Last Updated : 11 Apr, 2015 12:33 PM

 

Published : 11 Apr 2015 12:33 PM
Last Updated : 11 Apr 2015 12:33 PM

கைபேசிக்குக் கட்டுப்படும் வீடு

வீடுகளின் உருவாக்கம் காலம்தோறும் பல மாறுதல்களைச் சந்தித்துவருகிறது. நவீனத் தொழில்நுட்பம் வளர வளர அதன் சாதகமான அம்சங்களை, வீடுகளின் உருவாக்கத்தில் பயன்படுத்த கட்டுமான நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமானது. ஆட்டோமேஷன் எனும் தொழில்நுட்பம் பெரிய அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் பயன்பட்டு வருகிறது.

இந்தத் தொழில்நுட்பத்தின் உதவியால் அனைத்துக் கருவிகளையும் உபகரணங்களையும் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் இயலும் என்கிறார்கள் நிபுணர்கள். இந்த ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை தாங்கள் உருவாக்கும் புது வீட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தி நுகர்வோரைக் கட்டுமான நிறுவனங்கள் கவர்ந்திழுக்க விரும்புகின்றன. இத்தகைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட வீடுகள் ஸ்மார்ட்டானவை என்பதால் அவை ஸ்மார்ட் ஹோம்கள். ஸ்வீட் ஹோம் என்பது ஸ்மார்ட்டாக மாறுவது இனிப்பான செய்திதானே.

அப்படியென்ன வழக்கமான வீடுகளில் இல்லாத சிறப்பான அம்சங்கள் இந்த ஸ்மார்ட் வீடுகளில் உள்ளன என்று தோன்றுகிறதா. பல சமயங்களில் வீட்டைப் பூட்டினோமா இல்லையா? வீட்டில் ஏசியை நிறுத்தினோமா இல்லையா எனும் சந்தேகம் அலுவலம் செல்லும் வழியில் ஏற்படும். அந்த நாள் முழுவதும் மனதில் ஒரு மூலையில் இந்த எண்ணம் அரித்துக்கொண்டேயிருக்கும்.

மாலையில் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தால் எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கும். ஆனால் அந்த நாள் முழுவதையும் நாம் பதற்றத்துடனேயே கழித்திருப்போம். இது சாதாரணமாக வீடுகளில் நமக்கு ஏற்படும் அனுபவமே. இதுவே ஸ்மார்ட் ஹோமாக இருந்தால் இந்தச் சிக்கலே இல்லை. ஏனெனில் உங்கள் வீட்டை நீங்கள் உங்கள் மொபைலிலிருந்தே கட்டுப்படுத்த முடியும். வீட்டில் உள்ள மின்சார, மின்னணுச் சாதனங்களை ஸ்மார்ட் ஃபோனின் உதவியுடன் கட்டுப்படுத்திவிடலாம்.

அலுவல் காரணமாக வீட்டுக்கு வெளியே நாம் இருக்கும்போது வீடு தொடர்பாக நமக்கு ஏற்படும் பெரும்பாலான கவலையிலிருந்து நம்மை விடுவிக்கிறது இந்தத் தொழில்நுட்பம் என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள். இதைப் போன்ற ஸ்மார்ட் ஹோம்கள் கொண்ட அடுக்குமாடி வீடுகள் பெங்களூரு, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் உருவாக்கப்பட்டுவருகின்றன.

நாம் இல்லாத நேரத்தில் நமது வீட்டுக்கு நெடு நாளைய நண்பர் ஒருவர் நம்மை ஆச்சரியப்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் வந்துவிட்டால் நாம் எங்கிருந்தாலும் உடனே வீட்டுக்குப் போக வேண்டிய நிலைமை இந்த ஸ்மார்ட் ஹோமில் இல்லவே இல்லை. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயிருந்தபடியே உங்கள் நண்பரை உங்கள் வீட்டுக்குள் அனுப்பிவிடலாம்.

அது எப்படி முடியும்? வீடு பூட்டியிருக்குமே என நினைக்கிறீர்களா? அது பற்றிய கவலையே வேண்டாம். வீட்டின் கதவைப் பூட்டவும், திறக்கவுமான வசதிகள் உள்ளன. யார் வந்திருக்கிறாரே அந்த நண்பரைக் கண்காணிப்பு கேமரா வழியாக நாம் பார்த்துவிட்டு அவரை வீட்டுக்குள் அனுமதித்துவிடலாம்.

இது மட்டுமல்ல கோடை காலத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரத்தில் வீட்டின் ஏசியை இயக்கிவிட்டு வீட்டுக்குச் செல்லலாம். வீட்டுக்குள் நுழையும்போதே நமது அறை குளுகுளுவென நம்மை வரவேற்கும். இந்த வசதிகளை எல்லாம் கேட்கும்போது இது ஏதோ தேவலோகத்தில் நடக்கும் கற்பனை என நினைக்கத் தோன்றுகிறதா?

ஆனால் இவை எல்லாமே நிஜத்தில் சாத்தியமாகிவருகிறது எனக் கட்டுமான நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையினர் இது போன்ற வீடுகளை அதிகம் விரும்புவதால் அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இத்தகைய வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் ஹோம்களுக்கான தேவை அதிக அளவில் உள்ளது.

வசதிகள் எல்லாம் சரிதான். ஏற்கெனவே வீடு வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது. இப்படியான வசதிகள் அதிகச் செலவை இழுத்துவைத்துவிடுமோ என்ற பயம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் ஒரு அடுக்குமாடி வீட்டின் மொத்த விலையில் 3-4 சதவீதம் வரை இதற்குச் செலவாகும் எனக் கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன.

ஆனால் இதில் உள்ள ஒரே தொல்லை இணையத் தொடர்பின்மைதான். 24 மணி நேரமும் இணைய வசதி இருக்க வேண்டும். வலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டால் வீட்டுக்கும் நமது ஸ்மார்ட் ஃபோனுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x