Published : 17 Jan 2015 04:08 PM
Last Updated : 17 Jan 2015 04:08 PM
கோயில் இல்லாத ஊரிலும் ஆறில்லாத ஊரிலும் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வதுண்டு. ஆண்டவனுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை ஆற்றுக்கும் கொடுத்திருக்கிறார்கள். ஏனெனில் நீர் மனித வாழ்க்கைக்கு அவ்வளவு அவசியமானது. காற்றுக்கு அடுத்தபடியாக நம்மால் அதிகம் உட்கொள்ளப்படுவது நீர். குடிப்பதற்கு மட்டுமல்லாமல் உடம்பின் புறச் சுத்தத்துக்கும் நீர் அவசியமானது. இரண்டு நாள்களுக்குச் சேர்ந்தாற்போல் நீரில்லை என்றால் நமது பாடு அதோகதிதான். ஆகவே வீடுகளுக்கான மனை தேடும்போதே நீர் இருப்பு பற்றியும் விசாரித்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது.
நீருக்கான ஆதாரங்கள்
நிலத்தடி நீரும் மழை நீரும் தண்ணீருக்கான ஆதாரங்கள். மழை வரும்போது நீரைச் சேமிப்பதும் நிலத்தடி நீரை முறையாகப் பயன்படுத்துவதும் நாளைய நீர் தேவையைச் சமாளிக்க உதவுபவை. நீர் விஷயத்தில் மெத்தனமாகச் செயல்பட்டால் அவதிதான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். வீடுகளைப் பொறுத்தவரை நீரைச் சேமிக்கப் பெரிய தொட்டி கட்டிக்கொள்கிறோம். அல்லது தயார்நிலையில் கிடைக்கும் நீர்த் தொட்டிகளை வாங்கிப் பொருத்திக்கொள்கிறோம். இவற்றைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும் இவற்றைப் பொருத்திய பின்னரான பராமரிப்பு விஷயத்திலும் கவனம் காட்ட வேண்டும்.
நீர்த் தொட்டியின் பாரம்
நீர்த் தொட்டிகளைத் தாங்கியிருக்கும் பீடங்கள் உறுதியாக அமைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் கட்டிடத்தின் மீது நிறுத்தப்படும் தொட்டிகளின் பளு கட்டிடத்தில் இறங்கும் என்பதையும் மறந்துவிடலாகாது. வலுவான நீர்த் தொட்டி அமைக்கிறோம் என்னும் பெயரில் அதிக பாரத்தைக் கட்டிடத்தின் மீது கொண்டுவந்து நிறுத்துவது கட்டிடத்தின் உறுதியைப் பாதிக்கும்.
பொதுவாக நீரைச் சேமிக்க உதவும் தொட்டிகள் நீடித்து உழைக்கும் வகையிலும் சூரிய ஒளியோ காற்றோ தூசியோ புகாத வகையிலும் நன்றாக மூடி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நீரைத் தாங்கியிருக்கும் தொட்டிகளில் சூரிய ஒளி உட்புகுந்தால் அதனால் பாசி போன்றவை நீரில் உருவாகிவிடும். இது சுகாதாரக்கேடாக முடியும்.
மூடப்பட்டிக்கிறதா தொட்டி?
நீர்த் தொட்டியின் மூடி எப்போதும் மூடிய நிலையில் இருப்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். அவசியமான நேரத்தில் பராமரிப்புப் பணிக்காக மூடியைத் திறந்தபோதும், பிற சமயங்களில் அவை மூடிய நிலையில் இருப்பதே நல்லது. எலி, அணில் போன்ற சிறு பிராணிகள் தவறிவிழுந்து நீரில் மூழ்கி உயிர்விட ஏதுவான நிலையில் மூடியைக் கவனக் குறைவாக திறந்துவைப்பது நமக்கு நாமே தீங்கிழைப்பதாகும். அதே போல் போதுமான இடைவெளிகளில் நீர்த் தொட்டியில் நீரை முழுவதும் காலி செய்து நன்கு கழுவி சூரிய ஒளியில் காயவைப்பதும் அவசியமானது.
வீணாகிறதா வெளியேறும் நீர்?
நீர்த் தொட்டியில் நிரம்பி வழியும் நீரை வெளியேற்றும் குழாயைத் தொட்டியின் மூடிக்கு எவ்வளவு அருகில் அமைக்க முடியுமோ அவ்வளவு அருகில் அமைப்பது நல்லது. ஏனெனில் அப்படி அமைக்கும் போது தொட்டியின் முழு கொள்ளளவுக்கும் நம்மால் நீரைத் தேக்கி வைக்க முடியும். இந்தக் குழாயிலிருந்து வெளியேறும் நீரை அப்படியே கட்டிடத்தின் மீதோ கட்டிடத்தின் வெளியேயோ கொட்டி விடுவதற்குப் பதிலாக மரங்கள், செடிகள் போன்றவற்றுக்குப் பாயவிடுவது நல்லது.
அதே போன்று இந்த வெளியேறும் குழாய் உள்ளிட்ட துளைகளில் கொசு போன்ற சிறு உயிரிகளை உள்ளே அனுமதிக்காத வலை கொண்டு மூடிவிடுதலும் அவசியம். இதனால் நீரில் நோய்க் கிருமிகளைப் பரப்பும் உயிரிகள் உருவாவதைத் தடுத்த நிறுத்த இயலும்.
நிலத்தடியில் தொட்டிகளை அமைக்கும்போது, அவை கழிவுநீர் சேகரிப்பு தொட்டியின் அருகிலோ, வேர்கள் நிலத்தடியில் அதிகம் பரவும் இடத்துக்கு அருகிலோ, அஸ்திவாரத்துக்கு அருகிலோ அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நீரை முறையாகச் சேகரிப்பதும், பயன்படுத்துவதும், பராமரிப்பதும் கவனத்துடன் செயல்படுத்த வேண்டிய பணிகள் என்பதைப் புரிந்துகொண்டால் மட்டுமே நீர் விஷயத்தில் நமது கவலைகளைக் குறைக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT