Published : 21 Feb 2015 12:58 PM
Last Updated : 21 Feb 2015 12:58 PM
கம்பீரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு ஃப்ளாட் வாங்கிவிட்டீர்கள். உங்கள் ஃப்ளாட்டில் உயர்தர சோபாக்கள் அடுக்கப்பட்ட வரவேற்பறையின் குறுக்கே ஓர் மின்கம்பம் சாய்ந்து நின்றால் எப்படி இருக்கும்?
அகலமாகக் கிளை பரப்பி நிற்கும் ஓர் ஆலமரம் படுக்கை அறையில் முளைத்திருந்தால் எப்படி இருக்கும்? மாடிப் படிக்கட்டுகளில் குட்டிப் பூனைகள் அங்குமிங்கும் துள்ளித் திரிந்து விளையாடினால் எப்படி இருக்கும்?
இப்படி நம் வழக்கமான சலிப்புத்தட்டும் வாழ்க்கையில் புதுமைகளைப் புகுத்தி நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ள வழிசெய்கின்றன சுவர் ஸ்டிக்கர்கள்.
பெயிண்ட் தேவையில்லை
உங்கள் வீட்டு வரவேற்பறையை வசீகரமாக மாற்ற வேண்டும் என நினைத்தால் இனி விலை உயர்ந்த பெயிண்டுகளைப் பூச வேண்டியதில்லை. அவ்வளவு ஏன் வால்பேப்பர் (wallpaper) எனப்படும் சுவர் காகிதங்களைக்கூட வாங்க வேண்டியதில்லை.
சுவர் காகிதம் அல்லது பெயிண்டு என்பவை ஒட்டுமொத்தமாக ஒரு அறையின் சுவர் முழுவதையும் வேறு தோற்றத்துக்கு மாற்றுபவை. முழுச் சுவருக்கும் பளீர் நிறத்தில் பெயிண்ட் பூசுவது பழைய பாணி. சுவரின் ஒரு சிறிய பகுதிக்கு மட்டும் வேறுவிதமான தோற்றம் தருவது புதிய பாணி.
நவீன அழகியல் கோட்பாடு இன்று மாறிவிட்டது. அழகூட்டுவது என்றால் அங்குமிங்குமாகச் சில நகாசு வேலைப்பாடுகள் செய்வதுதான். அத்தகைய நவீன வீட்டு அலங்காரத்துக்கு உகந்தவை சுவர் ஸ்டிக்கர்கள்.
குறைந்த செலவில் நிறைய அழகு
இவற்றைப் பயன்படுத்துவது சுலபம், துரிதமாக ஒட்டிவிடலாம், உங்கள் சவுகரியத்துக்கு ஏற்ப எந்தப் பகுதியிலும் ஒட்டிக் கொள்ள முடியும். விலையும் குறைவு. வெறும் ரூ.300 முதல் விதவிதமான சுவர் ஸ்டிக்கர்கள் விற்கப்படுகின்றன. ஆனால் மாயாஜாலம் போல உங்கள் ஃப்ளாட்டின் தோற்றத்தை அவை முற்றிலுமாக மாற்றிவிடும்.
சுவாரசியமான, நவீன வடிவங்களில் சுவர் ஸ்டிக்கர்கள் கிடைக்கின்றன. சுவர்களில் மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருட்கள், மேஜை, நாற்காலி போன்ற சாமான்களின் மீதும் ஒட்டி அழகு பார்க்கலாம்.
கேலி, கிண்டல் ததும்பும் சுவர் ஸ்டிக்கர்கள், 3டி டிஜிட்டல் அச்சுகள், ஈர்க்கும் சுவர் கலை புகைப்படங்கள் என நீங்கள் விரும்பும் ஸ்டிக்கர்களை எங்கு வேண்டுமானாலும் ஒட்டலாம். சிறிது காலம் கழித்து அவற்றை அகற்றிவிட்டு வேறு படங்களும் ஒட்டலாம்.
எங்கும், எப்படியும்!
உயிரோட்டமற்ற பகுதி என்றால் வீட்டிலிருக்கும் சுவிட்ச் போர்டுதான். அத்தகைய சுவிட்ச் போர்டைப் பார்த்துப் பார்த்து சிரித்து ரசிக்கும்படி மாற்றும் ஸ்டிக்கர்கள் உள்ளன. சுவிட்ச் போர்ட்டுக்குள் மின்சாரம் எப்படிப் பாய்கிறது, அதிலிருந்து வெளியேறும் மின்சாரம் மற்ற கருவிகளை எப்படி இயக்குகிறது என்பது போன்ற அறிவியல் சார்ந்த விஷயங்களைக் கேலிச் சித்திரம் போல் காட்டும் ஸ்டிக்கர்கள் இவை.
வெறும் கறுப்பு வெள்ளை நிறங்களைக் கொண்டு மாயாஜாலம் செய்யும் சுவர் ஸ்டிக்கர்கள், நாட்டியப் பேரொளிகளை உங்கள் அறை சுவர்களில் நடனமாடச் செய்யும் ஸ்டிக்கர்கள், கேலி கிண்டல் கூடிய ஸ்டிக்கர்கள், குழந்தைகளை ஈர்க்கும் ஸ்டிக்கர்கள், மனிதர்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள், விளையாட்டு, இசை இப்படி கலைநயம் மிக்க ஸ்டிக்கர்கள், செல்லப் பிராணிகள், பூச்சிகள், வண்ண வண்ணப் பூக்கள், மரங்கள், பறவைகள், வடிவியல் வடிவங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் இப்படி விதவிதமாக உள்ளன.
‘என்ன பொழுதுபோகாம சுவரை வெறித்துப் பார்த்துகிட்டிருக்க!’ என யாரும் உங்களை இனிமேல் கேட்க மாட்டார்கள். சுவரைப் பார்ப்பதன் மூலமே உங்கள் பொழுதை சுவாரசியமாகக் கழிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT