Published : 03 Jan 2015 12:24 PM
Last Updated : 03 Jan 2015 12:24 PM
வருமானம், சேமிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவதா, தனி வீடாக வாங்குவதா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். ஏற்கெனவே அடுக்குமாடிக் குடியிருப்பில் சொந்தமாக ஒரு பிளாட் வைத்திருப்பவர்களும் பூர்வீகச் சொத்தாக வீடு உள்ளவர்களும் தற்போது காலிமனையை வாங்குவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.
பாரம்பரிய விவசாயத்துக்குப் பெருகிவரும் ஆதரவால் விவசாய நிலத்தை வாங்கி அங்குத் தகுந்த ஆட்களைக் கொண்டு விவசாயம் செய்வதற்கும்கூட சிலர் ஆர்வமாக இருக்கின்றனர். இன்னும் சிலபேர், முழுக்க முழுக்க எதிர்காலத்தில் வீடு கட்டும் எண்ணத்தோடும் பெரும்பாலானவர்கள் முதலீட்டை மட்டுமே கருத்தில் கொண்டும் மனை வாங்குவதற்கு விரும்புகின்றனர்.
இப்படி நிலம் வாங்கும்போது அந்தக் குறிப்பிட்ட நிலம் டிடிசிபி அப்ரூவலா சிஎம்டிஏ அப்ரூவலா என்பதில்தான் பலரின் கவனம் இருக்கும். நிலம் வாங்கும்போது குறைந்தபட்சம் 50, 60 ஆண்டுகளுக்கு வில்லங்கம் பார்த்து வாங்க வேண்டியது அவசியம். சில நிலத்தை வேறொருவருக்குக் குத்தகை கொடுத்திருப்பார்கள். அந்தக் குத்தகை காலத்துக்குள் அந்தக் குறிப்பிட்ட நிலம் விற்பனைக்கும் வரும்.
இதுபோன்ற சம்பவங்களில் நிலம் வாங்குவோர், குறிப்பிட்ட நிலம் இருக்கும் இடத்துக்கே நேரில் சென்று அந்த நிலம் சம்பந்தப்பட்டவருக்கு உரியதுதானா என்பதை அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்து அறியலாம். மேலும் அந்த நிலத்தின் தன்மையையும் அறிந்து கொள்வதற்கு இது வழியை ஏற்படுத்தும்.
தகுந்த சர்வேயரைக் கொண்டு நமக்கு விற்பனை செய்யப்படும் நிலத்தை அளந்துபார்க்கவேண்டும். நிலத்தின் நான்கு எல்லைகளுக்கு உரியவர்களின் நிலங்கள் முறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
பத்தடி தோண்டினால் இளநீர் மாதிரி தண்ணீர் நிச்சயம் என்ற வாக்குறுதியை நம்பி மனையை வாங்குவதைவிட, நிலம் இருக்கும் இடத்துக்கு நேரில் ஒரு விசிட் அடித்து அங்கு இருப்பவர்களிடமே நிலத்தடி நீர், கிணற்று நீர் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். நிலத்தின் மண்ணின் தன்மை, அது, பாறை பூமியா, வண்டல் பூமியா, களிமண் பூமியா என்பதை எல்லாம் தெரிந்துகொண்டு நிலத்தில் முதலீடு செய்வது அவசியம்.
நிலத்தடி நீரோட்டத்தை மனை இருக்கும் இடத்திலோ, அதைச் சார்ந்தவர்களிடமோ தீர விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு நிலத்துக்கும் ஏற்றாற்போல் மண்ணின் தன்மைக்கேற்ப அஸ்திவாரம் போடும் தன்மையும் மாறும். எனவே நீங்கள் வாங்கப் போகும் மனையைப் பார்வையிட கட்டிடங்களை வடிவமைக்கும் பொறியாளர்களையோ அல்லது இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த மேஸ்திரிகளையோ உடன் அழைத்துச் சென்று மனையைப் பார்வையிடலாம்.
அஸ்திவாரம் அமைப்பதில் பொறியாளர்களைவிடக் கட்டிட நிர்மாணத்தில் நேரடியாகத் தங்களின் பங்களிப்பைச் செலுத்தும் மேஸ்திரிகளின் அறிவு மேம்பட்டிருக்கும்.
நிலத்தின் தன்மைக்கேற்ப அஸ்திவாரத்தின் தன்மை மாறும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள்தான். இன்றைய நிலைமையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அடுத்து வரும் ஆண்டுகளில் அந்த மனையைச் சுற்றி என்னென்ன மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
உதாரணமாகத் தொழில் நகரங்கள் வருவதாக இருக்கிறது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல வரஇருக்கின்றன என்னும் சாத்தியங்கள், போக்குவரத்து மாற்றங்கள் இதைப் போன்ற பலவற்றையும் கருத்தில்கொண்டு அஸ்திவாரத்தின் அகலம், ஆழம் போன்றவற்றை முடிவு செய்யும் திறன் படைத்தவர்கள் மேஸ்திரிகள் மட்டுமே. மனையில் நமக்குப் பிடிபடாத பல விஷயங்கள் அவர்களுக்குப் பிடிபடும். அவர்களின் அனுபவ அறிவு தகுந்த மனையைத் தேர்ந்தெடுப்பதற்கு உங்களுக்கு உதவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT