Last Updated : 21 Mar, 2015 12:56 PM

 

Published : 21 Mar 2015 12:56 PM
Last Updated : 21 Mar 2015 12:56 PM

வீட்டை அழகாக்கும் ரகசியம்

பார்க்கும் அத்தனைபேரும் அதிசயிக்கும் விதத்தில் நம் வீடு மிளிர வேண்டும் எனும் ஆவல் உள்ளூர இருக்கும். விலை உயர்ந்த வீட்டு அலங்காரப் பொருள்களை வாங்கி வீட்டில் அடுக்கி வைத்துவிட்டால் அந்தக் கனவு நனவாகி விடுமா என்ன.

எந்தப் பொருளை வாங்குகிறோம் என்பதை விடவும் அதை எப்படி அசத்தலாகப் பயன்படுத்தப் போகிறோம் என்பதில்தான் அழகின் ரகசியம் உள்ளது. அத்தகைய ரகசியங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்கள் உலகப் புகழ் பெற்ற உட்புற வடிவமைப்பாளர்கள்.

“உங்கள் வீட்டின் மிகச் சிறிய அறை பெரிய அறை போலத் தோற்றமளிக்க, அந்த அறையின் ஒரு பகுதியை கருமையாக மாற்றுங்கள். நான் சொல்வதை நம்புங்கள். என் வீட்டில் ஒரு குட்டி அறை உள்ளது. அதில் மிகச் சிறிய சன்னல் ஒன்று இருந்தது. அந்தச் சன்னலுக்குச் சாக்லேட் பழுப்பு நிறத்தில் பெயிண்ட் அடித்தேன். உடனே அந்த அறை கவர்ச்சியாகக் காட்சியளிக்கத் தொடங்கியது” - சூசன் பிரேயர்

“அறையின் உட்கூரை தாழ்வாக இருக்கும் பட்சத்தில் அதே அறையை உயரமாகக் காட்ட ஒரு எளிய வழி உள்ளது. தரையைப் பிரதிபலிக்கும் விதத்தில் பளபளப்பான பெயிண்டை உட்கூரையில் பூச வேண்டும். பிறகு பாருங்கள், உங்கள் வீட்டுக் கூரை படு உயரத்தில் இருப்பது போலத் தோன்றும்.” பாரி டிக்சன்

“வரவேற்பறை சுவரில் வரிசையாகப் புகைப்படங்களோ அல்லது ஓவியங்களோ பொருத்துவதாக இருந்தால் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் இடையில் 2 முதல் 2 1/2 அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும். அதே போலச் சுவரை ஒட்டி இருக்கும் சோஃபா மற்றும் நாற்காலியைக் காட்டிலும் குறைந்தது 9 அங்குலம் உயரத்தில் படங்களைச் சுவற்றில் மாட்ட வேண்டும்.” மில்லி டி கேப்ரோல்.

“என் வீட்டு சோஃபா 6 ½ அடி முதல் 7 அடி நீளம்தான் இருக்கும். அதை விடவும் சிறியதாக இருந்தால் சோபா பொம்மைப் போலக் காட்சியளிக்கும். அதைவிடவும் பெரிதாக இருக்குமாயின் விமான நிலையத்தில் உள்ள லவுஞ்ச் போலத் தோன்றும்.” ஆலெக்ஸ்

“ஒப்பனை செய்து முடிக்கும்போது உதட்டுச் சாயம் பூசுவதுக்கு ஒப்பானவை தொங்கும் திரைகள். அவற்றால் ஒரு அறையை முழுமைபெறச் செய்ய முடியும்.” - பீட்டர் டங்கம்

“விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளுக்குச் செலவழிப்பதைவிடவும் லேம்ப்ஷேட் (lampshade) எனப்படும் விளக்குத் திரைகளுக்குச் செலவு செய்யுங்கள். பழைய சேலைத் துணி முதல் வண்ணக் காகிதங்கள் வரை எதைக் கொண்டும் விளக்குத் திரைகள் செய்யலாம்” ஜெஃப்பரி பில்ஹியூபர்

“நீள் சதுர வடிவில் இருக்கும் அறைக்கு வட்டமான உணவு மேஜை பொருந்தாது. அதற்குத் தலைகீழாகவும் பயன்படுத்தாதீர்கள். உங்கள் அறையின் வடிவம் எதுவோ அதுதான் மேஜையின் வடிவமாகவும் இருக்க வேண்டும்” கெல்லர் டோனோவன்.

“உணவு மேஜைக்குரிய நாற்காலிகள் சாய்வாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாய்ந்து சவுகரியமாக உட்காரும் வசதி கொண்ட நாற்காலிகளில் சரியான உடல் தோரணையில் உட்காராமல் சரிந்து உட்கார்ந்து உண்போம். அது தவறு.” ராபர் கோர்டியர்

வீட்டின் கூரை முதல் உணவு மேஜைவரை தங்களின் அறிவையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டிருக்கும் இந்த வடிவமைப்பாளர்களின் சிறுவிவரக்குறிப்புகளை பின்பற்றிப் பாருங்கள் உங்கள் வீட்டுக்கும் நிச்சயம் புதுப் பொலிவு கிடைக்கும்.

இந்தப் பகுதியில் நீங்களும் பங்களிக்கலாம். வீட்டைப் பராமரிப்பது, தோட்டம் அமைப்பது ஆகியவை தொடர்பான உங்கள் அனுபவங்களை எங்களுக்கு எழுதுங்கள்.

மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in

கடிதத் தொடர்புக்கு: சொந்த வீடு, தி இந்து

கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை- 600 002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x