Published : 27 Jul 2019 10:53 AM
Last Updated : 27 Jul 2019 10:53 AM
கனி
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டத்தை (RERA) அரசு அமல்படுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தச் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான அபராத விதிகள், திட்டங்களைச் சரியான நேரத்தில் கட்டுநர்கள் முடித்துக்கொடுக்கும்படி செய்திருக்கின்றன. இந்த ரெரா சட்டம் அமல்படுத்தப்பட்டதால், ரியல் எஸ்டேட் சந்தையில் நம்பகத்தன்மையுள்ள கட்டுநர்கள் மட்டுமே செயல்பட முடியும் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. அத்துடன், வீடு வாங்குபவர்களிடமும் போதுமான விழிப்புணர்வை இந்தச் சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது.
ரெரா-ஒப்புதல் இருக்கும் திட்டங்களை மட்டுமே வாங்க வேண்டும் என்பதில் வீடு வாங்குபவர்களும் உறுதியாக இருக்கிறார்கள். பலர் இந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டாலும், இன்னும் சிலருக்கு ரெரா பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. ரெராவில் பதிவுசெய்யப்படாத சொத்துகளை வாங்குவதை ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள் பரிந்துரைப்பதில்லை.
வீடு வாங்குபவர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் ரெரா உருவாக்கப்பட்டிருக்கிறது. ரெராவில் பதிவுசெய்யப்படாத சொத்துகளை வாங்கினால், தேவைப்படும்போது உங்களால் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை குழுமத்திடம் புகார் அளிக்க முடியாது. அதனால், சொத்துகள் வாங்குவதாக இருந்தால், ரெரா இணையதளத்தில் அந்தச் சொத்து பதிவுசெய்யப்பட்டிருக்கிறதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். உங்கள் சொத்துகள் தொடர்புடைய முக்கியத் தகவல்கள் அனைத்தையும் ரெராவின் தளத்தில் தெரிந்துகொள்ள முடியும்.
இடத்தை அறிந்துகொள்ளுங்கள்
இடத்தை இறுதிசெய்வதுதான் வீடு வாங்குபவர்கள் முதலில் செய்ய வேண்டிய காரியம். இடத்தை இறுதிசெய்தபிறகு, திட்டங்களைத் தேர்வுசெய்து கொள்ளுங்கள். உங்கள் திட்டங்களைத் தேர்வுசெய்ய ரெரா இணையதளம் உதவும்.
நீங்கள் சென்னையில் இடம் வாங்க முடிவு செய்திருக்கிறீர்கள் என்றால், www.tnrera.in இணையதளத்துக்குச் செல்லுங்கள். இந்தத் தளத்தில் ‘பதிவுசெய்யப்பட்ட திட்டங்கள்’ பிரிவை கிளிக் செய்யுங்கள். இதில், 2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் திட்டங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும். நீங்கள் தேர்வுசெய்திருக்கும் திட்டம் எந்த ஆண்டில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கட்டுநரிடம் கேட்டு தெரிந்துகொண்டு, இந்தத் தளத்தின் மூலம் மேலும் முக்கிய விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
அத்துடன், பதிவுசெய்யப்பட்ட திட்டங்கள் மட்டுமல்லாமல் ரெராவால் நிராகரிக்கப்பட்ட திட்டங்களின் தகவல்களையும் ‘பதிவு மறுக்கப்பட்ட திட்டங்கள்’ பிரிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் கட்டுநர் ரெராவிடம் திட்டஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம் என்று சொன்னால், நீங்கள் இணையதளத்தில் பதிவு மறுக்கப்பட்ட திட்டங்களின் பட்டியலில் அந்தத் திட்டம் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்வது அவசியம்.
தேவையான தகவல்கள்
கட்டுநர்கள் அளிக்கும் சிற்றேடுகளை மட்டும் பார்த்து வீட்டை வாங்கிவிட முடியாதல்லவா? அதனால், திட்டத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான தகவல்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ள ரெரா இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் தேர்வுசெய்திருக்கும் திட்டத்தின் பெயரையும், பதிவுசெய்யப்பட்ட எண்ணையும் உங்கள் கட்டுநரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இதைவைத்து நீங்கள் கட்டுநர், திட்டம், பற்றிய முக்கிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
கட்டுநரின் பெயர், முகவரி, வங்கி தகவல்கள், நிறுவனத்தின் பெயர், முகவரி பற்றிய தகவல்களையும் நீங்கள் சரிபார்த்து கொள்ளலாம். அத்துடன், திட்டத்தைப் பற்றிய தகவல்கள், திட்டத்தின் தற்போதைய நிலை, திட்டம் எப்போது முடியும், ‘கார்பெட்’ பகுதி என்பது போன்ற தகவல்களையும் இணையதளத்தின் மூலம் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்தத் தகவல்கள் அனைத்துமே பதிவுசெய்யப்பட்ட திட்டங்கள் என்ற பிரிவில் ஒரு பட்டியலாக இணையதளத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
ரியல் எஸ்டேட் முகவர்கள்
ரெரா சட்டத்தின்படி, ரியல் எஸ்டேட் முகவர்கள் அனைவரும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைக் குழுமத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அதனால், உங்கள் ரியல் எஸ்டேட் முகவர் பதிவுசெய்யப்பட்ட முகவர்தானா என்பதை நீங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் முகவர்களின் பட்டியலில் சரிபார்த்து கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் முகவரின் பதிவுசெய்யப்பட்ட எண், பெயர், முகவரி பற்றிய தகவல்கள் தளத்தில் இடம்பெற வில்லையென்றால், அவரிடம் சொத்துகளை வாங்கு வதைத் தவிர்ப்பது நல்லது.
இதுதான் சரியான வழி
இந்த ரெரா சட்டத்தின் விதிமுறைகளால், ரியல் எஸ்டேட் கட்டுநர்களைப் பொறுப்புள்ளவர்களாக அரசு மாற்றியிருக்கிறது. இந்தச் சட்டம் அமலுக்குவந்தபின், திட்டத்தைச் சரியான நேரத்தில் முடித்துக்கொடுக்காத கட்டுநர்களின் மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதனால், வீடு வாங்குவதற்கு முன்னால், ரெரா இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல்களைத் தெரிந்துகொள்வது அவசியமாகியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT