Last Updated : 03 Jan, 2015 12:36 PM

 

Published : 03 Jan 2015 12:36 PM
Last Updated : 03 Jan 2015 12:36 PM

கதை சொல்லும் பாலங்கள்

கட்டிடம் கட்டுவதற்குப் பணம் தேவை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பணத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டிடம் கட்டிய மனிதரைத் தெரியுமா? நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலை நிபுணர் யூரோ நோட்டுகளைப் பார்த்து அச்சு அசலாகப் பல பாலங்கள் கட்டியுள்ளார். இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதையும் உள்ளது.

பணத்தில் கட்டிடக் கலை

2002-ம் ஆண்டில் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ராபர்ட் கலினா என்ற வடிவமைப்பாளருக்கு ஐரோப்பாவின் கட்டிடக் கலையை முன்னிருத்த வேண்டும் எனத் தோன்றியது. தன் எண்ணத்திற்கு வடிவம் கொடுக்கக் கற்பனையாகப் பாலங்கள் வரைந்து அவற்றை யூரோ நோட்டுகளில் அச்சிடக் கோரினார். அவர் வரைந்த பாலங்கள் ரோமானியர் காலம், கோதிக் காலம், மறுமலர்ச்சிக் காலம், 20-ம் நூற்றாண்டின் கட்டிடக் கலை என ஐரோப்பிய வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களைப் பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்திருந்தன.

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் சில நாடுகளை மட்டும் முன்னிறுத்தாமல் புதுவிதமாக ஒட்டு மொத்த ஐரோப்பியக் கலாச்சாரத்தையும் முன்னிறுத்தியதால் ராபர்ட்டின் திட்டம் பாராட்டப்பட்டது. அவர் வரைந்த பாலங்களின் ஓவியங்களும் யூரோ நோட்டுகளில் அச்சிடப்பட்டன. இதுதான் முன்கதை.

கற்பனைப் பாலத்தை நிஜமாக்குவேன்

பின் கதை என்னவென்றால், நெதர்லாந்து கட்டிடக் கலை நிபுணரான ராபின் ஸ்டாமுக்கு ஒரு நாள் ஒரு புதிய சிந்தனை உதித்தது. “நோட்டில் இருக்கும் கற்பனைப் பாலங்களை நிஜமாகவே கட்டினால் எப்படி இருக்கும்?” என ராபின் விளையாட்டுத்தனமாகச் சிந்தித்தார். ராபினுக்கு வந்த கற்பனை வீட்டு வாரிய அமைப்பிற்குத் தெரியவர அவர்களுக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. 200 யூரோ நோட்டுகள் முதல் 50 யூரோ நோடுகள் வரையில் காணப்பட்ட ஏழு விதமான பாதசாரி பாலங்களை கட்டத் தொடங்கினார் ராபின்.

முதலில் கிண்டல் பின்னால் ஆச்சரியம்

யூரோ நோட்டுகளில் காணப்படும் பாலங்களின் நிறம், வடிவம், அமைப்பு அத்தனையும் ஒருசேர தத்ரூபமாக நிஜ பாலத்திலும் கொண்டு வரும் முனைப்போடு செயல்பட்டார் ராபின். அதற்காக மர அச்சுகள் மூலம் யூரோ நோட்டுகளின் வடிவத்தைக் கணித்தார். சராசரியான பாலத்தைக் கட்டுவதைக் காட்டிலும் இந்த நூதனப் பாலங்களைக் கட்டமைக்க அதிகம் செலவானது. இருப்பினும் அதிக செலவில் அட்டகாசமாகப் பாலங்கள் கட்டப்பட்டன.

தற்போது பாதசாரிகளும், மிதிவண்டி ஓட்டுநர்களும் இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆரம்பத்தில் சிலர் இந்தப் பாலங்கள் மிக மோசமான அழகியல் உணர்வோடு கட்டப்பட்டிருப்பதாக விமர்சித்தானர். பின்னர் அவை உருவான கதை அறிந்து ரசிக்கத் தொடங்கிவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x