Published : 24 Jan 2015 04:19 PM
Last Updated : 24 Jan 2015 04:19 PM
வீட்டுக்கு வீடு வாசப்படி இருக்கிறதோ, இல்லையோ இன்றைக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டுக்கு வீடு நெருக்கடி இருக்கும்.
இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நகரத்தில்கூடத் திண்ணையுடன் கூடிய வீடுகள் இருந்தன. கோடைக் காலத்தில் நெடும் தொலைவு நடப்பவர்கள் வீட்டுத் திண்ணைகளில் இளைப்பாறிவிட்டுச் செல்வார்கள். அது ஒரு காலம். வீட்டில் உறவுகளுக்குப் பஞ்சமே இருக்காது.
அத்தை, சித்தப்பா, மாமா, தாத்தா, பாட்டி என வீடு முழுவதும் மனிதர்கள் நிறைந்திருந்த காலம் ஒன்று உண்டு. இப்போதெல்லாம் பள்ளிப் புத்தகங்களிலேயே என் குடும்பம் என்னும் தலைப்பின் கீழ் அப்பா, அம்மா, ஒரு குழந்தை என்ற அளவிலேயே அச்சடித்திருக்கின்றனர். குழந்தைகளின் மனதிலும் அப்பா, அம்மாவைத் தாண்டி வேறு உறவுகள் பதிவதில்லை.
காலத்துக்கேற்ற வீடுகள்
இப்படிப் பல சிறு, குறு குடும்பங்கள் அடங்கும் கூடுகளாக இருக்கின்றன அடுக்குமாடி குடியிருப்புகள். இந்தியாவில் சராசரியாகக் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்கு என்று வைத்துக்கொண்டால்கூட, அவர்கள் தாராளமாகப் புழங்குவதற்கு ஏற்ற இடங்களாகக் குடியிருப்புகள் இல்லை என்பதே உண்மை. இருக்கும் கொஞ்சம் இடத்திலும் துணிதுவைக்கும் இயந்திரம், கட்டில், பீரோ போன்ற பொருட்கள் இடம்பிடித்திருக்கும்.
இந்தப் பொருட்களுக்கு இடையில் இருக்கும் இடத்தில்தான் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் வசிக்க வேண்டிய நிலை. இருக்கும் இடத்துக்கேற்ப சில நடவடிக்கைகளைச் செய்தால், அடுக்குமாடிக் குடியிருப்பிலும் நெருக்கடி இல்லாமல் வாழ முடியும்.
தேவை திட்டமிடல்
செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதில் தொடங்கி வீடு வாங்குவதுவரை எல்லா வியாபாரத்திலும் நீக்கமற ஒலிக்கும் சொல் `ஆஃபர்’. சலுகை கிடைக்கிறது என்பதற்காகத் தேவையற்ற பொருட்களை வாங்காதீர்கள். தேவையில்லாதவற்றில் முதலீடு செய்யாதீர்கள்.
தேவைக்கு அதிகமாக நீங்கள் வாங்கும் பொருட்களால் வீட்டுக்குள் உங்களுக்குத் தெரியாமலேயே இடம் அடைத்துக்கொள்ளும். இந்த யோசனை கட்டில், பீரோவுக்கு மட்டும்தான் என்றில்லை, சமையல் பொருட்களுக்கும் சேர்த்துதான்.
அலமாரி இடஒதுக்கீடு தேவை
வீட்டில் அணிந்து கொள்ளும் ஆடைகள், விசேஷங்களுக்கு அணியும் ஆடைகள் என எல்லோரும் பிரித்துவைத்திருப்பார்கள். அதில் வீட்டில் பயன்படுத்தும் ஆடைகளை வைப்பதற்குப் பெரும் பாலும் பயன்படுத்துவார்கள். மற்றவற்றை வைப்பதற்கு பீரோவைப் பயன்படுத்துவார்கள்.
சில மாதங்களில் புதிதாக ஆடைகள் சேரும்போது, சில ஆடைகளை பீரோவிலும் வைக்கமுடியால் அலமாரியிலும் வைக்கமுடியாமல் திண்டாடுவார்கள். இதுபோன்ற நேரங்களில் அதிகம் பயன்படுத்தாத ஆடைகளைத் துவைத்து, மடித்து அழகாக சூட்கேஸ்களில் அடைத்துவைத்துவிடலாம். இதனால் தேவையில்லாமல் அலமாரிக்கு வெளியே ஆடைகள் ஆங்காங்கே கொடிகளில் தொங்குவதைத் தவிர்க்கலாம்.
ஆடைகளுக்கு அடுத்து வீடுகளில் அதிகம் இடத்தை அடைத்துக்கொள்பவை வீட்டு உபயோகப் பொருள்களில் நம்மால் பெரிதும் பயன்படுத்தப்படும் தொலைக்காட்சி, டிவிடி போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள். இவற்றை ஒழுங்காகப் பராமரிக்கும் வகையில் வைப்பதற்கு தற்போது நவீனமான மல்டி ஸ்டோரேஜ் உபகரணங்கள் கிடைக்கின்றன.
இவற்றைச் சுவரில் பொருத்துவதும் எளிது. இதுபோன்ற வால் பிராக்கெட்களை சுவரில் பொருத்திவிட்டால், உங்கள் வீட்டு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அனைத்தும் ஒரேஇடத்தில் கச்சிதமாக உட்கார்ந்துவிடும். இவற்றில் பொருத்து வதால் வாரத்துக்கு ஒருமுறை சுத்தப்படுத்துவதும் எளிமையாகிவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT