர்களின் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; வீட்டின் ஆரோக்கியத்துக்கும் காற்றும் வெளிச்சமும் அவசியம். அதனால் வீட்டு மனையைச் சிறிய இடைவெளி விட்டுத்தான் கட்டுவார்கள். ஆனால், இன்றைக்கு இருக்கும் இடத்தையெல்லாம் அடைத்து வீடு கட்டிவிடுகிறோம்.
வீட்டுக்குள் சூரிய ஒளியும் காற்றும் வரவில்லை என்றால் வீடு பாதிப்புக்குள்ளாகும். வெயில் காலத்தில்கூடப் பொருளாதாரப் பாதுகாப்பு கருதி ஜன்னல்களைத் திறப்பதில்லை. குளிர்காலத்திலோ கேட்கவே வேண்டாம். சீல் வைத்து அடைத்துவிடுகிறோம். குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் வீட்டை அடைத்தே வைத்திருப்பதால் வீட்டின் உள்ளே சுழலும் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. முறையான வென்டிலேஷன் இல்லை எனில் வீட்டின் ஈரம் உலரவே உலராது. இதனால் கட்டிடம் பாதிக்கப்படும்.
வீட்டின் கூரை மீதும் சுவர்கள் மீதும் நீர் புக அனுமதித்தால், நீர் கட்டிடத்துக்குள் ஊடுருவும், அங்கேயே தங்கிக் கொஞ்சம் கொஞ்சமாகப் கட்டிடத்தைப் பாதிக்கும். வீட்டின் கூரை மீது வீட்டுத் தேவைக்கான நீர்த் தொட்டியை அமைக்கிறோம். இதிலிருந்து நீர் கசிந்தால் அது கட்டிடத்தில்தானே ஊடுருவும். தண்ணீர்த் தொட்டியிலிருந்து வீட்டின் பல அறைகளுக்கும் புழக்கத்துக்காகத் தண்ணீர் குழாய்கள் வழியே செல்லும். இந்தக் குழாய்களில் நீர்க் கசிவு இருந்தால் அது கட்டிடத்தின் சுவர்களில் இறங்கும். சில நேரம் நீர்க் கசிவு சுவரில் வெளிப்படும்; சில நேரம் வெளியே நீர்பரவுவது தெரியாமலேயே சுவர்களின் உள்ளே நீர் தங்கும். இது சுவரை அரிக்கும். சில நேரத்தில் இந்த அரிப்பு, சுவர் கீழே இடிந்துவிடுமளவுக்கு ஆபத்தானதாக மாறிவிடும்.
எனவே, கட்டிடச் சுவர் மீது படரும் ஈரத்தை எப்போதும் உலர்த்துவதில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். சாதாரணமாக வீட்டில் புழங்கும் தண்ணீர் காரணமாகத் தினந்தோறும் 20 லிட்டர் நீர் வீட்டின் உள்ளே நிலவும் தட்பவெப்பத்தில் கலக்கிறது. இந்த நீரானது ஈரப்பதமாகக் காற்றில் கலந்திருக்கும். இதை முறையே வெளியேற்றாவிட்டால் அது ஆபத்தை விளைவிக்கும். குளியலறை, சமையலறை போன்றவற்றில் நாம் பயன்படுத்தும் தண்ணீர் ஒரு பகுதி இந்த அறைகளில் உள்ள காற்றில் கலந்துவிடும்.
எனவே குளியலறை, சமையலறை போன்ற இடங்களில் சரியான ஃபேன்களைப் பயன்படுத்தி இந்தக் காற்றை உலர்த்த வேண்டும் அல்லது வெளியேற்ற வேண்டும். வீட்டின் அஸ்திவாரத்துக்கும் தரைத் தளத்துக்கும் இடையே மண்ணை நிரப்பி வீட்டின் ஈரம் அடித்தளத்திற்குப் பரவாமல் பாதுகாக்க வேண்டும். அதாவது வீட்டின் அஸ்திவாரத்தின் மீது நேரடியாகத் தளத்தைப் பரப்பக் கூடாது. இரண்டுக்கும் இடையே ஈரப்பதத்தை உறிஞ்சும் பொருள்களை நிரப்ப வேண்டும். இதனால் அஸ்திவாரத்தை நேரிடையாக ஈரம் பாதிக்காது. மழை பெய்யும்போது கட்டிடத்தின் மீது விழும் தண்ணீரை மிகக் கவனமாகக் கையாள வேண்டும்.
இந்தத் தண்ணீரை மழை நீர் சேகரிப்புத் தொட்டிக்கு அனுப்பலாம். ஆனால், இந்த மழை நீர் நேரடியாக நிலத்துக்குள் புக அனுமதித்தல் கூடாது. அப்படி நேரடியாக நிலத்துக்குள் சென்றால் அது கட்டிடத்தின் அஸ்திவாரத்துக்குல் புகுந்து அரித்துவிடும். இது கட்டிடத்துக்கு ஆபத்தாக முடியும். ஈரமான இடங்களில் செய்தித்தாள்கள், துணிமணிகள் போன்றவற்றை வைக்கக் கூடாது. இவற்றில் ஈரம் தங்கிக் கட்டிடத்துக்குச் சேதாரத்தை ஏற்படுத்தும். வீட்டின் உள்ளே தண்ணீர்க் குழாய்கள் போன்றவை சேதமடைந்தால் அவற்றை உடனே பழுது பார்த்துவிட வேண்டும்.
நாளை நாளை எனத் தள்ளிப் போட்டால் அதனால் வீட்டுக்குத்தான் சேதம் என்பதைக் கவனத்தில் வைக்க வேண்டும்.
வீட்டுக்கென ஈரமானி ஒன்றை வாங்கி வைத்துக்கொள்வது நலம். வீட்டுக்குள் நிலவும் ஈரப்பதை அறிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். வீட்டுக்குள் ஈரத்துணிகள் போன்றவற்றை உலர்த்துதலைக் கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT