Published : 06 Dec 2014 01:10 PM
Last Updated : 06 Dec 2014 01:10 PM
ஐ.டி. துறையினர் சிலர் “வர்க் அட் ஹோம் ஆப்ஷன் எடுத்திருக்கேன். அதனால நாளை முதல் வீட்டில் இருந்தபடியே ஆபீஸ் வேலையை பார்க்கணும்” என்று சொல்வதைப் பார்த்திருப்போம். ஐ டி துறையினர் மட்டுமல்லாமல் பலர் தங்கள் வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலை பார்ப்பதுண்டு.
ஆனால் முறைப்படுத்தப்பட்ட அலுவலகச் சூழலில் பணிபுரிவதற்கும் வீட்டையே அலுவலகமாகப் பாவித்து வேலை செய்வதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு அலுவலகத்தில் இருந்து கொண்டு வேலையைப் பார்க்கும் போது எல்லாரையும் போல நாமும் வேலையைச் செய்வது இயல்பான விஷயமாகி விடும். ஆனால் நம் வீட்டில் இருந்து கொண்டு அலுவலக வேலையை செய்வது என்பது கடினமானது. “என் வீடு, என் சவுகரியம் போல எப்படி வேண்டுமானாலும் உட்கார்ந்து கொண்டு, எந்த உடையையும் அணிந்தபடி, சாப்பிட்டுக் கொண்டேகூட வேலை செய்யலாம். கவனிப்பதற்கோ, கேட்பதற்கோ ஆள் கிடையாது” எனத் தோன்றும். ஆனால் முதலில் வேலையை செய்ய முடியுமா? என்பதுதான் கேள்வி.
அலுவலகத்தில் மிகவும் பொறுப்பாக வேலை பார்ப்பவர்கள்கூட வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலையை செய்யச் சொன்னால் சொதப்புவார்கள். அலுவலக வேலைக்கு ஏற்ப வீட்டில் சில மாற்றங்கள் செய்வதுதான் இதற்கு தீர்வு. உங்கள் வீட்டின் ஒரு பகுதியை சிறந்த வர்க் ஸ்பாட்டாக மாற்றலாம் வாங்க.
இடத்தை தேர்ந்தெடுங்கள்:
வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து லாப் டாப்பைத் திறந்தால், டிவி பார்க்கத் தோன்றும். படுக்கை அறையில் லேசாகப் படுக்கையில் சாய்ந்து ஆபீஸ் ஃபைலை புரட்டினால் அரை மணி நேரத்தில் தூக்கம் சொக்கும். சரி, வீட்டின் பால்கனியில் உட்காரலாம் என்றால் அக்கம்பக்கத்தார் குரல் கேட்கும், கவனம் சிதறும். இது போதாதென்று வீட்டில் குழந்தைகள் இருந்துவிட்டால் சொல்லவே வேண்டாம் எந்த வேலையும் ஓடாது.
முதலில் நீங்கள் அமைதியாக உட்கார்ந்து சவுகரியமாக வேலை செய்வதற்கு உகந்த இடத்தை தேர்ந்தெடுங்கள். யாரும் புழங்காத தனி அறையாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் அறையிலேயே சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் அவ்வளவுதான்.
வண்ணமும் எண்ணமும்
மனதை ஒருமுகப்படுத்தி வேலையில் ஈடுபட வண்ணங்களும் ஒளி அமைப்பும் பெரிதும் உதவும். உங்கள் வீட்டின் அலுவலகப் பகுதியைப் பிற அறைகளின் நிறத்திலிருந்து தனித்து காட்சியளிக்கச் செய்யுங்கள். நீங்கள் அமர்ந்து வேலை பார்க்கும்போது உங்கள் எதிரே இருக்கும் சுவரின் நிறம் வெண்ணிறத்தில் இருப்பது உகந்தது. கண் பார்வையை உறுத்தாத மின் விளக்குகள், அதே சமயம் பரவலான வெளிச்சம் தரும் விளக்குகள் மிகவும் அவசியம்.
தொங்கும் பட்டியல்
உங்கள் அலுவலக அறைக்குள் நுழையும்போதே கண் முன் பளிச்சென்று தெரியும்படி ஒரு வெள்ளை மார்க்கர் போர்டை சுவரில் மாட்டுங்கள். அதில் இன்றைய பணிகளை மார்கர் பேனாவில் பட்டியலிடுங்கள். உங்கள் லாப் டாப்பில் ஸ்டிக்கி நோட்ஸிலும் அதை பின்பற்றுங்கள்.
இந்த ஐடியாவும் வேலை செய்யவில்லை என்றால், ஒரு ஸ்டாப் கிளாக்கில் அலாரம் வைத்து வேலையைத் தொடங்குங்கள். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிட இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேஷனரி பொருள்கள்
பேனா, காகிதம், ஸ்டேப்ளர், செலோ டேப், பிரிண்டர் காட்ரிஜ் இங்க், வைட் மார்க்கர் போன்ற ஸ்டேஷனரி பொருள்கள் சாதாரணமான விஷயங்களாகத் தோன்றலாம். ஆனால் பல சமயங்களில் நம் வேலை தடைபட்டுப் போக இவற்றின் பற்றாக்குறை காரணமாகிவிடும். மாதத்திற்கு ஒரு முறை இவற்றைச் சரிபார்த்துப் பராமரித்து வந்தால் வேலை துரிதமாகும்.
நாற்காலி முக்கியம்
வீட்டில் இருக்கும் போது ஏதோ ஒரு நாற்காலியைப் பயன்படுத்திக் கொள்ளலாமே எதற்கு அலுவலகத்தில் இருப்பது போன்ற நாற்காலியைச் செலவு செய்து வாங்க வேண்டும் என நினைக்க வேண்டாம். பல மணி நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்து வேலை செய்வது உடலுக்குப் பல பாதகங்களை விளைவிக்கும். ஆகையால் முதுகுவலி ஏற்படுத்தாத வகையில் சரியான நாற்காலியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.
ஒரு டப்பா பெயிண்ட், புதிய ஸ்டேஷனரி பொருட்கள், நல்ல நாற்காலி, ஒரு விடுமுறை நாள், கொஞ்சம் உற்சாகம் அவ்வளவுதான் உங்கள் வீட்டிலேயே சின்ன அலுவலகம் ரெடி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT