Last Updated : 11 Apr, 2015 12:20 PM

 

Published : 11 Apr 2015 12:20 PM
Last Updated : 11 Apr 2015 12:20 PM

வீடுகளால் வெப்பமடையும் பூமி

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பசுமைக்குடில் வாயுக்களை தொழிற்சாலைகளைவிட வீடுகள்தான் அதிகம் வெளியிடுகின்றன என்கிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் பெங்களூரூ சுற்றுச்சூழல் அறிவியல் அமையத்தின் அறிக்கை. இந்தியாவின் ஏழு நகரங்களில் வெளிவரும் பசுமைக்குடில் வாயு மிக அதிகமான அளவில் உள்ளதாக மேலும் அந்த அறிக்கை சொல்கிறது.

பசுமைக்குடில் வாயு என்றால் என்ன?

கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓஸோன், நீர் வாயு போன்றவற்றைத்தான் பசுமைக்குடில் வாயுக்கள் என்கிறார்கள். இதன் அளவு அதிகமாக அதிகமாகப் பூமி வெப்பமடையத் தொடங்குகிறது. காலநிலை மாறுதல்கள் ஏற்பட்டு, பூமியின் ஆயுள் குறைந்துபோகும். அச்சுறுத்தும் இந்த வாயுக்களைக் குறைக்க உலக நாடுகள் ஜப்பான் நாட்டில் க்யோட்டோ நகர ஒப்பந்தத்தில் உறுதிபூண்டுள்ளன. ஆனால் நாளுக்கு நாள் பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிக்கொண்டதான் வருகிறது.

பொதுவாகத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நாடுகளின் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியிடும் விகிதம் மிக அதிகமாக உள்ளது. உதாரணமாக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளில் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறும் விகிதம் அங்குள்ள தொழிற்சாலைகளால் மிக அதிக அளவில் உள்ளது. இதில் சங்கடத்துக்குரிய ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் பசுமைக்குடில் வெளியேறும் விகிதம் 5 சதவீதம்.

வீடுகளின் பசுமைக்குடில் வாயுக்கள்

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்துள்ள இந்த அறிக்கை இந்தியப் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றத்துக்குக் காரணம் தொழிற்சாலைகள் மட்டுமல்ல; வீடுகளும்தான் எனச் சொல்கிறது. இந்திய பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றும் விகிதத்தில் வீடுகளின் பங்குதான் மிக அதிகமாக இருப்பதை அறிக்கை நிரூபித்துள்ளது. இருப்பதிலேயே மிக அதிகமாகத் தலைநகர் டெல்லியில்தான் வீடுகளின் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றம் இருப்பதாக அந்த அறிக்கை சொல்கிறது.

டெல்லியில் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறும் விகிதம் 26.4 சதவீதம். அதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் சென்னை இருக்கிறது. இந்தியாவின் வர்த்தகத் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாகத்தான் இருக்கிறது என்பது கவலைக்குரிய விஷயம்.

சென்னையின் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறும் விகிதம் 19.5 சதவீதம். மும்பையின் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறும் விகிதம் 19.1 சதவீதம். அகமதாபாத், கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்கள் இவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பசுமைக்குடில் வாயுக்களை வெளியிடும் நகரங்கள் ஆகும்.

வீட்டின் பயன்படு பொருள்களுக்கான மின்சாரம், சமையல் எரிவாயு ஆகியவற்றின் பயன்பாடு காரணமாகத்தான் அதிக அளவில் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறுவதாகச் சொல்லப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

பசுமைக்குடில் வாயுக்கள் அதிக அளவில் வெளியேறுவதால் பூமி வெப்பமடைந்து அண்டார்டிகா போன்ற பனிப் பிரதேசங்களில் பனி உருகி கடல் மட்டம் உயரக்கூடும். மேலும் கால நிலைகளும் மாறக்கூடும். பூமியின் ஆயுளைக் குறைக்கக் கூடியது இந்தப் பசுமைக்குடில் வாயுக்கள். ஒரு சிறிய குண்டு பல்புதானே என அஜாக்கிரதையாக விட்டுவிடக் கூடாது.

அந்தச் சிறிய குண்டு பல்பிலிருந்து வெளிப்படும் வெப்பம்கூட பூமியின் ஆயுளைக் குறைக்கக்கூடிய ஒரு துளிதான். தேவையில்லாமல் சமையல் வாயுவைச் சிறிதளவுகூட உபயோகிக்கக் கூடாது. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் நம் தேவைக்கு அதிகமாக உபயோகிக்கக் கூடாது. இது பூமிக்கு மட்டுமல்ல. நம் பொருளாதாரத்துக்கும் நல்லதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x