Published : 07 Feb 2015 01:09 PM
Last Updated : 07 Feb 2015 01:09 PM
உலக அளவில் அநேகக் கட்டிடங்கள் நவீனத் தொழில்நுட்பத்தில் பெரும் வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன. தமது வடிவமைப்பால் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இத்தகைய கட்டிடங்களைப் போன்ற அலுவலகக் கட்டிடங்கள் பல இந்தியாவிலும் கட்டப்பட்டுள்ளன. அப்படியான சில கட்டிடங்களைப் பார்ப்போம்
ஐ ஃப்ளக்ஸ் சொல்யூஸன்ஸ், பெங்களூரு
இந்தக் கட்டிடம் விசேஷமான வடிவமைப்பைக் கொண்டது. பபிளாக்குகளால் ஆன இந்தக் கட்டிடம் ஆற்றலைச் சேமிக்கவும் உதவுகிறது. இயற்கை ஒளி கட்டிடத்துக்குள் பரவி வெளிச்சத்தைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தப் பரப்பு 1,44,000 சதுர அடி.
சிக்னேச்சர் டவர், குர்கான்
இந்தியாவிலேயே சிறந்த வடிவமைப்பு கொண்ட அலுவலக வளாகக் கட்டிடம் எனச் சொல்லப்படுகிறது. 15 தளங்கள் கொண்ட இதில் 23,505 சதுர அடி பரப்பு கொண்ட அலுவலக அறைகள் உள்ளன.
அடோப் இந்தியா நிறுவனத்தின் தலைமையகம், நொய்டா
இந்தக் கட்டிடத்தின் புதுமையான வடிவமைப்பும் வசீகரமான வண்ணங்களும் காணும் கண்களில் நிலைபெற்றுவிடுகின்றன. மொத்தம் 2,00,000 சதுர அடி பரப்பு கொண்டது. தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த நவீனக் கட்டிடம் புழங்குவதற்கு எளிதானது.
ஹெச்எஸ்பிசி கட்டிடம், புனே
ஹெச்எஸ்பிசி குளோபல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்படும் இந்த அலுவலகக் கட்டிடம் 2002-ல் அமைக்கப்பட்டது. இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்ட விதமும், இதன் சுற்றுப்புறச் சூழலும் இதைத் தனித்துவமானதாக்குகிறது. பசுமைக் கட்டிடத்துக் கான சர்வதேச சான்றிதழ் பெற்ற கட்டிடம் இது.
இன்பினிட்டி டவர், கொல்கத்தா
மூன்று தனித்தனியான கோபுரங்களைக் கொண்டது இந்தக் கட்டிடம். ஹபீஸ் காண்ட்ராக்டர் என்னும் வடிவமைப்பாளர் கைவண்ணத்தில் வடிவமைப்பான கட்டிடம் இது. 13,00,000 சதுர அடி பரப்பு கொண்டது. தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளதால் பசுமையான சூழல் பற்றிப் படர்ந்திருக்கும் கட்டிடமாக உணரவைக்கிறது.
இன்போஸிஸ் பன்னடுக்கு வளாகம், மைசூர்
உலகத்தின் மிகப் பெரிய பயிற்சி மையம் அமைந்துள்ள கட்டிடம் இது. இதன் பரப்பு மொத்தம் 14,40,000 சதுர அடி. ஒரே நேரத்தில் 14,000 பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய வகையிலான அரங்க அமைப்பு கொண்டது. இந்த வளாகத்தின் உள்ளே, 485 வகுப்பறைகளும், 147 பயிற்சி அறைகளும், 42 கருத்தரங்க அறைகளும் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT