Published : 20 Jul 2019 10:31 AM
Last Updated : 20 Jul 2019 10:31 AM
முகேஷ்
கடும் கோடைக்குப் பிறகு சந்தோஷம் தரும் மழைக் காலம் தொடங்கியிருக்கிறது. சாலைகளில் மழை வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு வகையில் இது ஆசுவாசத்தைத் தரக்கூடிய விஷயம். அதுபோல் மழை இன்னும் சில நன்மைகளையும் நமக்குத் தருகிறது. அரசு ஒப்பந்ததாரர்கள் இடும் சாலைகள் எவ்வளவு உறுதியானவை என்பதைப் பருவ மழைதான் பரிசோதித்துச் சொல்லும்.
சமரசம் அற்ற அதன் ஆய்வில் பல சாலைகள் தோற்றுப் பெயர்ந்து போய்விடும். அதுபோல் நம் வீட்டுக் கட்டுமானத்தையும் மழை ஆய்வுசெய்யும். நம் கண்ணுக்குத் தெரியாத விரிசல்களை நமக்குக் காட்டிக் கொடுக்கும். இக்காலத்தில் நமது உடைமைப் பொருள்களின் பராமரிப்பில் நம் கவனம் திரும்பும். ஆகையால், மழைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பு முக்கியமாக நம் வீட்டு வடிகால் பகுதியில் குப்பை அடைத்திருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதை அப்புறப்படுத்திச் சுத்தமாக்க வேண்டும். மழைநீர்ச் சேகரிப்புத் தொட்டியிலும் அடைப்பு இருந்தால் அதைச் சரிசெய்து கொள்ள வேண்டும். வீட்டின் முற்றத்திலும் மழைநீர் செல்வதற்கான வழிமுறை உள்ளதா எனச் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் முற்றத்தில் நீர் தேங்கினால் பலவிதமான கிருமிகள் உற்பத்தியாகி நோய் பரப்பக்கூடும். அதனால் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
மழைக் காலம் வருவதற்கு முன்பே நாம் சில பராமரிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டிய அவசியம். வீட்டின் மாடிப் பகுதியில் மழைநீர் வெளியேறுவதற்கான துளைகளைச் சரிபார்க்க வேண்டும். அதன் வாய்ப் பகுதியில் ஏதாவது அடைப்பு இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அது வெளியேறும் வடிகால் குழாய்களில் அடைப்பு இருக்கிறதா எனத் தண்ணீர் விட்டுப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. மாடித் தரைத்தளம் வழி வீட்டுக்குள் நீர் இறங்கவும் வாய்ப்புள்ளது. கூரையின் மேற்பரப்பில் பூசுவதற்கென நீர்புகா பெயிண்ட் இப்போது சந்தையில் கிடைக்கிறது. அதைப் பூசினால் நீர் இறங்குவது தவிர்க்கப்படும்.
கோடைக்காலத்தில் பெரும்பாலும் ஜன்னல்களைத் திறந்தே வைத்திருப்போம். அதனால் அவற்றை மூடித் திறந்து பார்த்துக்கொள்ள வேண்டும். கதவுகளையும் பூட்டித் திறந்து பார்த்துக் கொள்ள வேண்டும். கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றில் பழுது இருந்தால் சரிசெய்துகொள்ள வேண்டும். வீட்டுக்குள் சுவர்களில் ஏதாவது நீர்க் கசிவு இருக்கிறதா எனச் சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி ஏதாவது இருந்தால் மழை தொடங்குவதற்கு முன்பே பொறியாளரை அழைத்து அதைச் சரிசெய்துகொள்ள வேண்டும்.
பொதுவாக, மழைக் காலங்களில் நம் வீட்டில் உள்ள மரப் பொருள் களில் பூச்சிகள், செல்லரிப்பு ஆகியவை ஏற்படக்கூடும். அதனால் மரப் பொருள்களைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும். இம்மதிரியான பாதிப்பு களைக் கிராம்பு அல்லது கற்பூர வில்லைகள் கொண்டு நீக்கலாம். பயன்படுத்தாத மரப் பொருள்களை பிளாஸ்டிக் உறை கொண்டு மூடினால் இதுபோன்ற பாதிப்புகள் வராமல் இருக்கும்.
மழைக் காலங்களில் மரச் சாமான்களைச் சுத்தம் செய்வது அவசியம். மேஜை, நாற்காலிகள் போன்ற மரப் பொருள்களுக்கு உறை இடுவது அவசியம். மழைக் காலத்தில் துணிவைக்கும் அலமாரிகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். ஈரப்பதத்துடன் இருந்தால் துணிகளில் பூஞ்சைகள் படிய வாய்ப்பிருக்கிறது. மழைக் காலத்தில் துணிகளை உலர்த்துவது சிரமமான காரியம்.
சரியாக உலராத துணிகளை அலமாரிகள் உள்ளே மடித்துவைப்பதால் துர்நாற்றம் வரும். இதைத் தவிர்க்க ரசக் கற்பூரங்களைப் போட்டு வைக்கலாம். துணிகளை வெளியில் காய வைக்க முடியவில்லை என்றால் முடிந்த அளவு மின்விசிறியிலாவது உலர வையுங்கள்.மழைக் காலங்களில் மின்சாதனப் பொருள்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். சுவிட்ச் போர்டுகளைத் தொடும்போது கவனமாக இருக்க வேண்டும். வீட்டு மின்சாதனங்களையும் கவனமாகக் கையாள வேண்டும். தண்ணீர் இறங்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT