Published : 07 Feb 2015 12:59 PM
Last Updated : 07 Feb 2015 12:59 PM
எல்லோரும் வீடு கட்ட சிரமப்படுவார்கள் ஆனால் நான் வீடு கட்டிய பின்னர் சிரமப்பட்டேன். கடைசியில் எல்லாம் சுபமாகத்தான் முடிந்தது. இதன் மூலம் எனக்கு நல்ல பாடம் கிடைத்தது.
அந்தப் பாடத்துக்கான விலை கொஞ்சம் அதிகம்தான். எவ்வளவு என்கிறீர்களா நான்கு லட்சம். சரி, என் கதையைக் கேட்கிறீர்களா?
சுமூகமாக முடிந்த வீடு
நான் கோவை நகரில் மனை வாங்கினேன். அந்த இடத்தில் மொத்தம் 84 மனைகள் இருந்தன. என்னுடைய மனை எண் 54. எனக்குப் பல இடங்களிலும் வீடு கட்டிப் பழக்கம் இருந்ததால், மளமளவென்று காரியத்தில் இறங்கினேன். மணல், கல், கம்பி ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து, லேபர்-கான்டிராக்ட் மூலமாக வீட்டைக் கட்டினேன்.
வீட்டின் கீழ்ப்பகுதியில் இரண்டு பகுதிகளையும் மாடியில் நாங்கள் இருக்கும் வகையிலும் வீட்டை கட்டி முடித்தோம். கீழ்ப்பகுதியை வாடகை விட்டதன் மூலம் மாதம் 8 ஆயிரம் கிடைத்தது. எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது என்றுதான் நினைத்தேன்.
மூன்று ஆண்டுகள் எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் வீடு கட்டும்போது வேறு யாரும் வீடு கட்டவில்லை. முதல் வீடு என் வீடுதான். இந்த மூன்று ஆண்டுகளில் பல வீடுகள் வந்துவிட்டன. என் வீட்டுக்கு அடுத்திருந்த மனை (எண் 55, 53) காலியாகவே இருந்தன.
ஒருநாள் நான் கடையில் இருக்கும்போது, என் மகன் போன் செய்து, “யாரோ நான்கு பேர் வந்து, அவர்கள் இடத்தில் நாம் வீடு கட்டிவிட்டதாகச் சொல்கின்றனர்” என்றான் பதற்றத்துடன். எனது சிக்கல் இங்கேதான் தொடங்கியது.
விநோதச் சிக்கல்
நான் உடனே வீட்டுக்குச் சென்றேன். என்னிடம் அவர்கள், “என்னோட இடத்தில் நீங்கள் வீடு கட்டிவிட்டீர்கள்” என்றனர். நான் அவர்களிடம் “என்னுடைய வீட்டுப் பத்திரத்தைக் காண்பித்து மனை எண் 54 என்னுடையதுதான்” என்றேன்.
அவர்கள் கொண்டுவந்திருந்த பத்திரத்தைக் காண்பித்தார்கள். அதில் மனை எண் 54A-ல் 2 ½ சென்ட் பதிவாகி இருந்தது. நாங்கள் இருவரும் எங்களுக்கு நிலம் விற்றவரிடம் போய், எப்படி 54, 54A என இருவருக்கும் பதிவுசெய்து கொடுத்தீர்கள் என்று கேட்டோம்.
இடம் விற்றவர் என்னிடம் “மனை எண் 54 உங்களுடையது. ஆனால் உங்கள் மனைக்கு பக்கத்தில் இருந்த 5 சென்ட் மனையைச் சரிபாதியாக்கி இருவருக்கு விற்றுவிட்டேன். நீங்கள் ஏன் பக்கத்து மனையில் வீடு கட்டினீர்கள்” என்றார்.
விபரீதம் உணர்ந்தேன்
அப்போது தான் நான் செய்திருந்த விபரீதம் எனக்குப் புரிந்தது. என்னுடைய மனையில் இருந்த 54 எண் எழுதியிருந்த அடையாளத்தைக் குறிக்கும் கல்லைப் பிடிங்கி, 54A என்று எழுதி பக்கத்து மனையில் வைத்துவிட்டார்கள்.
நாங்கள் வீடு கட்டப் போகும் போது, A எனும் எழுத்து அழிந்துபோயிருந்தது. அந்த இடத்தில் நாங்களும் வீட்டை கட்டிவிட்டோம். அதாவது அடுத்தவர் நிலத்தில் வீட்டைக் கட்டி முடித்திருக்கிறோம். எனக்குப் பதற்றமாகிவிட்டது.
மனையை விற்றவர், தகராறு செய்தவர்களிடம், “ஏதோ தவறு நடந்துவிட்டது. யாரும் 35 லட்சம் செலவு செய்து, அடுத்தவர் மனையில் வீடு கட்டமாட்டார்கள். அவருடைய 2 ½ சென்ட் மனையை உங்கள் பெயருக்குப் பரிவர்த்தனை செய்து கொடுப்பார். வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார்.
ஆனால் அவர்களோ எங்களுக்கு எங்களின் மனைதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர். மனையை விற்றவர், ‘எங்கள் பகுதியில் இருக்கும் ஒரு கவுன்சிலரிடம் சென்று உங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார்.
என் வாழ்நாளில் இதுவரை ஐந்து வீடுகள் கட்டியுள்ளேன். இதுபோன்ற பிரச்சினையைச் சந்தித்ததே இல்லை. அதுமட்டுமல்ல, இன்னொரு 2 ½ சென்ட் வாங்கியது யார் என்று பார்த்து அதற்கும் சேர்த்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பஞ்சாயத்து
மறுநாள், கவுன்சிலர் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது. “யாரும் தெரிந்தே இன்னொருவரின் இடத்தில் வீடு கட்டமாட்டார்கள். அதனால் நீங்களும் அவரும் பரிவர்த்தனை மூலம் நிலத்தை மாற்றி எழுதிக் கொள்ளுங்கள். செலவுகள் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார்” என்றார்.
இதற்கு மனைக்குச் சொந்தக்காரர் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு வீடு கட்டப்பட்டிருக்கும் மனைதான் வேண்டும் என்றார். இந்தப் பஞ்சாயத்து இரண்டு வாரங்களுக்கு நீடித்தது.
இதற்கிடையில், இடம் விற்றவர் எனக்கு போன் செய்து, அடுத்த 2 ½ சென்ட் மனையை வாங்கியவர் இங்கு வந்துள்ளார் உடனே வாருங்கள் என்றார். போனேன். அவர் மிகவும் அமைதியாக, “நடந்தது நடந்துவிட்டது. அவர் செலவில் பரிவர்த்தனை பத்திரம் எழுதிக் கொள்ளலாம்” என்றார்.
எனக்கு அவரின் பேச்சு ஆறுதல் அளித்தது. அதோடு நஷ்ட ஈடாக ஒன்றரை லட்சம் கொடுப்பதாக முடிவு செய்து, அவர் கேட்டுக் கொண்டபடி செய்து கொடுத்தேன்.
அதன்பின் நான் மீண்டும் கவுன்சிலரிடம் சென்றேன். தகராறு செய்தவர், 50 ஆயிரம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் மனைப் பத்திரத்தின் அசலைத் தர வேண்டும் என்றும் கூறினார். இதற்கு ஒப்புக்கொண்டால் மனை பரிவர்த்தனைக்கு ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார்.
மறுநாளே அவர் கேட்டபடி மனையைப் பரிவர்த்தனை செய்துகொடுத்தேன். இது நடந்து ஒருவாரத்துக்குப் பிறகு, பிரச்சினை இல்லாமல் முடித்துக் கொடுத்ததுக்கு எனக்கு 1 லட்சம் தர வேண்டும் என்றார் கவுன்சிலர். அதையும் கொடுத்தேன்.
படிப்பினை
இனி எந்த மனை வாங்கினாலும் சர்வேயரை வைத்து அளந்து இடத்தை உறுதி செய்து வீடு கட்ட வேண்டும் என்னும் படிப்பினையை 4 லட்சம் செலவு செய்து நான் கற்றுக்கொண்டேன். இதுதான் என் கதை. இனி நீங்களும் வீடு கட்டும் முன்னர் முறையாக இடத்தை அளந்துகொள்வீர்கள் இல்லையா?
- ஹாஜி எம். முஹம்மது யூசுப், கோவை.
வீடு வாங்குவது, கட்டுவது தொடர்பாக உங்களுக்குப் பல விதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அதிலுள்ள சிரமங்களையும் சுவாரசியங்களையும் எங்களுக்கு எழுதுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in
கடிதத் தொடர்புக்கு:
சொந்த வீடு, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை- 600 002.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT