Published : 14 Feb 2015 12:08 PM
Last Updated : 14 Feb 2015 12:08 PM
காலத்தின் கட்டாயத்தால் தனி வீடுகள் மறைந்து அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவிட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தனி வீடுகளைவிட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீத்தடுப்புச் சாதனங்களையும் பாதுகாப்புக்கான வழிகளையும் அதிக கவனத்தோடு செய்யவேண்டும்.
பழைய அடுக்குமாடி வீடா?
புதிதாக கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பெரும்பாலும் தீத்தடுப்புச் சாதனங்கள் பொருத்தப்பட்டுவிடுகின்றன. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களிலும் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளிலும்கூட இத்தகைய தீத்தடுப்புச் சாதனங்களைப் பொருத்துவது அவசியமே.
காரணம், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீப்பற்றுவதால் பாதிப்பின் அளவு அதிகம் இருக்கும். தீ வேகமாக அடுத்துள்ள வீடுகளிலும் பரவும் அபாயம் இருப்பதால் அனைத்து வீடுகளிலுமே தீத்தடுப்பு சாதனங்களைப் பொருத்துவது அவசியமாகிறது.
தீத்தடுப்புச் சாதனங்கள்
தீத்தடுப்புச் சாதனங்கள் என்றாலே மணல் நிரப்பப்பட்ட வாளிதான் எல்லோருக்கும் நினைவில் வரும். இதைத்தவிர நவீன ஃபயர் எக்ஸ்டின்கியூஷர் போன்ற தீயணைப்புச் சாதனங்களைக் குடியிருப்பில் பரவலாக பல இடங்களில் பொருத்தவேண்டும். இந்தச் சாதனங்களைப் பயன்படுத்துவது எளிமையும்கூட.
நவீன சாதனங்கள்
மிக நவீனமானத் தீத்தடுப்புச் சாதனங்கள் தற்போது விற்கப்படுகின்றன. இந்தச் சாதனங்களை வீடுகளில் பொருத்திவிட்டால் போதும். வீட்டில் தீப்பற்றும் சமயங்களில் அறையின் வெப்ப நிலை உயருமல்லவா? இந்தச் சாதனங்களின் மேற்பரப்பு நெகிழ்வதின் மூலம் தானியங்கியாக செயல்பட்டு நெருப்பை அணைக்கும் வகையிலான சாதனங்கள் கிடைக்கின்றன.
இதைப் போன்ற சாதனங்களை வீட்டில் பொருத்துவதன் மூலம் பூட்டிய வீட்டில் ஏற்படும் சில சிறிய தீ விபத்துகளைத் தடுப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
கண்ணுக்குப் புலப்படாத எமன்
கார்பன் மோனாக்ஸைடு (CO) வாயு அபாயகரமானது. இதைக் கண்ணாலும் காணமுடியாது. நுகரவும் முடியாது. சமையல் எரிவாயுவை எரிக்கும்போதும் கரி போன்றவற்றை எரிக்கும் போதும் உண்டாகும் வாயு. பெரும்பாலான தீ விபத்துகளின் போது இந்த வாயுவின் தாக்கத்தாலேயே நிறைய பேர் மரணம் அடைவர். வீட்டின் சமையலறை காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ஜன்னல் அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனாவது இருக்க வேண்டும். தற்போது வீட்டுக்குள் கார்பன் மோனாக்ஸைடை உணர்ந்தால் ஒலி எழுப்பும் எச்சரிக்கை சாதனங்கள் வந்துவிட்டன. இதை வீட்டில் பொருத்திவிட்டால் பெரும் உயிர்ச்சேதங்களைத் தடுக்கலாம்.
தண்ணீரால் முடியுமா?
பொதுவாக எல்லாத் தீயையும் தண்ணீரைக் கொண்டே அணைத்துவிடமுடியாது. குடிசை தீப்பற்றி எரிவதை அணைக்க தண்ணீர் போதும். ஆனால் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 20 மின் இணைப்புகள் சேர்ந்திருக்கும் மீட்டர் பாக்ஸில் தீப்பிடித்தால், அந்தத் தீயை அணைக்க தண்ணீர் ஊற்றினால் விபரீதம் ஏற்படும். மணலைப் பயன்படுத்தியே அந்தத் தீயை அணைக்க வேண்டும்.
சில ரசாயனங்கள் தீப்பற்றி எரியும் போது, சிலவகையான ரசாயனங்களைப் பயன்படுத்திதான் அந்தத் தீயை அணைக்கமுடியும். அதனால் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்கும் வகையில் உடனடியாக உங்கள் வீட்டிற்கும் குடியிருப்புக்கும் உகந்த தீயணைப்புச் சாதனங்களை இன்றே பொருத்துங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT