Published : 20 Jul 2019 10:55 AM
Last Updated : 20 Jul 2019 10:55 AM

கட்டிடக் கலை காக்கும் அய்யனார்

எல்.ரேணுகா தேவி 

ஆற்று மணலில் வீடு கட்டிவிட்டு, ஆறுகளைப் பாதுகாப்போம் எனக் கோஷமிடுவதில் என்ன பயன் இருக்கிறது, ஆற்று மணலுக்கு மாற்று ஏற்பாடு கண்டுபிடிக்க வேண்டாமா? அப்படியான மாற்று மணலில் வீடு கட்டிவருகிறார் புதுச்சேரி ஆரோவில் பகுதியைச் சேர்ந்த அய்யனார். ஆற்று மணலுக்குப் பதிலாகச் செம்மண், சுண்ணாம்பு, சரளை மண் ஆகியவற்றைக் கொண்டு அய்யனார் வீடு கட்டிவருகிறார். இன்றைக்குப் பெரும்பாலான வீடுகள் ஒரே மாதிரியான கட்டிட முறையைப் பின்பற்றிக் கட்டப்படுகின்றன.

புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் ஆற்று மணல், சிமெண்ட், ஜல்லி, இரும்பு, மார்பிள், கிரானைட் ஆகிய பொருட்களுக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், இவற்றுக்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்திக் கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டுமானத் துறையில் செயல்பட்டு வருகிறார் அய்யனார். இதுவரை 60க்கும் மேற்பட்ட கட்டிடங்களை அவர் வடிவமைத்துக் கட்டியுள்ளார். மண் சுவர் (Rammed earth building), செங்கல் கட்டிடம் (Exposed Brick Building), ரெட் ஆக்ஸைடு தரை (Red oxide Flooring), முட்டை, சுண்ணாம்புச் சுவர் (Egg Lime Plaster Wall), செங்கல் வளைவுக் கூரை (Exposed Brick Arch Roof) உள்ளிட்ட கட்டிட முறைகளில் அவர்  சிறந்து விளங்குகிறார்.  

அனுபவமே ஆசான்

பழமை மாறாத, இயற்கைக்கு உகந்த கட்டிடங்களை வடிவமைப்பதில் வல்லவரான அய்யனார் எட்டாம் வகுப்பு வரை தான் படித்துள்ளார். “குடும்பச் சூழ்நிலை காரணமாக என்னால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. பதினேழு வயதிலேயே கட்டுமானத் துறையில் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். பல தேடல்களுக்குப் பிறகுதான் இந்த வேலை கிடைத்தது. அதனால், கிடைத்த வேலையை விட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கடுமையாக உழைத்தேன். வேலைக்குச் சேர்ந்த ஓராண்டிலேயே தனியாக ஒரு வீட்டைக் கட்டும் அளவுக்குத் தொழிலைக் கற்றுக்கொண்டேன்.

கட்டிட வடிவமைப்பு முறையைக் கற்றுக்கொள்வதற்காகப் பொறியாளர் ஒருவரிடம் ஒன்பது ஆண்டுகள் பணிபுரிந்தேன். நான் பொறியியல் படிக்கவில்லை. ஆனால், இப்போது பொறியியல் மாணவர்கள் பலர் என்னிடம் பயிற்சிபெற வருகிறார்கள்” என்கிறார் அய்யனார். தற்போது அய்யனாரிடம் எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பள்ளி, வீடுகள் எனப் பல கட்டிடங்களை அய்யனார் கட்டியுள்ளார். 

பசுமை வீடுகள்

பசுமை வீடுகளைக் கட்டித்தருவதுதான் அய்யனாரின் முதன்மைக் குறிக்கோள். அதற்காகவே ‘கற்றல் கூடம்’ என்ற பெயரில் இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்திக் கட்டிடங்கள் கட்டுவதற்கான பயிற்சிகளை அவர் அளித்துவருகிறார். “நான் இதுவரை கட்டியுள்ள கட்டிடங்களுக்கு ஆற்று மணலைப் பயன்படுத்தியதே இல்லை. அந்தக் காலத்தில் செம்மண், சுண்ணாம்பு என அந்தந்தப் பகுதியில் கிடைத்த கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தித்தான் கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டன. அந்தக் கட்டிடங்கள்தாம் தற்போதும் நிலைத்து நிற்கின்றன. கல்லணை, பத்மநாபபுரம் அரண்மனை போன்ற கட்டிடங்கள் இப்படிக் கட்டப்பட்டவைதாம். 

எனது கட்டிடங்களுக்கு அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் மண்ணைத்தான் பயன்படுத்துகிறேன். கட்டிடத்தின் பக்கத் தூண்களுக்கு மட்டும் கான்கிரீட் பயன்படுத்துகிறேன்.  இயற்கையான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டிடம் கட்டும் (Rammed earth building) இந்த பாணிக் கட்டிங்களுக்குச் சுண்ணாம்பு, சரளை மண், செம்மண், வைக்கோல் ஆகியவற்றுடன் ஐந்து சதவீதம் சிமெண்ட் பயன்படுத்தி வீட்டைக் கட்டுகிறோம். அதேபோல் மேற்கூரைக்கு ஜல்லி, சிமெண்ட் ஆகியவற்றை அதிக அளவு பயன்படுத்துவதற்குப் பதிலாக சரளை மண், செம்மண், செங்கல் போன்றவற்றைப் பயன்படுத்தி அமைத்துத் தருகிறோம்.

செங்கல் கட்டிடங்களுக்கும் இதே முறையை பின்பற்றுகிறோம்.  சிமெண்ட் பயன்படுத்தினால்தான் கட்டிடம் உறுதியாக இருக்கும் என வாடிக்கையாளர்கள் நம்புவதால், செங்கற்களை இணைக்க சிமெண்ட் பயன்படுத்துகிறோம். பல்வேறு வண்ணங்களில் ரெட் ஆக்ஸைடு தரைகளை அமைத்துத் தருகிறோம். இதனால் எல்லாப் பருவங்களிலும் வீட்டின் உட்புறம்  குளிர்ச்சியாக இருக்கும். ஏசி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை” என்கிறார் அய்யனார். 

குறைந்த கட்டணம் 

எந்த ஆடம்பரமும் இல்லாமல் இயற்கையோடு இணைந்து வாழ விரும்புகிறவர்களே, இதுபோன்ற புதுமைக் கட்டிட வடிவமைப்பை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இந்தப் பாணிக் கட்டிடங்கள் தலைமுறைகளைக் கடந்து நிற்கும் உறுதிகொண்டவை. இந்தக் கட்டிடங்களை இடித்தாலும் அவற்றிலிருந்து கிடைக்கும் மண்ணை மீண்டும் பசுமைக் கட்டிடங்களுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால், கான்கிரீட் கட்டிடங்களை இடித்தால் அவை பெரும்பாலும் உயிர்த்தன்மை அற்றவையாகத்தாம் இருக்கும். வடிவமைக்கும் கட்டிடங்களுக்கு பிளம்பிங், எலெக்ட்ரிகல் என அனைத்து வேலைகளையும்  இவருடைய நிறுவனமே செய்துகொடுத்துவிடுகிறது.

பசுமைக் கட்டிடங்களுக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.2000க்கும் குறைவான கட்டணத்தை இவர் நிர்ணயித்திருக்கிறார். “இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் வீடுதான் இளைப்பாறுவதற்கான இடமாக உள்ளது. அது இயற்கை சூழ்ந்த கட்டிடமாக இருந்தால் வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கும். முன்பைவிட இப்போது பசுமைக் கட்டிடங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வரும்காலத்தில் கான்கிரீட் வீடுகளிலிருந்து மக்கள் விடுபட்டு, பசுமை வீடுகளை நோக்கி வருவார்கள்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அய்யனார்.

தொடர்புக்கு: auroshivas@gmail.com
9943465426 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x