Last Updated : 10 Jan, 2015 10:42 AM

 

Published : 10 Jan 2015 10:42 AM
Last Updated : 10 Jan 2015 10:42 AM

வீட்டைப் பசுமையாக்கும் செடிகள்

குளிர்காலம் முடிந்து விரைவில் வசந்தகாலம் ஆரம்பிக்க இருக்கிறது. வசந்த காலத்தின் அழகை வெளியே சென்றுதான் ரசிக்க வேண்டும் என்பதில்லை. நாம் நினைத்தால் வீட்டுக்குள்ளேயே ஒரு வசந்த காலத்தை உருவாக்க முடியும். வீட்டுக்குள்ளேயே செடிகளை வளர்ப்பதன் மூலம் இதை எளிதில் சாத்தியப்படுத்தலாம். செடிகளை வீட்டுக்குள் வைப்பதற்கும் வளர்ப்பதற்கும் சில வழிகள்.

தொங்கும் குவளைகள்

வீட்டுக்குள் செடிகள் வளர்ப்பதற்காகவே வித்தியாசமான வடிவங்களில் கண்ணாடிக் குவளைகள் கடைகளில் கிடைக்கின்றன. இந்தக் கண்ணாடி குவளைகளில் காற்றில் வளரும் செடிகளை வளர்க்கலாம். இந்தச் செடிகள் காற்றில் இருந்தே தனக்கான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்ளும். இவை வளர்வதற்கு மண் தேவையில்லை.

வீட்டின் வரவேற்பறையின் ஓரத்தில் இந்தக் குவளைகளைத் தொங்கவிடலாம். இந்தக் குவளைகளைத் தொங்கவிடும்போது வெவ்வேறு அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்குமாறு தொங்கவிடலாம். வீட்டுக்குள் நுழைபவர்களுக்குத் தேவையான புத்துணர்ச்சியை இந்தச் செடிகள் கொடுக்கும்.

வித்தியாசமான அலமாரிகள்

செடிகளை மொத்தமாக பால்கனியிலோ, வராண்டாவிலோ வைத்துப் பராமரிக்க முயலும்போது வித்தியாசமான அலமாரிகளில் வைக்கலாம். மிதக்கும் அலமாரிகள், பெரிய மர ஏணிகள் போன்றவற்றில் தொட்டிச் செடிகளை வித்தியாசமான முறையில் அடுக்கி வைக்கலாம்.

தொட்டிகளின் வண்ணங்களையும் உங்கள் ரசனைக்கு ஏற்றபடி தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். வண்ணத் தொட்டிகளில் செடிகளை அலமாரிகளில் வீட்டின் பால்கனியில் வைக்கும்போது வீட்டை வெளியில் இருந்து பார்க்கும்போது வீட்டுக்கு அழகான தோற்றம் கிடைக்கும்.

ஜாடிச் செடிகள்

கண்ணாடி ஜாடிகளையே தொட்டிகளாக்கி வீட்டுக்குள் மேசைகளின் மீது செடிகளை வளர்க்கலாம். கண்ணாடி ஜாடிகள், மக்குகள், மீன் தொட்டிகள் போன்றவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஜாடிகளுக்குள் நேரடியாக மண்ணை நிரப்பியும் செடிகளை வளர்க்கலாம்.

சிறிய தொட்டிகளை ஜாடிகளுக்குள் வைத்தும் வளர்க்கலாம். இதன்மூலம் அலங்காரத் தொட்டிகளை வாங்கும் செலவுகளைக் குறைக்கலாம்.

அழகான தண்டுகள்

செடிகளைப் பராமரிப்பதற்கு உண்மையிலேயே நேரம் இல்லாதவர்கள் இந்த முறையைக் கடைப்பிடிக்கலாம். கண்ணாடி ஜாடிகளில் தண்ணீரை நிரப்பி அதில் பசுமையான தண்டுகளையோ, பூக்களையோ போட்டு வைக்கலாம்.

இந்த ஜாடிகளை வீட்டின் ஜன்னல் ஓரங்களில் வைக்கலாம். இவற்றைப் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.

தொட்டிகளை அலங்கரிக்கலாம்

தொட்டிகளையும், கண்ணாடி ஜாடிகளையும் அலங்கரிப்பதற்கு அவற்றில் கூழாங்கற்கள், கிளிஞ்சல்கள் போன்றவற்றைப் போட்டுவைக்கலாம்.

கூழாங்கற்கள் தொட்டிகளில் இருந்து வழியும் அளவுக்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சுவிடும். அத்துடன் இந்தக் கற்கள் செடிகள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளும்.

பசுமைச் சுவர்கள்

உங்கள் வீட்டின் வரவேற்பறை பெரிதாக இருந்தால் ஒரு பசுமைச் சுவரையே உருவாக்க முடியும். மரத்தலான சட்டகத்துக்குள் தகரைச் செடிகளையும், பாசிகளையும் வளர்க்கலாம்.

இவை அடர்த்தியான பசுமைத் தோற்றத்தையும், வெளிச்சத்தையும் வீட்டுக்குக் கொடுக்கும். கிட்டத்தட்ட ஒரு 3டி சுவர் ஓவியம் போல இது காட்சி தரும். இதைச் செங்குத்து தோட்டம் என்றும் அழைக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x