Published : 07 Feb 2015 12:46 PM
Last Updated : 07 Feb 2015 12:46 PM
ஒரு இடத்தை அலங்கரிப்பதில் வண்ணங்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொதுவாக, வீட்டை அலங்கரிப்பதற்குப் பல வண்ணங்களைப் பயன்படுத்திவருகிறோம்.
அப்படியில்லாமல், ஒரே நிறத்தைப் பிரதானமாக வைத்துக்கூட வீட்டை அலங்கரிக்கலாம். அந்த வகையில், நீல நிறத்தை வைத்து வீட்டை எப்படி அலங்கரிக்கலாம் என்று பார்க்கலாம்.
நீலத்தின் பலம்
நாம் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு நிறமும் நம் மனநிலையையும், ஆளுமையையும் பிரதிபலிக்கக்கூடியவை. நீலம், மென் நிறங்களின் குடும்பத்தைச் சேர்ந்தது. அமைதியையும், இனிமையையும் தருவதில் நீல நிறத்தை எந்த நிறத்தாலும் அடித்துக்கொள்ள முடியாது. அத்துடன், மனதை ஒருமுகப்படுத்துவதற்கு நீல நிறம் உதவும்.
சுவர் அலங்காரம்
உங்கள் வீட்டின் சுவர் நிறம்தான் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகிறது. நீங்கள் மென்மையை விரும்பக்கூடிய நபர் என்றால், உங்களுக்கு ஏற்ற நிறம் நீலம்தான். வரவேற்பறையின் பிரதானமான சுவரைத் தேர்ந்தெடுங்கள். அந்தச் சுவரில் நீல நிறத்தின் வலிமை வெளிப்படும்வகையில் அடர்த்தியாகப் பூசுங்கள். அப்படியில்லையென்றால், நீல வண்ணத்தில் டெக்ஸ்ச்சுரைஸ்டு தன்மையுடன் இருக்கும் வண்ணத்திலும் சுவரை அலங்கரிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல், விதவிதமான அலங்காரங்களுடன் கிடைக்கும் நீல வண்ண சுவர் காகிதங்கள், நீல வண்ணத்தலான புடைப்பு சிற்பங்களை வைத்தும் உங்கள் வீட்டின் சுவரை அலங்கரிக்கலாம். சுவரை மட்டுமில்லாமல், சுவரில் மாட்டிவைக்கும் பொருட்கள், அலமாரிகள் என எல்லாவற்றிலும் நீல வண்ணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, போட்டோ ஃபிரேம்களை நீல நிறத்தில் சுவரில் மாட்டிவைக்கலாம். இப்படிப் பல பொருட்களிலும் நீலம் இருக்கும்படி வீட்டை அலங்கரிக்கலாம்.
அறைக்கலன்களாலும் அலங்கரிக்கலாம்
அறைக்கலன்கள்தான் வீட்டு அலங்காரத்தின் ஆன்மாவாக இருக்கின்றன. ஒரு வீட்டின் தோற்ற அழகைத் தீர்மானிப்பதில் இவை 30 சதவீதம் எடுத்துக்கொள்கின்றன. நீல வண்ணத்தின் பல சாயல்களில் இந்த அறைக்கலன்கள் இருந்தால், அது வீட்டின் தோற்றத்தை மேலும் அழகாக்கும்.
வீட்டின் திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுக்கும் சுவருக்கு அடித்திருக்கும் அதே வண்ணத்தில் தேர்ந்தெடுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, நீலமும் சாம்பலும், நீலமும் வெள்ளையும், நீலமும் பச்சையும் போன்ற இருநிறங்களும் இணைந்திருக்குமாறு வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
வீட்டின் தரைவிரிப்புகளிலும் நீல வண்ணம் பிரதானமாக இருக்கும்படி வடிவமைக்கலாம். வரவேற்பறை அறைக்கலன்களில் இடம்பெறும் மெத்தைகளையும் நீல வண்ண சாயல்களில் அமைக்கலாம். அப்படியில்லை என்றால், நீல வண்ணத்தின் கான்ட்ராஸ்ட் நிறமான ஆரஞ்சு நிறமாகவும் இருக்கலாம்.
அலங்காரப் பொருட்கள்
வீட்டின் தோற்ற அழகைப் பத்து சதவீதம் அலங்காரப் பொருட்கள் தீர்மானிக்கின்றன. அப்படியிருக்கும்போது, நீல வண்ணத்தில் வீட்டை அலங்கரிக்கும்போது வீட்டு அலங்காரப்பொருட்களிலும் தினசரி உபயோகப்படுத்தும் பொருட்களிலும் அந்த வண்ணத்தின் நீட்சி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
உதாரணமாக, அலங்கார விளக்குகள், கண்ணாடியின் ஃபிரேம், பூந்தொட்டிகள், மேஜை விரிப்புகள், அலங்கார ஜாடிகள் போன்ற பொருட்களிலும் இந்த நீல வண்ணத்தின் சாயல் தெரியவேண்டும். கடைசியாக, இவற்றைச் செய்து முடித்த பிறகு நீலநிறப் பூக்களின் வாசமும் வீட்டில் வீசுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT