Published : 14 Mar 2015 12:50 PM
Last Updated : 14 Mar 2015 12:50 PM
வீட்டு உபயோகப் பொருள்களில் இன்றியமையாத ஒன்று நாற்காலி. அத்தகைய நாற்காலி சாய்ந்து சவுகரியமாக உட்காருவதற்காக உருவாக்கப்பட்டதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதிகாரத்தை அடையாளப்படுத்தும் பொருளாக மட்டுமே இருந்துவந்தது நாற்காலி. அதனால்தான் அரசு பதவியைக் குறிக்கும் சொல்லாகச் சீட் (seat) எனும் ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்படுகிறது. அந்த நாற்காலிதான் இன்று சாமானியனின் சராசரியான இருக்கையாக மாறியுள்ளது.
16-ம் நூற்றாண்டுவரை ஒரு சிலர் வீடுகளில் முக்காலி, மர மேஜை, ஸ்டூல் போன்ற சாமான்கள் புழக்கத்துக்கு வந்தன. ஆனால் நாற்காலி நெடுங்காலம் கழித்துத்தான் வருகை தந்தது. அதிலும் மத்தியதர மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த தமிழக மக்களுக்கு நாற்காலி என்பது ஒரு காணக் கிடைக்காத அரிய பொருளாகவே 1969 வரை இருந்திருப்பதை கி. ராஜநாராயணன் எழுதிய ‘நாற்காலி’ கதை பதிவுசெய்துள்ளது.
சித்திரங்களில் அமர்ந்திருக்கும் நாற்காலிகள்
உலகின் முதல் நாற்காலி எப்படி இருந்திருக்கும் என்பதைச் சிற்பங்கள், நினைவு சின்னங்கள், மற்றும் ஓவியங்களின் வாயிலாகத்தான் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. அதே சமயம் பண்டைய நாற்காலிகளில் சிலவற்றைப் பிரிட்டன் அருங்காட்சியகமும், எகிப்தில் கெய்ரோ நகரில் உள்ள அருங்காட்சியகமும் பாதுகாத்து வருகிறது. கிரேக்க பகுதியில் பயன்படுத்தப்பட்ட முதல் நாற்காலியின் காலகட்டம் அனேகமாகக் கி.மு. 6-ம் அல்லது 7-ம் நூற்றாண்டாக இருக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கிரேக்க புராணக் கடவுளான ஜீயஸ் சதுரமான இருக்கை, ஸ்திரமான கால்கள் மற்றும் தடுப்பு கம்பி பின்பகுதியில் பொருத்தப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருப்பது போலக் கல் சிற்பம் உள்ளது. யானை தந்தம், கருங்காலி மரம் போன்றவற்றை நேர்த்தியாக இழைத்து, நுணுக்கமாகச் செதுக்கி நாற்காலி செய்தார்கள் பழங்கால எகிப்தில் வாழ்ந்த செல்வந்தர்கள்.
இந்தியாவிலிருந்து சென்ற நாற்காலி
ஆசிய கண்டத்தில் பண்டைய நாற்காலியின் சுவடுகளைத் தேடினால், 6-ம் நூற்றாண்டின் புத்த மதச் சுவர் ஓவியங்களில் நாற்காலி சித்திரங்களைக் காண முடிகிறது. இருப்பினும் 12-ம் நூற்றாண்டுவரை சீனாவில் நாற்காலிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இதில் சுவாரசியமான தகவல் எதுவெனில், இந்தியாவில் வாழ்ந்த புத்த துறவிகளின் மூலமாகத்தான் சீனாவிற்கு நாற்காலி கலாசாரம் பரவியது எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தக் காலகட்டம்வரை நாற்காலி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை.
அசத்திய இந்தியத் தச்சர்கள்
ஐரோப்பிய மறுமலர்ச்சி காலகட்டத்தில்தான் அரசு மற்றும் மதப் பீடத்தின் அரியணையாக இருந்த ஒரு பொருள் சந்தை பொருளாக மாறியது. விதவிதமான வடிவங்களில், அளவுகளில், கனத்தில் நாற்காலிகள் உற்பத்தி செய்யப்பட்டன. குறிப்பாக 16-ம் நூற்றாண்டுக்குப்பின் சிறிய அளவிலான நாற்காலிகள் புழக்கத்துக்கு வந்தன. இந்தியாவைப் பொறுத்தவரை போர்ச்சுகல், டச்சு மற்றும் ஆங்கிலேயரின் வருகைக்கு முன்புவரை தரையில் பாய், ஜமுக்காளம் போன்றவற்றை விரித்து உட்காரும் பழக்கம்தான் சாதாரண மக்களிடம் இருந்தது.
இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள் சவுகரியமாக அமர்ந்து கொள்ள முதன்முதலில் மேற்கத்திய பாணியில் தயாரிக்கப்பட்ட மேஜை, நாற்காலிகளை இறக்குமதி செய்தனர். அதே போன்று நாற்காலிகள் செய்யும்படி இந்திய தச்சர்களைப் பணித்தனர். அப்போதுதான் இந்திய தச்சர்களின் அபாரத் திறமை ஐரோப்பியர்களுக்குத் தெரியவந்தது. இந்திய கலை நுணுக்கங்களை ஐரோப்பிய பாணியோடு பிணைத்து அற்புதமான மரச் சாமான்களை உருவாக்கினார்கள். இந்திய-போர்ச்சுகல் கலைநயம் 18-ம் நூற்றாண்டில் உச்சத்தை எட்டியது.
ஞெகிழி காலம்
தேக்கு, கருங்காலி மரம், வேப்ப மரம், பூவரச மரம், போன்ற மரங்கள் கொண்டு நாற்காலிகள் தமிழகப் பகுதிகளில் செய்யப்பட்டன. வீட்டுக்கொரு நாற்காலி இருந்தாலே எல்லோரும் அதிசயித்துப் பார்க்கும் காலம் அது. 1942 சுப்ரீம் நிறுவனம் லேசான எடையில், விலை குறைவான ஞெகிழி நாற்காலியை அறிமுகப்படுத்தினார்கள். அதன் பின் இந்திய நாற்காலியின் வரலாறு மாறியது.
அதுவரை பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்ட பொருள் லேசான, சல்லிசான பொருளாக மாறியது. 21-ம் நூற்றாண்டில் விதவிதமான நாற்காலிகள் வந்துவிட்டன. மடக்கு நாற்காலி, சக்கர நாற்காலி, சாய்வு நாற்காலி, நரம்பு நாற்காலி, தோலாலான சொகுசு நாற்காலி, சுருக்குப்பைபோல மடக்கி மடித்து எடுத்துச் செல்லக்கூடிய பயண நாற்காலி, அவ்வளவு ஏன் குப்பைக் காகிதங்கள் மறுசுழற்சி செய்யப்பட்டுத் தயாரிக்கப்பட்ட நாற்காலி, செயற்கை மர இருக்கைகூட வந்தாகிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT