Published : 20 Jul 2019 11:11 AM
Last Updated : 20 Jul 2019 11:11 AM
ஜி.எஸ்.எஸ்.
நீங்கள் வங்கியிலிருந்து வீட்டுக்கடன் வாங்கத் தீர்மானித்தால் அதை எந்த வங்கியில் வாங்கலாம் என்பது குறித்து யோசிப்பீர்கள். எந்த வங்கியில் மாறாத வட்டி விகிதத்தை (Fixed rate of interest) வசூலிக்கிறார்கள், எங்கே மாறும் வட்டி விகிதத்தை வசூலிக்கிறார்கள் (flexible rate of interest) என்பதையும் கவனித்து எந்த வங்கி குறைவான வட்டியில் வீட்டுக்கடனை அளிக்கிறதோ அந்த வங்கியில் கடன் பெறத் தீர்மானிப்பீர்கள்.
ஆனால், அதே வங்கியில் வீட்டுக்கடன் பெற்ற பிறரோடு பேசிப் பார்க்கும்போது உங்களிடமிருந்து வசூலிக்கும் வட்டி விகிதமும் அவர்களில் ஒரு சிலரிடமிருந்து வசூலிக்கும் வட்டி விகிதமும் வேறுபட்டிருப்பதை உணர்ந்திருக்கக் கூடும். இதென்ன அநியாயம் என்று நீங்கள் நீதிகேட்கப் புறப்படலாம். ஆனால், அதற்கு முன்பாக நீங்கள் சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை பல வங்கிகள் வீட்டுக்கடனுக்கான வட்டியை ஆளாளுக்குத் தகுந்தபடி சிறிது மாற்றியமைத்துக் கொள்கின்றன. அதற்குச் சில காரணங்கள் உண்டு. நீங்கள் எவ்வளவு தொகையை வீட்டுக்கடனாகப் பெறுகிறீர்கள் என்பது அவற்றில் ஒன்று. 50,000 ரூபாய் கடன் வரை இவ்வளவு வட்டி விகிதம், ஒருகோடி ரூபாய் என்றால் அதைவிடச் சற்று அதிகமான வட்டி விகிதம் என்பதுபோல வங்கிகள் மாறுபட்ட வட்டி விகிதத்தை வசூலிக்கலாம். இதன் காரணமாக மிகவும் மாறுபட்ட வீட்டுக்கடன் தொகையை வாங்குபவர்களிடையே மாறுபட்ட வட்டி விகிதமும் காணப்படலாம்.
சில வங்கிகள் மாத ஊதியம் பெறுபவர்களுக்குச் சற்றே குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக்கடனை அளிக்கிறது. காரணம் அவர்களுக்கு நிரந்தர, சீரான வருவாய் உண்டு என்பதால்தான். (எனவே, தடையின்றித் தவணை வந்து சேரும் என்ற நம்பிக்கை). சுயவேலையில் ஈடுபட்டவர்களின் வருமானம் பெரிதும் மாறுபட வாய்ப்பு உண்டு. அதனால் அவர்களிடம் கொஞ்சம் அதிக வட்டி விகிதத்தை வங்கிகள் வசூலிக்கின்றன. உங்கள் கடன் மதிப்பீடை ‘கிரெடிட் ஸ்கோர்’ என்பார்கள். இதை சிபில் என்ற அமைப்பு கணிக்கிறது. இந்த மதிப்பீடு உங்களுக்கு அதிகமாக இருந்தால் நீங்கள் நம்பத் தகுந்தவராக, நாணயமானவராகக் கருதப்பட்டுச் சற்றே குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக்கடனை உங்கள் வங்கி அளிக்க முன்வரலாம்.
பெண் வீடு வாங்கினால் வட்டி விகிதத்தில் 0.5 சதவிகிதம் அளவுக்குப் பல வங்கிகள் குறைத்துக் கொள்கின்றன. எனவே, வீடு ஆணால் வாங்கப்படுகிறதா பெண்ணால் வாங்கப்படுகிறதா என்பதும் வட்டி விகிதத்தைத் தீர்மானிக்கும். குறைவான வட்டி விகிதம் பெற வேண்டுமென்றால் உங்கள் மனைவியுடன் கூட்டாக அந்த வீட்டைப் பதிவுசெய்து கொள்ளுங்கள். முதல் பெயர் உங்கள் மனைவி உடையதாக இருக்கட்டும். அப்போது பெரும்பாலும் வங்கிகள் வழக்கதைதைவிட 0.5 சதவிகிதம் குறைவான வட்டியில் வீட்டுக்கடன் அளிக்க முன்வரும்.
முன்பெல்லாம் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தைத் தாங்களே தீர்மானித்து வந்தார்கள்.
ஆனால் ரெபோ விகிதம், ட்ரஷரி பில் போன்ற சிலவற்றின் அடிப்படையில்தான் வீட்டுக்கடன் வட்டியைத் தீர்மானிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்துவிட்டது. இதன் காரணமாக ஆறு மாதங்களுக்கு முன் ஒரு வங்கி வழங்கிய வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதமும் இப்போது அதே வங்கியிலிருந்து பெறும் வீட்டுக்கடன் விகிதமும் மாறுபடலாம். ஆக மேலே குறிப்பிட்ட பல காரணங்கள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாறுபடக் காரணமாக அமைகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT