Published : 04 Apr 2015 12:09 PM
Last Updated : 04 Apr 2015 12:09 PM
ஆசை ஆசையாக வீடு ஒன்றைக் கட்டுகிறீர்கள். வீட்டுக் கிரஹபிரவேஷமும் ஜோராக நடக்கிறது. விழாவுக்கு வருபவர்கள், வாசல்படியைக் கிழக்குப் பார்த்து வைத்திருக்கலாமே, ஜன்னலைத் தெருவோரமாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே, பால்கனியை முன்பக்கமாக வைத்திருக்கலாமே என்று சொன்னால் என்ன பதில் சொல்வீர்கள்?
பெரும்பாலும், சொல்வதைக் கேட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிடுவீர்கள். இன்னும் சிலரோ, “கட்டி முடிச்சாச்சி. இனி இதப்பத்தி பேசி என்ன பிரயோஜனம்” என்று ஒரே பேச்சில் அடுத்த கேள்விகளுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடுவீர்கள். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லூக் எவரிங்காம், தன் நண்பர்களிடம் இப்படியெல்லாம் கேள்வி கேட்க வைக்கவே இல்லை.
வீட்டைக் கட்டிய பிறகு புலம்புவதைவிட, இஷ்டத்துக்கு வீட்டைத் திருப்பிக்கொள்ளக்கூடிய வகையில் கட்டினால் என்ன என்று எவரிங்காமிற்குத் தோன்றியது. யோசனையோடு நின்று விடாமல் அப்படி ஒரு வித்தியாசமான வீட்டைக் கட்டிச் சாதித்தும் காட்டிவிட்டார். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
இந்தச் சுழலும் வீட்டுக்குள்ளும் இப்படிப் பல ஆச்சரியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. வடிவமைப்பிலும், தோற்றத்திலும் புதுமையான அம்சங்களைக் கொண்டது இந்த வீடு. இந்த வித்தியாசமான சுழலும் வீடு எப்படி உருவாக்கப்பட்டது?
ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் விங்காம் என்ற சிறு நகரம் இருக்கிறது. இந்த நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தச் சுழலும் வீடு, மலைகளுக்கு நடுவே இயற்கையான சூழலில் அமைந்திருக்கிறது. கடந்த 2006-ம் ஆண்டு எவரிங்காம் தன்னுடைய பாழடைந்த பண்ணை வீட்டைப் புதுப்பிக்க நினைத்தார்.
ஆனால், அதற்கு அதிகம் செலவு ஆகும் என்பதால், புதிய வீட்டைக் கட்ட முடிவெடுத்தார். குறைந்த செலவும் ஆக வேண்டும்; யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு வீடு வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் உறுதிபூண்டார்.
அப்படி உருவானதுதான் இந்தச் சுழலக்கக்கூடிய வீடு. தொடக்கத்தில் இந்த வீட்டை அமைக்க நினைத்தபோது செலவு அதிகமாகிவிடும் என்று எவரிங்காம் நினைத்தார். மேலும் வீட்டின் எடை சவாலாக இருக்கும் எனவும் அச்சப்பட்டார். கடைசியில் இந்த இரண்டுமே அவருக்கு எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை. வட்ட வடிவம் காரணமாக அறைகளைத் தேவைக்கேற்ப வடிவமைத்துக்கொள்ளலாம் என்று தெரிந்ததும் வீட்டை வடிவமைப்பதில் ஆர்வத்துடன் களம் இறங்கிவிட்டார்.
வீட்டைப் பார்த்துப் பார்த்து எவரிங்காம் கட்டியிருக்கிறார். வீட்டின் கீழ்ப்பகுதி வட்ட வடிவிலும், மேற்கூரை அறுகோண வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. செங்கல், சிமெண்ட் போன்ற கட்டுமானப் பொருட்களைக் கொண்டு இந்த வீடு எழுப்பப்படவில்லை. பெரும்பாலும் கண்ணாடி மற்றும் இரும்புகளைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.
வீடு சுற்றுவதற்கு வசதியாக நிலத்தில் பள்ளம் தோண்டி, வட்ட வடிவத் தண்டவாளம் போன்ற அமைப்பு அதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் மேல் வீட்டைத் தூக்கி வைத்ததுபோல இந்த வீடு உள்ளது. ஆனால், பார்ப்பதற்கு வீடு தரையோடு சேர்ந்து இருப்பது போலவே காட்சியளிக்கிறது. வீடு சுழல்வதற்காக இரண்டு மோட்டார்கள் உள்ளன.
விரிவாகத் திட்டமிட்டு இரண்டே ஆண்டில் இந்தச் சுழலும் வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார் எவரிங்காம். வீட்டைக் கட்டி இப்போது ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அந்த வீடு கம்பீரமாகச் சுழன்றுகொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT